2015/05/09

ஜபேஷ்



    சாதாரண நிகழ்வுகளை அதிசயங்கள் எனலாமெனில் ஒரு மாதமாக நிகழ்ந்து வருபவை நிச்சயம் அதிசயங்கள் தான். அதிசயத்துக்கும் அற்புதத்துக்கும் விபரீதத்துக்கும் இடையே எங்கோ பரிணமித்தவை. இவை, ஆட்கொண்ட சாதாரண மனங்களை உடனடியாக அசாதாரண பரவசங்களிலும் நம்பிக்கைகளிலும் தள்ளிவிடும் என்றாலும் கண்மூடி மதில்களில் பூனையாகத் திரியும் என்னையே கலங்க வைத்துவிட்டன என்பதும் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.

திருவையாறு வந்த ஆச்சரியம்... அடங்குமுன் எனக்குக் கிடைத்த சீதாராமலட்சுமண விக்கிரகங்கள் அசலில் தியாகய்யர் தொலைத்தவை என்ற சாத்திய மேலீட்டின் அதிர்ச்சி... அடங்குமுன் தியாகய்யரையே சந்தித்தப் பேரதிர்ச்சி... அடங்குமுன் நிகழ்ந்த விபரீதம்... எல்லாம் யாரைத்தான் அசைக்காது?

    வேலைக்காக ஐம்பது வருடங்களுக்கு மேல் உலகமெல்லாம் சுற்றிவிட்டு.. இந்தியாவின் பூரி, ராமேஸ்வரம், கன்யாகுமரி, குருவாயூர்... அல்லது இலங்கையின் மட்டக்களப்பு பகுதி.. என்று ஏதாவது ஒரு மூலையில் ஒதுங்க வேண்டும் என்று அவ்வப்போது எண்ணிக் கொண்டிருந்த நானும் என் மனைவி ஜெயாவும் சில வருடங்களுக்கு முன் ஒரு நண்பரின் அறுபதாம் திருமணத்திற்கு இந்தியா வந்து சுற்றிய பரவசத்தில், என் எழுபதாவது பிறந்த நாளில் ஓய்வுக்காக இந்தியா வந்துவிடுவது என்று முடிவு செய்தோம்.

போன கோடையில் ஓய்விடம் தேடி இந்தியாவின் பல இடங்களைச் சுற்றும் சாக்கில் கும்பகோணம் வந்திருந்தோம். காலையில் ராமஸ்வாமி கோவிலைச் சுற்றிவிட்டுக் களைப்பாறலாமென்று வெளியே வந்து ஒரு காபிக்கடையில் ஒதுங்கினோம். கோவிலைப் பார்த்தபடி காபி சாப்பிட்டிக் கொண்டிருந்த என்னை யாரோ லேசாகப் பின் மண்டையில் தட்டினாற் போலிருந்தது. திரும்பிப் பார்த்தேன். காபி கொண்டு வைத்தவர் சற்றுத் தள்ளி இன்னொருவரைக் கவனித்துக் கொண்டிருந்தார். யாராக இருக்க முடியும் என்று வியந்து தலையைத் தடவிக்கொண்டே குடித்து முடித்தேன். திடீரென்று. "பக்கத்துல தானே இருக்கு திருவையாறு... போய் வரலாமே ஜெயா?" என்றேன். என் கேள்வி எனக்கே ஆச்சரியமாக இருந்தது. கேட்ட கணத்துக்கு முன், ஏன் பத்து நாள் வார மாதங்களோ அதற்கு முன் வரையிலோ இந்த எண்ணம் எனக்குத் தோன்றியதேயில்லை.

எனக்கு தியாகராஜர் க்ருதிகள் மிகவும் பிடிக்கும். என் கர்நாடக இசையறிவு குறுகியது என்றாலும் தியாகய்யரின் பாடல்களில் நூற்றுக்கு மேல் எனக்கு நன்றாகத் தெரியும். அவர் பாடல்களைச் சிறு பிள்ளைகளுக்கான நர்சரி ரைம்கள் போலவும் இறையுணர்வுக் கவிதைகளாகவும் ப்ரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துப் புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறேன். வியன்னாவில் இருந்த போது தியாகய்யரின் நௌகா சரிதத்தை இயக்கி அரங்கேற்றி ஒரு வாரம் தொடர்ந்து நடத்தியிருக்கிறேன். ஊழிக்காற்றில் நீரில் மூழ்கத் தத்தளிக்கும் ஓடக் காட்சியை விற்பன்னர்கள் துணையுடன் தத்ரூபமாகச் சித்தரித்திருந்தேன். க்ருஷ்ணனை முழுமையாக நம்பிய கோபிகைகள் தங்கள் உடைகளைக் களைந்து ஓடத்து ஓட்டைகளை அடைக்கும் காட்சியின் தத்துவத்தைப் புரிந்துகொண்ட வியன்னா மேயரின் மனைவி, கண்ணீர் சிந்த என் கைகளைப் பிடித்துக்கொண்டு ஒரு தங்கக்கட்டியை எனக்குப் பரிசளித்ததை மறக்கவே முடியாது. பின்னாளில் பால்டிமோர், க்லீவ்லேந்ட், வேன்கூவர், பெர்லின், ம்யூனிக், ஆம்ஸ்டர்டேம் என்று பல இடங்களில் தியாகராஜ ஆராதனை முன்னின்று நடத்தியிருக்கிறேன். தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன். அந்த நாளில் பெரிய வித்வான்கள் திருவையாறு வந்து நேரில் கலந்து கொண்ட ஆராதனைகளைப் பதிவு செய்து வைத்திருக்கிறேன். நாகய்யாவின் தியாகைய்யர் திரைப்படத்தை நூறு தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன். தியாகராஜர் க்ருதிகளை அவ்வப்போது பாடுவதும் முணுப்பதும் உண்டு. ஆனால் திருவையாறு ஒருமுறை கூடப் போனது கிடையாது.

"என்னங்க திடீர்னு? ராத்திரி ட்ரெயின் பிடிச்சு மதுரை போகணுமே?"

ஜெயாவின் விருப்பங்களும் என் விருப்பங்களும் அனேகமாக எதிலுமே சந்தித்ததில்லை. எங்களுக்குக்குள் பொதுவான விருப்பமோ செயலோ ஏதாவது உண்டாவென அடிக்கடி நாங்கள் கேட்டுக்கொண்டாலும் நாற்பத்து மூன்று வருடங்கள் தம்பதிகளாக இருந்திருக்கிறோம். எங்கள் பிள்ளைகளை நேசிப்பதை விட எங்களிடையே பொதுவாக வேறென்ன வேண்டியிருக்கிறது என்ற சமாதானத்தில் ஒருவரையொருவர் அனுசரித்தோ நேசித்தோ வாழ்ந்து வருகிறோம். "திருவையாறு போனா... ராத்திரி ட்ரெயின் மிஸ்ஸாயிடும்" என்று அவள் சொன்னது தொலைவாகக் கேட்டது.

"என்னவோ தெரியலே. திருவையாறு போகணும்னு மனசு சொல்லுது"

"மனசை சும்மா இருக்கச் சொல்லுங்க"

"ரெண்டு நாள் கழிச்சு மதுரை போலாம்மா" என்று நான் அவளைப் பார்த்ததும் உடனே இறங்கினாள். "ஒண்ணு செய்வோம். இப்ப மணி பதினொண்ணு கூட ஆகலே. திருவையாறு போய்ட்டு வந்துறலாம். பக்கத்துல தானே? சீக்கிரம் வந்துட்டா இன்னி ராத்ரி ட்ரெயின் தவறவிட வேண்டாம்" என்றாள்.

மாத வாடகைக்குச் சாரதியுடன் எடுத்திருந்த கரோலா காரில் திருவையாறு கிளம்பினோம். ஜெயா அதற்குள் கும்பகோணத்தில் அவள் தங்கையிடம் பேசி திருவையாறில் இருக்கும் பெரியப்பா மகன் உறவு வழி என்று யாரையோ தேடிப்பிடித்தும் விட்டாள். அசகாய ஜெயா. உலகாயத விஷயங்களில் ஜெயாவின் சாமர்த்தியம் யாருக்குமே வராது.

திருவையாறு உறவினர் வீட்டில் பேசிக்கொண்டிருந்து பின் காபி டிபன் முடித்துக் கோவிலுக்கு வந்தோம். நாங்கள் இறங்கிக்கொண்டதும் "நான் ஓடிப்போய்ட்டு வந்துடறேன் அத்தே" என்று உறவினர் சொல்ல, ஜெயா "மாலி..இருப்பா.. வண்டிலயே போய்ட்டு வந்துடு" என்று அனுமதித்ததும் மிகப் பெருமையுடன் காரின் பின்னிருக்கையில் உட்கார்ந்து "நடுக்கடைக்குப் போப்பா" என்றார். கார் மறைந்ததும் நாங்கள் இருவர் மட்டுமே அந்த வட்டாரத்தில். கோவிலும் சுற்றமும் விசாலமாகத் தோன்றியது. தியாகய்யர் சமாதியைக் கடந்த வெளியில் ஒரு பசுமாடு தோராயமாக அசை போட்டுக்கொண்டிருந்தது. கோவிலைச் சுற்றிவிட்டு சமாதியின் எதிரே ஒரு வேகத்தில் உட்கார்ந்து வித்வான் போல் பஞ்சரத்தினங்களைப் பாடத் தொடங்கினேன்.

நாட்டையில் க்ருதி முடித்ததும் "தியாகராஜர் பாட்டா இது? தெலுங்கு மாதிரியே இல்லையே?" என்றாள்.

"அது சம்ஸ்க்ருதம். உலகத்து சந்தோஷங்கள் அத்தனைக்கும் ஆதாரமானவன்னு ராமனைப் பத்திப் பாடினார் தியாகய்யர்."

"அப்போ உலகத்து அத்தனை துக்கங்களுக்கு யார் ஆதாரம்?.. சரி சரி பாடுங்க"

அடுத்தப் பாடலை முடித்து ஆரபியில் லேசாக ஒரு ஸ்வரம் பிடித்தேன். மூச்சு சீராக்க நிறுத்தினேன். "இப்ப பாடினிங்களே அதுவும் தியாகராஜர் பாட்டா? சம்ஸ்க்ருதம் மாதிரி இல்லையே?" என்றாள்.

"தெலுங்கு. குறிக்கோள் இல்லாத வாழ்வின் விரயம், தெளிவாகப் பேசவும் கேட்கவும் அறியவும் இயலாத மூடத்தனம், உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசம் புரியாதக் கண்மூடித்தனம், சுயபெருமை பேசும் பகட்டு இந்தமாதிரி பாவங்களை விடாமல் செய்து வரும் என்னைக் காப்பாத்து ராமானு.. பாடினார் தியாகய்யர்."

"பொய் சூது கொலை கொள்ளை இதெல்லாம் பாவமில்லையா? தனக்காக ஒரு குறிக்கோள் லட்சியம் இல்லாம அடுத்தவங்க சொல்றதுக்கு தலையாட்டி, தன்னையே நம்பி வந்தப் புதுப்பெண்டாட்டியை அம்போனு விட்டுட்டு காட்டுக்குப் போகத் துடிச்சவர் தானே ராமர்? உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசம் தெரியாம காட்டுல பெண்டாட்டியை விட்டு மானைப் பிடிக்க... சரி சரி பாடுங்க. எங்கே இவனைக் காணோம்?"

சாதிஞ்சனே பாடி முடித்தேன். அதற்கு மேல் ஜெயாவுக்குப் பொறுமையில்லை. "எத்தனை பாட்டுங்க? இன்னும் முடியலியா?" என்றாள்.

எழுந்தேன். எஞ்சியதை மனதுள் பாடத் தீர்மானித்தேன். வெயில் தணிந்திருந்ததால் காவிரியை ஒட்டி நடக்கத் தொடங்கினோம். ஜெயாவுக்கும் இது பிடித்திருந்தது. ஒரு கட்டத்தில் மெள்ள என்னை இடித்தபடி என் கைகளைப் பிடித்துக் கொண்டு நடந்தாள். தெருச்சுற்றில் எங்கள் கார் வருவதைப் பார்த்து, கோவிலுக்குத் திரும்பினோம். காரைத் தொடர்ந்து வந்த ஸ்கூட்டரில் ஒருவர் இறங்கினார். காரிலிருந்து குதித்திறங்கிய மாலி ஸ்கூட்டர்காரரை இழுக்காத குறையாக அழைத்து எங்களை நோக்கி வந்தார். "மன்ன்ச்ச்ருங்கோ அத்திம்பேர்.. ரொம்ப நாழியாய்டுத்தா அத்தே?" என்றார்.

ஜெயாவின் உறவினர் மாலிக்கு ஐம்பது வயதிருக்கும். இத்தனை வருடங்களாக முன்பின் அறியாத எங்களை அத்தை அத்திம்பேர் என்று உறவு முறை வைத்து அழைத்தது விசித்திரமாகவும் வெகுளியாகவும் இருந்தது. எனினும் 'மாம் டேட்' என்று மட்டுமே கேட்டுப் பழகிய எங்கள் இருவருக்குமே இது பிடித்திருந்தது..

"விவரமெல்லாம் கேட்டியா?" என்றாள் ஜெயா.

"சாரிக்கிறதா? ஆளையே கூட்டிண்டு வந்துட்டேன் ஒரு நடை போய் பாத்துட்டு வந்துடுங்கோ. பிடிச்சிருந்தா கையோட முடிச்சுடலாம் அத்தே"

காரில் நாங்களும் எங்களைத் தொடர்ந்து ஸ்கூட்டர் ஆசாமியும் கிளம்பினோம். முன்னிருக்கையில் இருந்த மாலி சுத்தமாக முன்னூற்றறுபது டிகிரி திரும்பி எங்களைப் பார்த்துப் பேசிக்கொண்டே வந்தார். "இது பெரிய இடம் அத்தே. நடுக்கடைனாலும் காவேரிப் பாலம் தாண்டினதுமே நதிக்கரையோரமா அரை ஏக்கரால வீடும் தோட்டமும். ரொம்ப வருஷமா ஆளில்லாம இருக்கறாதால தூசி தும்பட்டை இருக்கும். எல்லாம் சரி பண்ணிடலாம். அந்தக்காலத்து செல்வாக்கான அக்கிரகார பிராமணா வீடு. நானூறு வருஷமா இதே இடத்துல இருந்த பாரம்பரியமான குடும்பத்து வீடு. மராமத்து பண்ணிப் பண்ணி முழுக்க முழுக்க தேக்குல இழைச்சிருக்கா. சரபோஜி மகாராஜால்லாம் வந்திருக்காளாம். அப்போ பத்து ஏக்கரால இருந்த வீடு இப்ப அரை ஏக்கராவுக்கு வந்திருக்கு. மத்த தலைமுறைலாம் வரவர முப்பது வருஷத்துக்கு முன்னாலயோ என்னவோ இவா கிட்டே காசுக்கு வித்துட்டு மெட்ராஸ் பக்கம் போயாச்சு. வீட்டுல ஆளில்லே. வீடும் தோப்பும் ஆத்துக்கு அந்தப்பக்கம்னாலும் இந்தப்பக்கம் ஒரு மண்டபமும் இருக்கு. அந்தக்காலத்துல கோவிலுக்கு வரவா தங்கறதுக்காக கட்டின மடமாம். அதுலயும் ஒரு ரூம், மித்தம், சமையக்கட்டு, ஔபாசன இடம்னு எல்லாம் அம்சமா கட்டியிருக்கா. இதுவும் வீட்டோட சேத்து வரது. கொஞ்சம் புதரா இருக்கும். வெட்டி சரி பண்ணிடலாம். எதுக்குச் சொல்றேன்னா வீட்லந்து பாத்தேள்னா மடம், மடத்துலந்து பாத்தா வீடு. நடுவுல காவேரி. படித்துறையோட கட்டியிருக்கா பொழக்கடைல. படித்துறை மகிழமரம் நூத்துக்கணக்கான வருஷமா இருக்கு. சாயந்தர வேளைல ரம்யமா இருக்கும். காவிரில தண்ணி வந்துடுத்துனு வச்சுங்கோ, இந்த்ரலோகம் தான். தென் கயிலைனா இது வாஸ்தவமான சமாசாரம். வீட்டைக் கொஞ்சம் சுத்தம் பண்ணி மொட்டை மாடியில கூரைப்பந்தல் போட்டுறுங்கோ. ரெண்டு ஈஸி சேர் வாங்கிப் போட்டுறுங்கோ. ஒரு மோடாவும் போட்டேள்னா ஏகாந்தமா உக்காந்த வாக்குல அய்யாறப்ப தரிசனம். நானும் அப்பப்போ வந்து உங்க தயவால பஞ்சநாத கோபுர தரிசனப் புண்ணியம் கட்டிக்கறேன். எல்லாம் சேத்து எண்பத்தஞ்சு சொல்றான். முப்பது ப்ளாக்ல கொடுத்துடணும்"

"உனக்கு எத்தனை கமிஷன்?" என்றேன். ஜெயா என்னை இடித்தாள்.

"அதனால் என்ன அத்தே? வெளிப்படையா கேக்கறார். சொல்லிடறேன். அத்திம்பேர், எனக்கு ஒயிட்ல கொடுத்தா அஞ்சு பர்செண்ட், ப்ளாக்குல கொடுத்தா எட்டு பர்சண்ட் தரதா சொல்லியிருக்கான். தந்தாத்தான் தெரியும். நீங்க ப்ளாக்ல ஜாஸ்தி கொடுத்தா நேக்கும் ஜாஸ்தி கிடைக்கும். அதெல்லாம் விடுங்கோ. மொதல்ல இடத்தைப் பாருங்கோ"

"ஏன் இத்தனை நாள் யாரும் வாங்கலியா?" என்றாள் ஜெயா.

"தெரியலே. ரொம்ப நாளா கேட்டுண்டிருக்கா. பாருங்கோ இங்கருந்து எல்லாரும் போறாளே தவிர ஊர்ப்பக்கம் திரும்பி வரவா கம்மியாயிருந்துது. இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா திரும்பி வரவா கவனம் இப்படி விழுந்துண்டிருக்கு. அதுல கூட தஞ்சாவூர் சுவாமிமலை திருச்சினு முதியோர் இல்லத்துக்குத்தான் நெறய பேர் போறா. தனியா வீடு வாங்கி வயசான காலத்துல சிரமம் தானே?"

"எங்களுக்கு அப்படியென்ன வயசாயிடுத்துனு நினைக்கறே?" என்றேன். ஜெயாவை அணைத்துக் கொண்டதைப் பார்த்துக் கூச்சத்தோடு நெளிந்தார் உறவினர்.

"அப்படி சொல்லலே அத்திம்பேர். எந்தக் காலத்துலயும் வீட்டை வச்சு பராமரிக்கறது சிரமம் தான். அதை விடுங்கோ. இந்த வீடு பாரம்பரியமா பிராமணாள் இருந்து வந்த ராஜலட்சண வீடு. அத்தை கேட்டாப்புல இந்த வீட்டை யாரும் வாங்கறா மாதிரித் தெரியலே. இரண்டு வருஷம் போனா இதைக் கம்பெனிக்காரா யாராவது வாங்கி இடிச்சு கலர் கலரா பொட்டி வீடு கட்டுவா. இந்த வீட்டோட வேர் அடையாளம் தெரியாமப் போயிடும். இதுக்குப் பின்னால இருக்குற மகாத்மியம் மண்ணோட போயிடும். ம்ம்ம்னா போறும், கம்பெனிக்காரா தயாரா இருக்கா. அதுக்குப் பதிலா அந்தப் பாரம்பரியத்தை இன்னும் இருவது வருஷமோ அம்பது வருஷமோ காப்பாத்தலாம்னா.. நம்மளால முடியாட்டாலும் முடியறவாள் கிட்டே மனு போடலாம் இல்லையா? ராமர் பாலம் கட்ட சின்னக் கூழாங்கல் போட்டுச் சகாயம் பண்ற அணில் மாதிரி தான் என்னோட இந்த எண்ணம்லாம். பிராமண வீடு பிராமணாள் கிட்டே போனா நல்லது தானே?"

எனக்கு இலேசாக எரிச்சல் வந்தாலும் அடக்கிக் கொண்டேன். "நாங்கள்ளாம் பிராமணாளே இல்லை தெரியுமோ? கடல் கடந்தாச்சு. பூணல் கிடையாது. வேதம் படிக்கவேயில்லே. சந்தியாவந்தனம் பண்றது கிடையாது. அபிவாதயே கூட மறந்து போச்சு. சாராயம் குடிச்சாச்சு. மாம்ஸம் சாப்டாச்சு. ஈஸ்வரோ ரக்ஷதுங்க்றதுக்கே அர்த்தம் இருக்கானு கேட்டுண்டிருக்கோம். இவளைப் பாரு. பாதி நாள் கவுன் போட்டுக்கறா. ஒரு வ்ரதம் புனஸ்காரம் எதுவும் கிடையாது. எங்கூட அப்பப்போ மெர்லோ சாப்பிடுவா. உன்னையே பாரு.. கமிஷனுக்காக அதுவும் ப்ளாக்ல குடுத்தா உசிதம்னு சொல்லிண்டிருக்கே இல்லையா? யாரு பிராமணா இதுல?"

"ஸ்பீக் பார் யுவர்செல்ப்". ஜெயாவின் எதிர்பாரா சுருக் ஆங்கிலம் என்னைத் தைக்க அமைதியானேன்.

"பரவாயில்லே அத்திம்பேர். ஆத்து மனுஷா தானே? தாராளமா பேசுங்கோ. அதுவும் பெரியவா. உங்களுக்குத் தெரியாததா? பிராமணா இல்லே பக்தி இல்லே பரமேஸ்வரனே இல்லேனு கூட பேசுங்கோ. ஒண்ணு கவனிச்சேளா? இல்லைங்கறது தான் இருக்குறதோட தத்துவம். இருக்குங்கறது தான் இல்லைங்கறதோட தத்துவம். இப்போ ஐயாறப்பர் கோவில்ல பாத்தேளே.. ஆதி சங்கரர் கட்டின ஹோம குண்டம்னு சொன்னால்லியா? ஆதி சங்கரர் இந்த ஹோம குண்டத்தை கட்டினாரா கட்டலியாங்கறது வேறே விஷயம். ஆதி சங்கரர் கட்டின ஹோமகுண்டம் தான் இப்போ இருக்குங்கறதும் தெரியாது. இல்லைங்கறதும் தெரியாது. ஆனா அதை ஆதி சங்கரர் ஹோம குண்டமாத்தான் பாக்குறோம். பஞ்சபூதங்கள்ள அசல்லே எதுவுமே நம்ம கண்ணுல படுற ரூபத்துல இல்லே. ஆனா கண்ணுல படற ரூபத்தை வச்சு இருக்குன்னும் இதான் இந்த்ரியம் பூதம்னும் சொல்றோம். கண்ணுக்குத் தெரியாத அக்னினு தான் ருத்ரத்லயே சொல்லியிருக்கு. ஜலம்னும் எதுவும் கிடையாது. இப்ப எல்லாம் கண்டுபிடிச்சு சொல்றா. ரெண்டு வாயு சேந்தாத்தான் ஜலம்னு. இதை அப்பவே உபனிஷத்ல சொல்லியிருக்கா. இருக்கறது எதுவுமே இல்லை. இல்லாதது அத்தனையும் இருக்கு. அஜாதசத்ரு-பாலாகி வியாக்யானம் படிச்சிருப்பேள். உங்களுக்குத் தெரியாம இருக்குமா? ஏதோ என்னைக் கிண்டறேள். நெஜமா சொல்றேன் அத்திம்பேர்.. நீங்க பிராமணா இல்லை இல்லைனு சொல்றதெல்லாம் நேக்கு இருக்கு இருக்குனு தான் விழறது. இந்தாப்பா.. சித்த மெதுவா போப்பா.. கல்லுங்குழியுமா இருக்கு பாரு.. அத்திம்பேர்.. உங்களுக்கு இந்த வீடு வாச்சு நேரம் கிடைக்கறப்ப பேசுவோம். அத்வைத விசாரம் நேக்கு ரொம்ப பிடிக்கும். உங்களுக்கும் பிடிக்கும்னு தோண்றது. விடுங்கோ. இருக்கு இல்லை ரெண்டுத்தையும் ஏதோ ஒண்ணு கட்டியிருக்குன்னாவது ஒத்துப்பேளா? இருக்குனு சொன்னா உடனே இல்லைனு சொல்ல வைக்கறது அந்தக் கட்டுதான். மதுரைக்கு ட்ரெயின் பத்திப் பேசிண்டு காபி சாப்பிண்டிருந்தவாளை தலைல தட்டி இங்க கூட்டிண்டு வந்தது என்னனு நினைக்கறேள்? ஏன் சொல்றேன்னா.. பிராமணாள் இல்லேனு நீங்க சொன்னாலும் உங்க பிராணன்ல கலந்திருக்குற பிராமண அணு அது நீங்க விரட்டினா ஓடிடுமோ? ஓடாது. அதைத்தான் சொல்றேன். சொன்னது பிடிக்கலேனா என்னை மன்னிக்கணும். வீடுகள்ளயும் ஒரு ப்ராணன், ஒரு ஆன்மா இருக்கு அத்திம்பேர். க்ருஹப்ரவேசம்னு பண்றது மனுஷாளுக்கு மட்டுமா? அந்த வீட்டையும், வீட்டு மனுஷாளையும் கூடவே இருந்து ரக்ஷிக்கிற அதிதேவதைகள் வசுக்களும் ப்ரவேசம் பண்ணட்டும்னு தானே? இந்த வீடு எத்தனை ஹோமங்கள் பார்த்திருக்கும் யோசியுங்கோ. வீட்டுக்கு ஆன்மா உண்டு. நான் அதை நன்னா உணர்ந்திருக்கேன். மரபணுனா மனுஷாளோ இல்லை வீடோ அது ஒட்டிண்டே தான் வரும். நான் சொல்றது தப்பா இருந்தா மறுபடி மன்னிக்கணும்"

"சேசே! அதெல்லாம் ஒண்ணும் இல்லேப்பா. சுவாரசியமா இருக்கு நீ சொல்றது"

அதற்குள் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது. தெருவோரமாக வண்டியை நிறுத்திக் கொஞ்சம் நடக்க வேண்டியிருந்தது. காவிரிக்கரை நோக்கிக் கீழிறங்கிய ஒற்றையடிப்பாதை. செப்பனிட வேண்டும் என்று தோன்றியதை நினைத்துச் சிரித்துக் கொண்டேன். இது என்ன என் சொத்தா? மரத்தால் செய்த வெளிக்கதவை கீல் முனகத் திறந்து உள்ளே போனோம். மரங்களின் அடர்த்தியில் சரியாகத் தெரியாத கட்டிடம் உள்ளே நுழைந்ததும் முகத்தில் அடிப்பது போல் தெளிவாகத் தெரிந்தது. பிரம்மாண்டம்! கட்டிடத்தின் அளவு பெரிதாக இல்லாவிட்டாலும், நேர்த்தி பிரம்மாண்டம் என்று சொல்ல வைத்தது. நாலைந்து பேர் அவசரமாகச் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

"நீங்க வரீங்கனு கொஞ்சம் க்லீன் செய்யச் சொன்னேங்க.. பாத்து வாங்க" என்றார் ஸ்கூட்டர்காரர்.

ஏறக்குறைய அரை மணி போல் சுற்றிப் பார்த்தோம். தேக்குத் தூண்கள், கதவுகள், அலமாரிகள் என்று இழைத்துக் கட்டியிருந்த வீடு. வாசலில் திண்ணை. உள்ளே அந்தக்கால அக்கிரகார வீட்டின் அமைப்பு. பாசி படிந்த முற்றம். சுற்றி அளவான உள்ளறைகள். சமையலறை. பின் கட்டில் தொழுவம். தொடர்ந்து பூச்செடிகள், மரங்கள். மா, எலுமிச்சை, கொய்யா, நார்த்தம் என்று வகைக்கு நாலைந்து மரங்களாவது இருந்தன. வீட்டின் முன்னாலும் பின்னாலும் இரண்டு பவழமல்லி மரங்கள். பின்னால் படித்துறை ஓரமாக ஒரு பெரிய வேப்ப மரம். இன்னொரு பெரிய மரம் என்னவென்று தெரியவில்லை. நிறைய புதர்கள். படித்துறை அழுக்காகவும் குப்பையாகவும் இருந்தது. இருந்தாலும் கொஞ்சமாக ஓடிய காவிரி பார்க்க அழகாகவே இருந்தது. உறவினர் சொன்னது போல் இங்கிருந்து இடையூறில்லாமல் கோவில் நன்றாகத் தெரிந்தது. ஜெயா கொஞ்சம் தடுமாறி நடந்து வந்தாள். இந்த வீடு அவளுக்கு ஒத்துவராது என்று நினைத்துக் கொண்டே நானும் உடன் சென்றேன். மறுபடி வீட்டுக்குள் திரும்பும் பொழுது என்னை யாரோ அழைப்பது போல் தோன்றத் திரும்பினேன். படித்துறையிலிருந்து வேப்ப மரத்துக்கு யாரோ வேகமாக ஓடுவது போல் தோன்ற, கொஞ்சம் நின்று கவனித்தேன். எதுவும் இல்லை. இந்த வீட்டுக்கு ஒரு குணச்சித்திரம் இருந்தாலும் மராமத்து அதிகம் தேவைப்படும் என்ற நினைப்போடு வீட்டுக்குள் சென்றேன்.

"பிடிச்சிருக்கா சார்?" என்றார் ஸ்கூட்டர்காரர்.

"எங்க ரெண்டு பேத்துக்கு இது ரொம்பப் பெரிசு.." என்று தொடங்கிய என்னை அடக்கினாள் ஜெயா. "ஐ லைக் இட்" என்றாள்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஜெயா? சாப்பிட்ட தட்டை எடுத்து கிச்சன் டிஷ்வாஷரில் எறிய சோம்பல்படும் என் ஜெயா? அத்தனை வசதிகளும் தேவை என்று தினம் என்னிடம் வற்புறுத்திய என் ஜெயா? கொஞ்சம் அவளைத் தனியாக இழுத்து, "நிஜமாகவா சொல்றே?" என்றேன்.

"ஆமாம். என்னவோ தெரியலே. படித்துறைல இருந்து வீட்டைப் பாத்தப்போ இது என்னோட இடம்னு தோணிப் போச்சு"

எனக்கும் அந்த எண்ணம் இருந்ததை ஒப்புக்கொண்டேன். இந்த வீட்டின் ஏதோ ஒரு வசீகரம் எங்களைக் கட்டியது புரிந்தது. ஜெயாவின் உறவினர் சொன்னது போல் ஏதாவது ஆன்மா கீன்மாவாக இருக்கலாம்.

"ஊருக்குப் போய் கொஞ்சம் யோசிக்கலாமா ஜெயா?"

"உங்களுக்கு வேணும்னா யோசியுங்க. எனக்குப் பிடிச்சிருக்கு. இதுக்கு மேலே இடம் தேட வேண்டாம்னு தோணுது. ஆள் வச்சு இதையெல்லாம் க்லீன் பண்ணிடலாம். இந்த டிசைன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. புதுசாக்கிடலாம். கொஞ்சம் நல்லா நெகோஷியேட் பண்ணி வாங்கிடலாம். என்ன சொல்றீங்க?"

ஸ்கூட்டர்காரரிடம், "பிடிச்சிருக்குப்பா" என்றேன்.

"சார். எண்பத்தஞ்சு போகுது சார். முப்பந்தஞ்சு கேஷா கொடுத்துருங்க. ஐம்பதுக்கு பத்திரம் போட்டுறலாம்" என்றார் ஸ்கூட்டர்காரர்.

"அதெல்லாம் என்னால் முடியாதுப்பா. ரொம்ப அதிகம். மொத்தம் அறுபதுக்குள்ள வரதா இருந்தா சொல்லு. அதும் எல்லாம் ஒயிட் தான்" என்றேன்.

"நடக்கவே நடக்காது சார். தொண்ணூறுக்கு ஆள் இருக்காங்க சார். ஆனா வீட்டை இடிச்சு கைல நாப்பதும் கட்டி முடிச்சதும் ரெண்டு ப்ளாட்டும் கொடுப்பாங்கன்றதுனால வேணாம்னு பார்க்கறேன்"

ஜெயா என்னைத் தனியாக அழைத்துப் பேசிவிட்டுத் திரும்பினாள். "இதோ பாருப்பா. அம்பத்தஞ்சுக்கு மேலே ஒரு பைசா தரமாட்டோம். கேஷா கொடுத்துடறோம். பத்திரம் ஒழுங்கா இருக்கணும். எங்க சார்டர்டு அகவுன்டன்ட் வந்து பாத்து எல்லாம் செய்வாரு. வீடு கை மாறினதும் இதைச் சுத்தம் பண்ணி, மராமத்து வேலைங்களுக்கு காண்டிராக்டா கேஷ் கொடுத்துடறேன். அதையும் நீங்க கவனிச்சு எல்லாத்தையும் என் இஷ்டத்துக்குச் செஞ்சு தரணும்"

"மன்னிக்கணும்மா. தொண்ணூறு எங்கே அம்பத்தஞ்சு எங்கே? வரேம்மா" என்று கிளம்பினார் ஸ்கூட்டர்காரர்.

உறவினரிடம் சொல்லிக்கொண்டு நாங்களும் கிளம்பினோம். ஒரு மணி நேரம் போல் பயணம் செய்திருப்போம். மாலி அழைத்தார். "அத்திம்பேர். அந்தாளு அறுபத்தஞ்சுக்கு முடிச்சுடலாங்கறான். எல்லாத்தையும் சுத்தம் பண்ணியும் கொடுத்துடறதா சொல்றான். உடனே வாங்கோ".

    ஆறு மாதங்களுக்குப் பிறகுக் குடியேறினோம். ஜெயா சாகசம் செய்திருந்தாள். வீட்டின் வேர் அடையாளம் தொலையாமல் வீட்டை மாற்றியிருந்தாள். காம்பவுன்ட் சுவர், முன்பக்கமும் பின்பக்கமும் இரும்பு கேட், வீட்டுக்குள் ஏசி, வாஷர், டிரையர், டிஷ்வாஷர், டிவி, குளியல் தொட்டி என்று வசதிகள், மொட்டை மாடி முழுதும் சிமென்ட் குழாய் வைத்து மேலே பந்தல், சோலார் பேனல் வைத்த ஜெனரேட்டர், வீட்டைச் சுற்றி சிவப்புக்கல் தரை, பின் கட்டில் படித்துறை வரையில் நடந்து போக வசதியாகத் தரை, இரண்டு பக்கமும் சிறு பூச்செடிகள், படித்துறை ஓரமாக ஒரு பார்பக்யூ அமைப்பு, குளிர்காய ஒரு தீத்தொட்டி, சுற்றிலும் இரும்பு நாற்காலிகள் என்று முழுமையாகச் செப்பன் செய்திருந்தாள். ஒரு காலத்தில் நாங்கள் ஸ்யூரிக்கில் இருந்த வீட்டை நினைவில் வைத்து அமைத்திருந்தாள். பாலம் தாண்டிய மண்டபத்தை சுத்தமாக மாற்றியிருந்தாள். உள்ளே இருந்த அறையமைப்புகளை இடித்து பாத்ரூமுடன் கூடிய ஒரு அறை, பெரிய லைப்ரெரி என்று ஒரு சம்மர் ஹவுஸ் பாணியில் மாற்றியிருந்தாள். மினசோடாவில் இருந்தபோது டுலுத்தில் எங்களுக்கு இப்படி ஒரு கோடைவீடு இருந்தது. எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கட்டியிருந்த ஜெயாவைப் பாராட்டினேன்.

எங்கள் இருவரின் வங்கிக்கணக்குகள், வீடுகள், பங்குகள் எல்லாவற்றையும் விற்றுக் காசாக்கிப் பாதியை அமெரிக்க சிடி வங்கியிலும் மீதியை கும்பகோணம் சிடி யூனியன் வங்கியிலும் சேமித்தோம். மாத வட்டி எங்கள் இருவருக்குப் போதுமானதாக இருக்க, ஓய்வு நாட்களை சுவாரசிய எதிர்பார்ப்புகளுடன் கழிக்கத் தொடங்கினோம்.

காலையில் வீட்டைச் சுற்றியோ, காவிரிக் கரையோரமாகவோ நடை. பிறகு சிற்றுண்டி. பாலத்தில் நடந்து லைப்ரெரிக்கு போய் கொஞ்சம் வாசிப்பு. அங்கேயே குட்டித்தூக்கம். கொஞ்சம் இசை. வீட்டுக்கு நடந்து வந்து ஐயர் சமையல்கார மாமி செய்த சாப்பாடு. மாலையில் கோவில் நதிக்கரை நடை. தினம் தவறாமல் தியாகராஜ க்ருதி. எனக்கு நன்றாகவே பாட வரத்தொடங்கியது. இடையே ஜெயா உள்ளூர் அக்கம்பக்கப் புள்ளிகளை அழைத்துக் கொடுத்த விருந்து... என்று ஐந்து வாரங்கள் போனதே தெரியவில்லை.

ஒரு வெள்ளிக்கிழமை மாலை. மழை வருவது போல் இருட்டிக்கொண்டு ஒன்றிரண்டு தூறல் விழத்தொடங்க சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிட்டோம். வெள்ளிக்கிழமை இரவுச் சாப்பாடு நிறுத்திவிட்டதால் இரண்டு வாழைப்பழங்களைச் சாப்பிட்டு டிவி பார்த்து ஒன்பது மணிக்கெல்லாம் படுத்துவிட்டோம். இடி மின்னலுடன் சரியான மழை. இடி மின்னல் என்றால் ஜெயா என்னைக் கட்டிக் கொண்டு விடுவாள். அத்தனை பயம். அன்றைக்கு நன்றாகத் தூங்கிவிட்டாள். பின் கட்டில் ஏதோ ஓசை கேட்பது போல் இருக்க மெள்ள எழுந்து சென்று விளக்கை எரியச் செய்து சுற்றிலும் நோட்டமிட்டேன். மழை கொஞ்சம் ஓய்ந்திருந்தது. காற்றின் வேகத்தில் இரும்பு நாற்காலிகள் இடம் மாறியிருந்தன. சமாதானத்துடன் விளைக்கை அணைக்கப் போனபோது கவனித்தேன்.

படித்துறைக் கம்பிக்கதவருகே ஒருவர் நின்றுகொண்டிருந்தார். இரண்டு கைகளிலும் ஏதோ வைத்திருந்தார். 'யாரோ பெரியவர்' என்று பதட்டப்பட்டு உதவி செய்யும் எண்ணத்துடன் ஒரு குடையை எடுத்துக் கொண்டு படித்துறைக்கு விரைந்தேன். காற்றில் கரைவது போல் என் கண்ணெதிரே கரைந்தது அந்த உருவம். கம்பிக்கதவருகே நின்று இரண்டு பக்கமும் பார்த்துக் குழம்பினேன். வேப்பமரம் என் கவனத்தைக் கவரத் திரும்பினேன். யாரும் இல்லை. எதுவும் இல்லை. மழையும் நின்றுவிட்டது. மறுபடி படித்துறைப் பக்கம் சென்று பார்த்தேன்.

வீட்டுக்குத் திரும்பி வெளி விளக்கை அணைத்துவிட்டு, சூடேறத் துடைத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை. கொஞ்சம் ஹார்லிக்ஸ் நீர்க்கக் கலந்துகொண்டு டிவி பார்க்க உட்கார்ந்தேன். பற்றவைத்த மத்தாப்பு போல் பரபரவென்று எண்ணங்கள்.

படித்துறையில் யாரைப் பார்த்தேன்? கையில் நிச்சயம் ஏதோ வைத்திருந்தார். விக்கிரகங்கள்? இந்த வீட்டில் யார் இருந்திருப்பார்கள்? வீட்டுக்கு ஆன்மா உண்டு என்றாரே ஜெயாவின் உறவினர்? அப்படி ஏதாவது இருக்குமோ? வீட்டைப் பற்றிக் காரில் பேசிக்கொண்டு வருகையில் ஜெயாவின் உறவினர் சொன்னவை... இத்தனை மாதங்களாகத் தோன்றாதது இப்போது பொறியாகத் தோன்றியது: "மதுரைக்கு ட்ரெயின் பிடிக்கறதைப் பத்திப் பேசிண்டு காபி சாப்பிண்டிருந்தவாளை தலைல தட்டி இங்க கூட்டிண்டு வந்தது என்னனு நினைக்கறேள்?"

இவரிடம் இதைப் பற்றிப் பேசவேயில்லை. இதை நான் ஜெயாவிடம் கூடச் சொன்ன நினைவில்லை. இவருக்கு எப்படித் தெரிந்தது? ஏன் அப்படிப் பேசினார்?

இந்த வீடு என்னைப் பாதிக்கத் தொடங்கியது புரிந்தது. எனினும் அசாதாரண பயம் எதுவும் ஏற்படாதது ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்த நிகழ்வுகளுக்கு அன்றைய இரவு என்னைத் தயார் செய்தது என்பது புரிந்தபோது தாமதமாகிவிட்டிருந்தது.

[தொடரும்] ➤➤
சாத்தியம்:99.95% - இல்லையென்றால் பரோடாக்காரர் என்னைச் சும்மா விடுவாரா?



இக்கதை Roald Dahl 1950 வாக்கில் எழுதிய 'Edward, the Conqueror' எனும் சிறுகதையின் தழுவல். என் எழுத்தில் சில உரிமைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன் (ஹிஹி.. நிறைய உரிமைகள்). நிறைகள் அத்தனையும் டாலுக்குச் சொந்தம். குறைகள் ஒட்டுமொத்தமாக என்னுடையவை.

24 கருத்துகள்:

  1. இவ்வளவு நிதானமா பொறுமையா வரிக்கு வரி ரசிச்சு வேற எந்த கதையையும் இப்படி நான் படிச்சதில்லைன்னு தோணுது ...உங்களின் அருமையான எழுத்து நடை தான் இதுக்கு காரணம்.

    ரொம்ப பிடிச்சது...தனித் தனியா எதையும் குறிப்பிட்டு சொல்ல தெரியல :-)

    பதிலளிநீக்கு
  2. அற்புத வர்ணனை.

    இவ்வளவு மரங்களை, இப்படி ஒரு வீட்டைத் தேக்குடன் மக்கள் இவ்வளவு காலம் விட்டு வைத்திருந்திருப்பார்களா!

    பதிலளிநீக்கு
  3. சிந்திக்க வைத்த ஜெயா அவர்களின் கேள்விகள்...

    அடுத்த என்ன நடக்குமோ...? ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
  4. //இடி மின்னலுடன் சரியான மழை. இடி மின்னல் என்றால் ஜெயா என்னைக் கட்டிக் கொண்டு விடுவாள்//
    ஆஹா..ஆஹா...
    சுகம்.! சுகம் !!!
    இடியே வா.!!
    அடிக்கடி வா !! வா !!
    மின்னலே வா ! என்
    இன்னல் தீர்க்க வா !!

    சுதா.
    (as though
    in a trance !! )

    பதிலளிநீக்கு
  5. ஒரு ஆங்கிலக் கதையின் தழுவலை நம் நேடிவிடியுடன் பகிர்வது உங்கள் ஆற்றலே. வாழ்த்துக்கள். அது ஏன் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக.....?

    பதிலளிநீக்கு
  6. Fantatic. I felt a new blood flowing through my body when I read this post because Tiruvaiyaru is the place where I stayed for 7 years till I boarded the train for Baroda.
    After reading this, I am unable to express my feelings which I undergo now. There are so many things to say about this place. How many times I will read this post I do not know because for me it is a very very special post.

    பதிலளிநீக்கு
  7. After reading this post two times, now there is an urge in me to go to Tiruvaiyaru instantly. Next month I will be going to Tamil Nadu and let me see whether I can make it out.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :-)
      திருவையாறு அட்டகாசமான இடம். ஓய்வுபெற.

      நீக்கு
  8. திருவையாறு இப்போ நெரிசல் மிகுந்த ஊராகி விட்டது. முப்பது வருடங்கள் முன்னர் பார்த்தப்போ கிராமத்தின் நிறம், மணம், குணம் மாறாமல் இருந்தது. :( அது சரி, ஶ்ரீராமுக்கு வந்த சந்தேகம் எனக்கும் வந்தது! அதெப்படி இந்த வீட்டை இத்தனை வருஷம் விற்காமல் வைச்சிருந்தாங்க? வாய்ப்பே இல்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. you may see the renovated house here:
      Renovation was done with the generous help provided by Sri G.K.Vasan.

      www.youtube.com/watch?v=g2BgZGEPc9I

      what appadurai sir writes is just fiction based on his ever fertile imagination of course superb.

      The house which I remember to have seen in 1960s was just a tiled house surrounded by a small thopppu and a well.
      i do not remember any burma thekku timber etc.




      subbu thatha.

      நீக்கு
    2. thank you!!!

      நாலைந்து வருடங்களுக்கு முன் திருவையாறு போன போது கதையில் போல் ஒரு வீடு பார்த்தேன். பழைய வீட்டை ஜீவன் மாறாமல் புதுப்பித்திருந்தார்கள்.

      சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறது. திருவையாறில் ஏதோ ஒரு ஸ்வீட் வகை பிரபலம். அந்தக் கடையின் அருகே அய்யாரப்பர் கோவிலுக்குப் போகும் வழியில் இந்த வீடு உள்ளது.

      நீக்கு
  9. இப்போக் கொஞ்ச நாட்களாக எங்கே போனாலும் சொல்லப் போனால் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் கூடப் பேய், பிசாசு, ஆவி, நல்ல ஆவி, கெட்ட ஆவி, உதவி செய்யும் ஆவினு தான் வருது! சீசன் போலிருக்கு! இங்கேயும் அதுவே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாமே உடான்சு தானே?!

      நீக்கு
    2. ஆமாம், உடான்ஸு தான் என்றாலும் அதில் தான் அதிகம் ஆர்வம் வருகிறது. அனைவருக்குமே அமாநுஷ்யம் என்றால் இனம் புரியாத ஆர்வம்.

      நீக்கு
    3. உடான்ஸ் என்றால் என்ன?

      உன்னுடனே
      டான்ஸ் ஆடுவது.

      "உன்னுடனே: என்றால் யார் ?
      நீயா ? நானா ?

      இரண்டும் இல்லை.

      என்னது ? நீ , நான் என்பது வேறு வேறா ?

      இல்லை. இரண்டும் ஒண்ணுதான்.

      என்ன !! நீ நான் இரண்டுமே ஒண்ணுதான்.

      எப்ப ?எப்படி ?

      செத்தப்பறம். இரண்டுமே பிரேதம்.

      அந்த இரண்டு பிரேதமும்
      சேர்ந்து டான்ஸ் ஆடுது.

      எங்க...?

      எல்லார் மனசுலேயும். அதுதான் ஆவி.

      அப்ப ஆவி உடான்ஸா ?

      ஆவி மட்டும் அல்ல,
      அப்பா அம்மா எல்லாமே உடான்ஸ்.

      அவங்க தந்த
      உன் உடம்பும் உடான்சு.

      உன் உலகுமும் உடான்ஸ்.

      ஊழிக் காலத்து
      சதிராடும்
      ஈசனும் உடான்சு.

      எல்லாமே உடான்ஸ்.

      அதத் தானே அவரு சொன்னாரு...

      என்னது ?

      விஸ்வம் தர்ப்பண மான நகரி துல்யம்...

      (உலகம் கண்ணாடியில் பார்க்கப்படும் காட்சி போன்றது )

      எதெல்லாம் மாயையோ அதெல்லாம் உடான்ஸ்.

      நிறுத்துய்யா...


      (தொடரும். சான்ஸ். 99.5 பர்சென்ட் )

      சுதா.

      நீக்கு
  10. That sweet name is Asoka made out of wheat milk sugar and other ingredients. Very delicious sweet. Even today it is available in the same shop.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மோகன். ஆர்வீஎஸ் அவர்களின் ப்லாக் மேய்ந்தபோது அவரும் தற்செயலாக திருவையாறு refer பண்ணி ஒரு கதை எழுதியிருக்கிறார் - எடுத்த உடனேயே அசோகா அல்வா என்று தொடங்கி எனக்கு நினைவுபடுத்திவிட்டார்.

      நிற்க. நிற்காவிட்டாலும் சரி தான். இதுவரை அசோகா அல்வா டேஸ்ட் பண்ண வாய்ப்பு கிடைக்கவில்லை.

      நீக்கு
  11. @மோகன் பரோடா, கோதுமைப் பாலில் அசோகா செய்வதில்லை. பாசிப்பருப்பு, சம்பாகோதுமை மாவு அல்லது கோதுமை மாவு. குஜராத் தான் இதற்கு மூலம் என நினைக்கிறேன். அங்கே பாசிப்பருப்பில் அல்வா மாதிரிச் செய்வது இன்னமும் ருசியாக இருக்கும். ஆனால் குஜராத்தியில் என்ன பெயர்னு தெரியலை. ஆனால் அங்கேயும் அசோகா என்று தான் ரங்க்ஸ் சொல்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு வேளை அசோகர் நாட்டு மக்களுக்குக் கொடுத்த அல்வாவா இருக்குமோ? :-)
      சாலையெங்கும் மரங்கள் நட்டார் சாலையெங்கும் மரங்கள் நட்டார்னு படிக்க வச்சாங்களே தவிர அசோகர் நமக்கெல்லாம் அல்வா கொடுத்தார்னு படிக்க வைக்காம போயிட்டாங்களோ?

      நீக்கு
  12. Yes Geetha madam, you are right Moong Dal is the main ingredient for it. In Gujarat they prepare Seera i.e. Kesari in tamil, in moong dal.
    Appadurai Sir, Your information on King Asoka is excellent.

    பதிலளிநீக்கு
  13. ரொம்ப நாள் கழிச்சு அப்பாதுரைக்கு ஒரு மடல் அனுப்பலாம்னு நினைச்சுக்கிட்டே மூன்றாம் சுழி பக்கம் வந்து எட்டிப்பார்த்தேன்... கட்டிப்போட்டுவிட்டது இந்த கதை....

    மதுரைக்கு போக காத்திருந்த வேளையில் தலையில் தட்டி வரவழைத்து தியாகராயர் சமாதி எதிரில் உட்கார்ந்து பாடவைத்து பழமை மாறா வீட்டை ஜெயாவே வாங்கிக்கலாம்னு சொல்லவைத்து..

    இப்படி நிறைய ஆச்சர்யங்களை உள்ளடக்கி.... இருவருக்கும் இடையே இருக்கும் வேவ் லெங்க்த்... ஸ்பீக் அபௌட் யுவர்செல்ஃப்.... சுருக் வார்த்தை ஜெயா... அதிக பொறுப்பாக வீட்டை 55 க்கு பேசி 65 க்கு வரவைத்த சாமர்த்தியம்...

    மாலி சொன்ன நிறைய விஷயங்கள்... அதன் மூலம் அறிய முடிந்ததுப்பா...

    கதையை படிக்க படிக்க முடிந்துவிடக்கூடாதேன்னு பயந்துக்கொண்டே வந்தேன்.. நல்லவேளை தொடரும் போட்டுருக்கீங்க.


    ரசிக்க வைத்த முதல் பாகம்.. நிறைய ரகசியங்கள்.... வேப்பமரம்.. காவிரிக்கரை...

    ம்ம்ம்ம்ம் அடுத்த பாகம் போகிறேன்பா..

    ஆங் கேட்க மறந்துட்டேன்.. சௌக்கியமாப்பா? என் மேல் கோபம் ஏதுமில்லையே?

    எழுத்துகளின் வசீகரம் தான் படிப்போரை எப்படி கட்டிப்போட்டுவிடுகிறது...

    பதிலளிநீக்கு
  14. அருமையான வர்ணனை. அசாத்தியமான எழுத்து நடை....முதலில் உண்மைச் சம்பவம் என்று நினைத்துவிட்டோம்....இறுதியில்தான் தெரிந்தது கதை என்று... நீங்கள் ஆங்கில எழுத்தரைச் சொல்லி இருந்தாலும்...எங்களுக்கு கொஞ்சம் சுஜாதாவின் சாயல் தெரிந்தது....//எனக்கு இலேசாக எரிச்சல் வந்தாலும் அடக்கிக் கொண்டேன். "நாங்கள்ளாம் பிராமணாளே இல்லை தெரியுமோ? கடல் கடந்தாச்சு. பூணல் கிடையாது. வேதம் படிக்கவேயில்லே. சந்தியாவந்தனம் பண்றது கிடையாது. அபிவாதயே கூட மறந்து போச்சு. சாராயம் குடிச்சாச்சு. மாம்ஸம் சாப்டாச்சு. ஈஸ்வரோ ரக்ஷதுங்க்றதுக்கே அர்த்தம் இருக்கானு கேட்டுண்டிருக்கோம். இவளைப் பாரு. பாதி நாள் கவுன் போட்டுக்கறா. ஒரு வ்ரதம் புனஸ்காரம் எதுவும் கிடையாது. எங்கூட அப்பப்போ மெர்லோ சாப்பிடுவா. உன்னையே பாரு.. கமிஷனுக்காக அதுவும் ப்ளாக்ல குடுத்தா உசிதம்னு சொல்லிண்டிருக்கே இல்லையா? யாரு பிராமணா இதுல?"//

    தொடர்கின்றோம்....அடுத்த பாகம் செல்கின்றோம்...

    பதிலளிநீக்கு