2012/09/21

கடவுள் கிடையாது பாப்பா

டவுள் கிடையாது பாப்பா இதைநீ
    கருத்தினில் வைத்திடு பாப்பா - தெய்வப்
படங்கள் சிலைகளெல்லாம் பாப்பா முன்னோர்
    மடமையென் றறிந்திடு பாப்பா.

மதங்கள் அத்தனையும் பாப்பா முன்னோர்
    மதிகெட்ட வினையாகும் பாப்பா - தீங்கின்
விதங்கள் பலவாகும் பாப்பா அதில்
    முதலிடம் மதமாகும் பாப்பா.

அல்லாவும் யேசுவும் பாப்பா அதுபோல
    ராமனும் சக்தியும் பாப்பா - எல்லாம்
இல்லாத கடவுளின் வடிவாய் முன்னோர்
    இட்டுக் கட்டியதாம் பாப்பா.

எம்முன்னோர் பொய்களைப் பாப்பா ஏற்று
    மூடராய் நாசமானோம் பாப்பா - எங்கள்
நம்பிக்கை பொய்யான தாகும் இதை
    நீயேனும் புரிந்துகொள் பாப்பா.

பாவப் புண்ணியங்கள் போலி பின்னும்
    சொர்க்க நரகமெம் பிதற்றல் - பொய்யால்
ஆவ தேதுமுண்டோ பாப்பா எமைநம்பி
    அறிவை இழக்காதே பாப்பா.

கண்ணால் காண்பதும் பொய்யாம் அறிந்தும்
    காணாததை மெய்யென்றோம் பாப்பா - நம்பிக்
கண்மூடிக் கருத்தழிந்த நாங்கள் நாளும்
    கண்திறந்தக் குருடரானோம் பாப்பா.

கற்றும் அறிவிலார் எம்மை உனக்
    கடையாளம் காட்டுகிறேன் பாப்பா - உன்
பெற்றோர் உறவினர்போல் இருப்போம் பொய்யைப்
    பூசுவதில் பொல்லாதவர் பாப்பா.

கருணையே வடிவான தென்போம் கோபத்தில்
    கண்குத்திக் கழுவிலேற்று மென்போம் - முரணை
ஒருவரும் அறியாத வரையில் நாங்கள்
    ஊரை ஏமாற்றுவோம் பாப்பா.

பக்தியென்றும் முக்தியென்றும் சொல்வோம் மதம்
    முக்கிய மானதென்போம் பாப்பா - மறுத்தால்
சக்தியுள்ள தெய்வமுன்னைப் பாப்பா வாழ்வுடன்
    சாவிலும் வாட்டுமென்போம் பாப்பா.

அரிமுகம் அவதாரம் என்போம் சிலரை
    ஆண்டவனின் தூதரென்போம் பாப்பா - எமக்குப்
புரியாதப் பொய்தினம் சொல்வோம் நீமட்டும்
    பொய்யுரைக்க லாகாது என்போம்.

விரதமுடன் வேதங்கள் சொல்வோம் நாங்கள்
    வேளைக்கொரு வழிபாடு செய்வோம் - பிறகப்
பரம்பொருள் பெயர்சொல்லிப் பாப்பா எம்முள்
    பைத்தியமாய் அடித்துக் கொல்வோம்.

காணாததைக் கடவுளென்றோம் பாப்பா இன்றுக்
    கண்டதையும் கடவுளென்போம் பாப்பா - எமது
வீணான வெறும்பேச்சை நம்பி நீயுமப்
    படுகுழியுற் போகாதே பாப்பா.

கடவுள் கிடையாது பாப்பா இதைநீ
    கணமும் மறவாதே பாப்பா - மதங்கள்
மடமையின் சிகரம் என்பதை உன்
    மனதில் வைத்திடு பாப்பா.

அச்சமும் மடமையும் பாப்பா எம்மை
    மூடராய் முடக்கிய தென்போம் - இனி
மிச்சமுள்ள தலைமுறைக்குப் பாப்பா எங்கள்
    மனதைச் சொல்லுகிறோம் பாப்பா.

கடவுள் மதங்களில்லா உலகம் எங்கள்
    கனவின் புதையலாகும் பாப்பா - இதைத்
திடமாய் செயலிலே காட்டி நாளை
    நனவாகச் செய்திடு பாப்பா.

77 கருத்துகள்:

  1. கீதா மேடத்துக்கு இதைப் படிக்கும் அளவுக்காவது அப்புறம் பதில் சொல்லுமளவுக்காவது (!) மின்சாரம் கிடைக்கட்டும் !

    :)))

    பதிலளிநீக்கு
  2. அற்புதமான கவிதை.
    உண்மை நிலையை தெளிவாக விளக்கும் கவிதை.
    சாதி என்ற புரட்டும் இதே போல் தான்.
    அது பற்றியும் உங்கள் சிந்தனைகளை எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. மதங்கள் மடமையின் சிகரம் இதை நீ மனதில் வைத்திடு பாப்பா... இந்த வரிகளே போதும் அப்பா ஸார். பிரமாதம்.

    பதிலளிநீக்கு

  4. ”அறியாதது இல்லை என்று சொல்வது,
    பகுத்தறிவாளன் மனதின்முரணன்றோ பாப்பா.
    சிற்றறிவுக்கு எட்டாதது இல்லையென்றாகுமா பாப்பா.!
    மதங்கள் எதையும் மதி கெட்டுச் சொல்லவில்லை பாப்பா.!
    மதத்தின் பெயரால் பிழைப்பவர் பின் செல்லாதே பாப்பா . அதுவே சரியென்று
    உணர்ந்திடு பாப்பா. !
    உணர இயலாத கடவுளுக்கு இட்டுக்கட்டிப் பெயர் வைத்தனர் பாப்பா. ..அவர்கள் குணம் கூறிவழி நடக்க வழி வகுத்தனர் பாப்பா..!
    கண்ணால் கண்டால்தான் கடவுள், காணாதது எல்லாம் பொய்யல்ல பாப்பா. !உனை ஈன்ற அன்னை சொல்லியே உன் தந்தை யாரென்று அறிந்தாய் பாப்பா. .அதுபோல் உணர்ந்தோர் கூற்றில் நம்பிக்கை வேண்டும் அறிவாய் நீ பாப்பா. !
    மதத்தால் பிரித்தாளும் சூழ்ச்சியை முன் நின்று சாடு நீ பாப்பா. !பிறப்பொக்கும் எனக்கூறியும் வேறுபாடு ஏனென்று கேள் பாப்பா. !
    கடவுள் மறுப்பே பகுத்தறிவல்ல பாப்பா..!உண்மைக் காரணம் காண விழைவாய் நி பாப்பா..!

    பதிலளிநீக்கு
  5. கடவுள் மதங்களில்லா உலகம் எங்கள்
    கனவின் புதையலாகும் பாப்பா - இதைத் திடமாய் செயலிலே காட்டி நாளைநனவாகச் செய்திடுவாய் பாப்பா.

    - அப்பாஜி

    மதத்தால் பிரித்தாளும் சூழ்ச்சியை முன் நின்று சாடு நீ பாப்பா. !பிறப்பொக்கும் எனக்கூறியும் வேறுபாடு ஏனென்று கேள் பாப்பா. !
    கடவுள் மறுப்பே பகுத்தறிவல்ல பாப்பா..!உண்மைக் காரணம் காண விழைவாய் நி பாப்பா..!

    -- ஜிஎம்பீ

    கடவுளுக்கும் - மதங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையெனினும், இந்த இரண்டும் சம்பந்தமானது அழகான இரு கவிதைகள் பிறக்கக் காரணமாக இருந்திருப்பது தெரிந்தது.

    பின்னால் கவிதைகளைப் பாராட்ட மறந்து விடப் போகிறோமே என்கிற உணர்வில் இந்த முன்வந்த மனமுவந்த பாராட்டு. அப்பாஜி! அசத்தியிருக்கிறீர்கள்! ஜிஎம்ஜி! குறைந்த அவகாசத்தில் புதுப்புனல் போல் புறப்பட்டிருக்கிறது.

    வாழ்த்துக்கள், அன்பர்களே!

    கவிதைக்குக் காரணமாக இருந்த கருத்துக்களுக்கு பின்னால் வந்தால், போயிற்று.


    பதிலளிநீக்கு
  6. பாப்பா பாடும் பாட்டு....
    கேட்டு தலையை ஆட்டு...

    அப்பா பாடும் பாட்டு...
    கேட்டு தலையை ஆட்டு...

    பதிலளிநீக்கு
  7. பாப்பா பாட்டு பாப்பாக்களான பெரிய பாப்பாக்களுக்குத்தானே அப்பாஜி.எங்களுக்கு நாங்களே கடவுள் !

    பதிலளிநீக்கு
  8. கவிதையின் முதல் வரி படித்ததுமே அட என்னது இது ஆச்சர்யமாக பார்த்தேன் அப்பாதுரை. ஆனால் தொடர்ந்த வரிகளை படித்ததுமே முண்டாசு பாரதியின் இன்னொரு பிரதிபிம்பம் இதோ கிளம்பிட்டுது உலகத்தினை, மனித மனங்களை மாற்றிட இயலவில்லை என்றாலும் பிள்ளைகளின் மனதில் பசுமரத்தாணியாக பதியப்பட்டு நாளைய உலகமாவது மதங்களில்லா மத பேதங்களில்லா அமைதி பூங்காவாக மலர எடுத்துக்கொண்ட முயற்சியாக மீசையில்லா பாரதியாக உங்களை நினைக்கமுடிகிறது அப்பாதுரை...

    தெய்வம் இல்லாதவரை மனிதர்களிடையே பேதமில்லை. உயர்வு தாழ்வு இல்லை... வேதம் புரிவரிலரிந்து செருப்பு தைப்பவர் வரை தன் வேலைகளை தானே செய்துக்கொள்ளும் நிலை இருந்தது.... ஆனால் தெய்வத்தை உருவாக்கினான் மனிதன். தெய்வத்தில் பிரிவை உண்டாக்கினான். தங்களுக்கிடையே யார் உயர்ந்தவர் யார் தாழ்ந்தவர் என்று வகைப்பிரித்தான். உயர்ந்த குலம் தாழ்குலம் என்று பிரித்தான்..

    உயர்ந்தோர் என்று சொல்வோரிடையே பிரிவினை உண்டாக்க என்ன செய்யலாம் என்று யோசித்து மதங்களை உண்டாக்கினான் ஜாதிகளை உண்டாக்கினான்.. மதங்களில் பிரிவினை உண்டாக்கி ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு தன்னுடையது தான் உயர்வு என்றும் மற்றதை இகழ்ந்து பெரியோர்கள் மூத்தோர் தன் பிள்ளைகளிடமும் இந்த விஷத்தை பரப்பி அவர்கள் மனதையும் கெடுப்பதை தடுக்கும் விதமாய் குழந்தைகளிடம் இருந்தே நாளைய உலகத்தை சீராக்க எடுக்கும் முயற்சியாக அமைத்த கவிதை வரிகள் சிறப்புப்பா...

    பாவ புண்ணியங்கள் என்பது மனிதன் தன் செயல்களின் வினையாக பாவங்கள் அனுபவிப்பதாகவும், புண்ணியம் என்பது அவன் கருணை மனதை நல்லதை அன்பை அனுபவிப்பாதகவும்... எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் மதம்... அமைதியும் அன்பும் மட்டுமே அதில் பிரதானம்.. கேட்கவும் படிக்கவும் யோசிக்கவும் மிக அருமையாக இருக்கிறது. பூனைக்கு யார் மணியை கட்டுவது? இதோ கட்டியாச்சு.... தொடங்கியாச்சு... இனி உலகம் முழுக்க அன்பை மட்டுமே பகிர்ந்து அமைதியுடன் பொறாமை இல்லாத அழகியதாய் மலர அருமையான அற்புதமான முயற்சி இந்த கவிதை வரிகள்...

    எல்லா தெய்வமும் ஒன்று தான் என்ற நிலை எல்லோர் மனதிலும் எப்போது வரும்?? வரும் சாத்தியமாவது இருக்கிறதா?? அதுவும் கேள்விக்குறியாகவே ஆகிவிட்ட நிலையில்.... இந்த வழி சிறந்ததாக இருக்கிறது...

    சாட்டை எடுத்தாயிற்று கோபத்தை மசியாக்கி மனதில் உள்ள கேள்விகளை எல்லாம் இங்கே கவிதை வரிகளாக்கி அதற்கு பதிலையும் தந்து இதுவரை செய்த எல்லா மடமைகளை கொளுத்தி புதிய உலகம் உருவாக்கும் இந்த அற்புத முயற்சியை போலவே கண்டிப்பாக மலரும் என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது...

    மனதின் திண்மை வரிகளில் தெறிக்கிறது....தைரியத்தின் வெளிபாடு இந்த கவிதை.... இது நாத்திகவாதியின் வரிகள் அல்ல.. கடவுளை வெறுக்கும் வரிகளும் அல்ல... மனிதர்களின் மதங்களை பிரித்து அதில் குளிர்காய்பவர்களை நெருப்பாய்ச்சுடும் வரிகள்....

    இந்த கவிதை வேள்வி எனக்கு மிகவும் பிடித்த பகிர்வானது.... தவறு எங்கே தொடங்குகிறது என்று யோசிக்கவைக்கிறது.... மனதில் இருக்கும் கசடுகளை நீக்க வைக்கும் மருந்தாகிறது....

    மனங்கவர் கவிதை வரிகளுக்கு என் அன்புநன்றிகள் அப்பாதுரை...

    பதிலளிநீக்கு
  9. பாரதியின் தமிழுக்கு நூறு மதிப்பெண்கள் ....

    கடவுள் இல்லாமல் '' கடவுள் கிடையாது '' கூட கிடையாது .... ( பழைய பல்லவிக்கு பழைய சரணம் )

    சரி 'அப்பா 'க்கள் பேச்சை பாப்பாக்கள் கேட்கிறார்களா என்ன ?

    பதிலளிநீக்கு
  10. அருமை.அப்பாஜி.
    பாரதியின் வரிகளை எடுத்துக் கொண்டு பாரதி தாசனாய் சீறியிருக்கிறீர்கள் .

    "கடவுள் என்பவன் உண்டா இல்லையா
    காட்டெனச் சொல்லும் மனிதர்களே!
    அட இது என்ன அற்பக் கேள்வி
    அனைத்துப் பொருளிலும் கடவுள் தான்......."

    ---எனது இந்தக் கவிதையைப் படித்து இருக்கிறீர்களா அப்பாஜி?
    http://sivakumarankavithaikal.blogspot.in/2010/09/kadavul-engay.html

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லாசெப்டம்பர் 22, 2012

    இந்த நூற்றாண்டு பாப்பா பாட்டு. தமிழ் கொஞ்சுகிறது உங்கள் பாடலில்.

    //கருணையே வடிவான தென்போம் கோபத்தில் கண்குத்திக் கழுவிலேற்று மென்போம் - முரணை
    ஒருவரும் அறியாத வரையில் நாங்கள்
    ஊரை ஏமாற்றுவோம் பாப்பா.//

    பிரமாதம்! :)

    எனக்கு என் மனசாட்சிதான் கடவுள்.

    பதிலளிநீக்கு
  12. கடவுள் உண்டு என குழந்தைகளைச்
    சிரமப் படுத்துகிற நம்பிக்கையாளர்களைப்போலவே
    நம்பிக்கையற்றவர்களும் சிரமப்படுத்துகிறோமோ
    எனத் தோன்றுகிறது
    தாய் பால் கடந்து திரவ உணவு கடந்து
    எளிய உணவு கடந்து பிரியாணிக்கு வந்து சேருவது போல்
    மெல்ல மெல்ல அவர்கள் ஏற்றுக் கொள்ளுகிற பக்குவம் வருகிறவரை
    இது விஷயத்தில் கவனமாய் இருக்கலாமோ எனத் தோன்றுகிறது
    நாம் எதையும் வற்புறுத்தாமல் இருத்தலே குழந்தைகளை
    சிந்திக்கத் தூண்டும் என நினைக்கிறேன்
    பாரதியின் குழந்தைப் பாடலுக்கு இணையான பாடல்
    பதிவுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  13. //சரி 'அப்பா 'க்கள் பேச்சை பாப்பாக்கள் கேட்கிறார்களா என்ன ? // அட்டகாசம் பத்துஜி!

    பாரதி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி என்றுதானே சொன்னான்!

    பதிலளிநீக்கு
  14. கண்ணால் காணாத ஒரு ஆலமரத்தை ஒரு விதையைக் காட்டி அதற்குள் மறைந்திருப்பதாய்ச் சொன்னால் எப்படி நம்பக் கடினமானதோ அப்படிப்பட்டதுதான் அவரின் இருப்பும்.

    மஹா சமுத்திரத்தில் காய்ச்சாமல் கோடி கோடி டன்களாய் மறைந்திருக்கும் உப்பைக் கண்ணால் காணமுடியாது- அதன் சுவையை நாக்கால் உணர்ந்தாலும்.

    தீவட்டியின் துணையோடு ஒரு பொருளைத் தேடுவது போல ஞானத்தினால் அந்த குணங்களைத் தேடுகிறோம். தேடியது கிடைத்தபின் தீவட்டியின் துணை தேவையில்லை.

    இல்லை, கிடைக்காது, முடியாது போன்ற வார்த்தைகளை விட உண்டு, கிடைக்கும், முடியும் என்ற வார்த்தைகள் தரும் உற்சாகமும், நம்பிக்கையும் அளவிடற்கரியவை. நாம் தேடுவது எது, எதற்காக என்பதன் விஸ்தீரணத்துக்கு ஏற்ப அந்தப் பயணம் முடிவடைகிறது அல்லது நீள்கிறது.

    என் சொற்ப அனுபவத்தில் இருப்பதிலேயே விற்பதற்கு மிகக் கடினமான பொருள் ஆயுள் காப்பீடு தான். கண்ணால் காணமுடியாதது என்பதாலேயே அதன் அருமை யாருக்கும் அத்தனை எளிதில் புரியாது.

    அன்பு,பரிவு,மன்னிப்பு,நன்றி பாராட்டுதல், பசி நீக்குதல் இன்னும் இதுபோன்ற பல மேன்மையான குணங்களை யாரெல்லாம் ப்ரதிபலிக்கிறார்களோ அவர்கள் அனைவரும் கடவுள்.

    நாம் இருவரும் ஒரே கருத்தைத்தான் சொல்லவருகிறோம் அப்பாதுரை.

    உண்டு என்று நான் துவங்குகிறேன். இல்லை என்று நீங்கள் துவங்குகிறீர்கள். நாமிருவரும் சந்திக்க நேரும் புள்ளியில் இருவரிடமும் அந்த இரு வார்த்தைகளும் கூட உதிர்ந்துபோய் விடும் நிலையில் தரிசிக்கும் அனுபூதிதான் அந்த மறைபொருள்.

    பதிலளிநீக்கு
  15. அப்பாதுரை அவர்களே! எனக்குப் பிடித்தமான கருத்து! இருந்தாலும் நான் ரமணி அவர்கள் கட்சி.கொஞ்சம் அவசரப்படாமல் கவனமாக குழ்ந்தைகளை பக்குவப்படுத்தலாமோ! நான்கு வயதிலிருந்து தன் பயம் தெரியாமல் ஒடி விளையாடும் குழந்தைக்கு இவ்வளவு கடினமான விஷயம் புரியுமா? அவசியம் இந்த வயதில் தெரியப்படுத்த வேண்டுமா? உளவியல் ரீதியாக சரிப்படுமா? Form and content எனக்கு o.k. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் ஆசிரியர் "கடவுள் இல்லை" என்று உங்கள் மகன் சொல்வதாக புகார் கூறியதாக குறிப்பிட்ட நினைவு. நமது வாரிசுகளையாவது தெளிவு படுத்த வேண்டும் என்பது சரியே! ஆர்வம் கோளாரைக் கொண்டு வராமல்பார்க்க வேண்டியதுள்ளது வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  16. //பாரதி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி என்றுதானே சொன்னான்!// ''ஆயிரம் தெய்வம் உண்டென்று சொல்லும் அறிவிலிகாள் '' என்றும் மீசைக்காரன் பாடியிருக்கிறான் ..என்ன அதில் வேதம் வேதம் என சொன்னதால் அதை கிடையாதுக்காரர்கள் நெருங்குவதில்லை ...
    அப்படி போவோர் போகட்டும் ... இப்படி வருபவர்களை பார்ப்போமே ..சுட்ட http://idlyvadai.blogspot.com/2012/09/blog-post_23.html.

    பதிலளிநீக்கு
  17. கருத்தை மட்டும் கவனத்தில் கொண்ட நான் மறந்து பாப்பாவுக்குப் பதிலாக அப்பாவுக்கு எழுதிவிட்டேன். ஸாரி அப்பாதுரை.

    இப்போ பாப்பாவுக்கு:

    கடலுக்குள் உப்புண்டு பாப்பா - இதைக்
    கருத்தில் கொள்ள வேணும் பாப்பா!

    உடலுக்குள் உயிரது போலே - இதை
    ஒரு நாளும் மறவாதே பாப்பா!

    பாலுக்குள் நெய்யுண்டு பாப்பா - அதைப்
    பக்குவமாய்ப் பெற்றிடலாம் பாப்பா!

    நாலுக்குள் இரண்டதனைப் போலே
    அது நாசூக்காய் நின்றிருக்கும் பாப்பா!

    விதைக்குள்ளே வீற்றிருக்கும் வனமாய்
    துளிக்குள் மறைந்திருக்கும் கடலாய்

    கதைக்குள் நிறைந்திருக்கும் கருவாய்
    மறைபொருள் தேடியெடு பாப்பா!

    தோற்றமது உண்மையில்லை பாப்பா!
    மனமாற்றமது சொல்லித்தரும் பாப்பா!

    போற்றினாலும் தூற்றினாலும் பாப்பா!
    பணிந்துசாலப் பகுத்தறிவாய் பாப்பா!

    தாய்க்குள் தெய்வந்தன்னைக் கண்டால்
    வேறேது தெய்வம் வேணும் பாப்பா!

    நோய் துரத்தும் மருந்து தெய்வம்
    சேய் உதிர்க்கும் மழலை தெய்வம்!

    பசி விரட்டும் கைகளுக்குப் பின்னே
    பதுங்கி நிற்கும் மனமே தெய்வம்!

    நிசிக்கொதுங்க இடம்தேடும் நாய்க்கும்
    குடை பிடிக்கும் தயவே தெய்வம்!

    ஓடும் ரயிலில் உருகும் பாடலின்
    ஏழ்மை விரட்டும் அரசே தெய்வம்!

    நாடெங்கும் நாறும் ஊழல் பாம்பின்
    பல்லுதிர்க்கும் அரசின் ஆண்மை தெய்வம்!

    போதிமரத்தடி போதனை தெய்வம்!
    பொறாமை எரிக்கும் அக்னி தெய்வம்!

    நீதி புகட்டும் சாஸ்திரம் தெய்வம்!
    பயிர்கள் காக்கும் மழையும் தெய்வம்!

    தோண்டியும் மூடியும் இடித்தும் உடைத்தும்
    பொறுத்துச் சகிக்கும் பூமியும் தெய்வம்!

    வேண்டாது பாயும் சாக்கடை சகதியும்
    சிரித்து ஏற்கும் கடல்நீர் தெய்வம்!

    கால்வைக்க இடமற்ற பஸ்ஸின் நெருக்கடியில்
    சூல்கொண்டு மனம்வைக்கும் பரிவும் தெய்வம்!

    பால்சுரக்காப் பசுவின் கனக்கும் மடிபோல்
    நாலு போகமீட்டும் வயலும் தெய்வம்!

    காட்டில் இல்லை மலையில் இல்லை
    ஏட்டில் இல்லை சிலையில் இல்லை -

    நாட்டில் இல்லை இல்லை எனும்
    பாட்டுப் பாடும் பாடல் தெய்வம்.

    எல்லாம் எல்லாம் அறிந்துகொள் பாப்பா!
    ஏற்காது போனால் வெளித்தள்ளும் குடலாய்

    நல்லதும் அல்லதும் பிரிக்கும் அன்னமாய்
    வாழ்ந்தால் தெய்வம் நீயே பாப்பா!

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோ அப்பாதுரை,

    யார்யாருக்கோ கலைமாமணி விருது கொடுக்கிறார்கள் உங்களை விட்டு விட்டு...அருமை சகோ நன்றி!!!!!!!!!!!!!!

    இனியவன்....

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லாசெப்டம்பர் 23, 2012

    சுந்தர்ஜி, பிரமாதம்!

    பதிலளிநீக்கு
  20. பின்னூட்டங்களுக்கு நன்றி.

    நிறைய பதில் சொல்லத் தோன்றுகிறது. என் 'நானும்' தொடர்பதிவில் வெளியிட ஏற்கனவே எழுதி வைத்திருப்பதால் இங்கே தவிர்க்கிறேன் அல்லது மேலோட்டமாகச் சொல்கிறேன். காரணம், 'நானும்' கட்டுரைத் தொடர் தடை பட்டுக் கொண்டே வருகிறது. பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைத்து விட்டு தொடங்கியிருக்க வேண்டுமோ என்னவோ!

    பின்னூட்டங்களைப் படிக்கும் பொழுது என்னுடைய இன்னொரு தியரியும் புடமாகிறது. ஆத்திகத்துக்குக் கடவுள் என்றால் குழப்பம் உண்டாகியிருக்கிறது. சர்வ வல்லமை பொருந்திய அத்தனை உயிர்களையும் படைத்துக் காத்து அழிக்கும் மாபெரும் சக்தியிலிருந்து விலகி இன்று காளாணிலும் கடவுள் உண்டு என்று சொல்லத் தொடங்கியிருக்கிறது. விரும்பத்தக்கப் போக்கே.

    மற்ற எண்ணங்களைத் தொடர்பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. பின்னூட்டங்களுக்கு மீண்டும் நன்றி.

    'நானும்' பதிவில் ஒரு கற்பனை பாத்திரத்தை உருவாக்கி அதன் வழியாக இந்தப் பாடல்களைச் சொல்ல எண்ணியிருந்தேன். படிப்பவர்கள் பாத்திரத்தை பாரதியுடன் ஒப்பிட்டால் சொல்ல வந்த கருத்து சிதைந்து விடும் போலிருந்ததால் திருத்தி எழுதி வருகிறேன். பாடல் வரிகளை இப்படியாவது சேர்க்க எண்ணினேன்.

    'பாப்பா பாட்டு' என்று பெயர் வைக்க எண்ணியிருந்தேன். என் போல் எத்தனையோ பாரதி பிரியர்களை (பத்மநாபன்..:) மனதில் எண்ணி என்னுடைய கவதை வரிகள் பாரதியின் கவிதையைப் புண்ணாக்க வேண்டாம் என்ற சங்கடத்தில் தலைப்பை மாற்றினேன். இதைத் தவறாக எண்ணாமல் பாரதி பாட்டின் பாணியுடன் ஒப்பிட்டுக் கருத்துச் சொன்னவர்களின் கருணையில் குளிர்ந்து போனேன். மிக மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  22. @ரமணி, காஸ்யபன்..
    கருத்துக்கு நன்றி. உங்கள் கவலை புரிகிறது.
    ஏற்கும் பக்குவம் இரண்டு வயதில் வந்து விடுகிறது என்று நினைக்கிறோம்; மறுக்கும் பக்குவம் வர நாளாகும் என்று நினைப்பதேன்? இல்லாததை இல்லை என்று சொல்லும் பக்குவம் நமக்கு இருக்கிறதா என்பதே கேள்வியாக நான் நினைக்கிறேன். பிள்ளைகளுக்குப் பக்குவம் வரவில்லை என்பது, நம் பக்குவக்குறைக்கு நாம் சொல்லிக்கொள்ளும் சமாதானம் என்று தோன்றுகிறது. பக்குவம் வரட்டும், தானாகத் தெரிந்து கொள்ளட்டும் என்று பிற பொய்களைப் பற்றி நாம் பொறுமை காப்பதில்லையே? ஒன்று செய்தலும், நன்று செயதலும், அன்று செயதலும் அவசியம் என்று நினைக்கிறேன். நின்று செய்வதால் நொந்து போகிறோம் :)

    பதிலளிநீக்கு
  23. //கடவுள் இல்லாமல் '' கடவுள் கிடையாது '' கூட கிடையாது...
    வாராது வந்து சொன்ன மாமணிக் கருத்து பத்மநாபன். converseம் முகத்திலடிக்கிறதே? :-)

    பதிலளிநீக்கு
  24. @GMB, சுந்தர்ஜி
    கவிஞர்களைக் கிளப்பிவிட்டேன் போலிருக்கிறதே?
    அருமை.

    பதிலளிநீக்கு
  25. @சிவகுமாரன், சுந்தர்ஜி..

    உங்கள் கவிதை வரிகள் எனக்குப் பிடிக்கிறது. அதே நேரம் குழப்புகிறது, எரிச்சலூட்டுகிறது. (ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருப்பதில் ஒரு வசதி :-)
    எல்லாவற்றிலும் கடவுள் இருந்தால் கடவுளே தேவையா?

    'நானும்' பதிவில், "முட்டாள் நாத்திகம்" என்று ஒரு approachஐக் குறிப்பிட்டு எழுதி வருகிறேன். இலக்கை விட்டு இங்கும் அங்கும் ஓடுவது. கறுப்புச் சட்டைக்காரர்கள், கழகங்களின் தயவில் 'முட்டாள் நாத்திகம்' வேரூன்றி நாத்திகத்தின் இலக்கே புரியாமல் போனதென்று நினைக்கிறேன். அது போல் "முட்டாள் ஆத்திகம்" என்றும் இருக்கிறது :-)
    (இங்கே approachஐத்தான் குறிப்பிடுகிறேன் :=).

    எழுதும் போது கொஞ்சம் உணர்ச்சியோடு எழுதிவிட்டேன். இப்போது உதை வாங்க மனமில்லாமல் 'நானும்' பதிவுகளைத் திருத்தி எழுதி வருகிறேன் :)

    பதிலளிநீக்கு
  26. @பத்மநாபன், RVS

    பாரதி ஒரு closet நாத்திகர் என்று கொஞ்ச நாளாக நம்பி வருகிறேன். அவருடைய படைப்புகளில் ஆங்காங்கே குறிப்புகள் கொடுத்திருப்பதாக நினைக்கிறேன். அவர் வாழ்ந்த காலக்கட்டத்தை எண்ணிப் பார்க்கையில் என் எண்ணம் வலுப்பட்டுக் கொண்டே வருகிறது. முட்டாள் நாத்திகத்தைத் தழுவினால் ஒழிய, நாத்திகராய் வாழ்வது எளிதல்ல. நட்புகள் உடனே அறுபடுகின்றன (இன்றைக்கும்). 'தேடிச் சோறு' என்று பாடினாலும் பாரதிக்கு பிறர் தயவு நிறையத் தேவைப்பட்டது.
    அதிகம் புரிந்து கொள்ளப்படாத ஞானி. அவனை இன்னும் நிறையப் படிக்க வேண்டும். நேரமும் வசதியும் கிடைத்தால் என் குறிப்புகளைப் பகிர்கிறேன். முடியாது போனால் குறைந்த பட்சம் நாம் சந்திக்கும் பொழுது உரையாடலுக்காவது ஆகும், என்ன சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
  27. @ஜீவி
    கடவுளுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை என்ற உங்கள் கருத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆசை.

    பதிலளிநீக்கு
  28. கலைமாமணி அப்பாதுரை அவர்களே!
    கொஞ்சம் தாமதமாய் வந்து விட்டேன்.
    நல்லதுக்குத் தான் போலும்.. உங்கள் நாமும்க்காய் நான் காத்திருக்க வேண்டியது தான்.

    உங்கள் கவிதையின் நடையில் லயித்தேன். இன்னமும் சில கவிதைகளை தூண்டியிருக்கிறீர்கள்.

    அதில் கடவுள் இல்லை எனும் கருத்தை நிராகரிக்க வாதங்கள் வைக்கலாம் தான். பத்மநாபன், சுந்தர்ஜி கோடுகாட்டியிருக்கிறார்கள்.

    இப்போதைக்கு நம்மாழ்வாரைப் பிடியும்...

    உளன் எனில் உளன் அவன்
    உருவம் இவ்வுருவுகள்
    உளன் அலன் எனில் அவன்
    அருவம் இவ்வுருவுகள் அவை
    உளன் என இலன் என
    குணம் உடைமையில்
    உளன் இரு தகைமையோடு
    ஒழிவிலன் பரந்தே.

    பதிலளிநீக்கு
  29. நிதானமா வந்தாலும் வெயிட்டோட வரீங்க மோகன்ஜி.. வாங்க.

    தற்கால நாயனாரும் இதையேத்தானே சொல்லியிருக்காரு? சுந்தரர் சொல்லியிருப்பது இன்னும் எளிமை.

    பதிலளிநீக்கு
  30. அருமையான வரிகள் சுந்தர்ஜி. எங்கே பார்த்தாலும் தெய்வம்* என்றப் பிரகலாத வாதம் சற்றே எரிச்சலூட்டினாலும் (அப்புறம் எதிர்கட்சி எங்கே போறதாம்?), தெய்வம் என்பதன் விளக்கம் மாறிக் கொண்டே வருகிறது என்பதில் ஒரு ஆறுதல்.

    (*நாத்திக சீடர் கூட தன் ஆசானை 'எங்கெங்கும் காணினும் சக்தி' என்றுதானே பரவசப்படுத்தினார்? போகட்டும் :-)

    அமைதிக்கானப் புற/அகவிசை எனும் பொருளில் கடவுளைப் பார்ப்பதை ஏற்க முடிகிறது - அந்தக் கணத்தில் 'எல்லாம் வல்ல' என்பதன் பொருளும் அடங்கி விடுகிறது. ஆனால் அப்படி நினைத்தாலும் நடத்தையில் முரணாகவே இருக்கிறோம். எத்தனை பேர் பிள்ளைகளுக்கு தெய்வம் என்பதற்கு அந்த விளக்கத்தைச் சொல்கிறோம்?

    பதிலளிநீக்கு
  31. பத்துஜியின் //'அப்பா'க்கள் பேச்சை//..... அட!
    சுந்தர்ஜி யின் கவிதை...... ஆஹா...
    அப்பா ஜி... கவதைகள்... அட! கவதைகள், சிவாவின் கவிலைகள், என்னென்ன பிரயோகங்கள்!

    பதிலளிநீக்கு
  32. அருந்தி தாகம் தீர்த்துக்கொள்ள உதவாவிட்டாலும், பார்வைக்குக் கானல் நீர் தெரியும்.

    அதுபோலவே விக்ரஹ ஆராதனை முழுமையான ஞானத்தைத் தராது போனாலும் மனதை ஒருமுகப்படுத்தும்.

    மனம் ஒருமுகப்படுவது என்பது சாதாரண விஷமல்ல. ஞானமார்க்கத்தில் போக நினைப்பவனுக்கு ஆதாரத் தேவை இந்த மன ஒருமைப் பாடுதான்.
    (சிவகீதை -அத்யாயம் 14- ஸ்லோகம் 5 )

    (ஷ்ருணு ராஜந் ப்ரவக்ஷ்யாமி தத்ரோ பாயம் மஹாபுஜ
    ஸகுணோ பாஸநபிஸ்து சித்தை காக்ர்யம் விதாய சா
    ஸ்தூல ஸௌராம்பிகா ந்யாயாத் தத்ர சித்தம் ப்ரவர்தயேத்)

    புண்ணிய தீர்த்தங்களுக்கும் புண்ணிய க்ஷேத்திரங்களுக்கும் போவதையும், போவதில் உள்ள பற்றுதலையும் விட்டுவிட வேண்டும்.

    எந்த இடத்தில் தன்னால் மனதை ஒரு முகப்படுத்த முடிகிறதோ அங்கேயே சுகமாக இருக்கவேண்டும்.
    ( சிவகீதை அத்யாயம் 12- ஸ்லோகம்17)

    (உபாஸநமிதி ப்ரோக்தம் ததங்யாதி ப்ருவே ஷ்ருணு
    தீர்த க்ஷேத்ராதி கமநம் ஸ்ரத்தாம் பரித்யஜேத்
    ஸ்வசித்தை காக்ரதா யத்ர தத்ராஸீத ஸூகம் த்விஜ:)

    த்யானம் செய்பவன் இந்த ஜாதியில் பிறந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை

    ப்ரம்மச்சர்யம், இல்லறம், வானப்ரஸ்தம், சந்நியாசம் என்னும் நால்வகை ஆஸ்ரமங்களில் இன்ன ஆஸ்ரமத்தில் இருப்பவர்தான் செய்யலாம் என்பதும் இல்லை.

    யமம், நியமம் முதலானவையும் தேவையில்லை.

    குறிப்பாக இந்த இடம், இந்தக் காலம் என்பதும் தேவையில்லை.

    பத்மாசனம், சுகாசனம் என்று இந்த ஆசனத்தில் இருந்தபடிதான் த்யானம் செய்யவேண்டுமென்பது இல்லை.

    த்யானத்திற்கு இந்த இந்தக் காரியங்களைச் செய்யவேண்டும் என்ற அவசியமில்லை.

    த்யானத்துக்கு முன்னால் எதுவுமே தேவையில்லை. (சிவகீதை அத்யாயம் 16 ஸ்லோகம் 14 )

    (ஜாதிமாஷ்ரமமங்காநி தேஷம் காலமதாபி வா
    ஆஸநாதீநி கர்மாணி த்யாநம் நா பேஷதே க்வசித்)

    கல், உலோகம், ரத்னம், மண் ஆகியவற்றாலான விரஹங்களில் செய்யப்படும் பூஜை முக்தியை நாடுபவனுக்கு மீண்டும் மீண்டும் போகங்களையளிக்கும் பிறவியைத் தருவதாகும்.

    ஆகையால் தனது இருதயத்திலேயே அர்ச்சனையைச் செய்பவனாய், மீண்டும் பிறவாமலிருக்க வெளி அர்ச்சனையை விட்டுவிட வேண்டும்.

    பாஷாண லோஹமணி ம்ருண்மய விக்ரஹேஷு
    பூஜா புனர்ஜனன கரீ முமுக்ஷோ: தஸ்மாத்யதி:
    ஸ்வஹ்ருதயார்ச்சன மேவ குர்யாத்
    பாஹ்யார்ச்சனம் பரிஹரேதபுனர்ப்பவாய (மைத்ரேயீ உபநிஷத்து - ஸ்லோகம் - 26)

    பதிலளிநீக்கு
  33. புதுப் பரிமாணம் சுந்தர்ஜி!

    பதிலளிநீக்கு
  34. //கல், உலோகம், ரத்னம், மண் ஆகியவற்றாலான விரஹங்களில் செய்யப்படும் பூஜை முக்தியை நாடுபவனுக்கு மீண்டும் மீண்டும் போகங்களையளிக்கும் பிறவியைத் தருவதாகும்.

    interesting சுந்தர்ஜி. மைத்ரேயீ உபநிஷதா? கேள்விப்பட்டது கூட இல்லை.

    பதிலளிநீக்கு
  35. பதிவில் கொஞ்சமே . பின்னூட்டங்களில் திறந்து கொண்டேயிருக்கின்றன சிந்தனையின் கதவுகள்.

    பதிலளிநீக்கு
  36. மிகச் சிரமமான சமயங்களைத் தவிர மற்ற நேரங்களில் நான் உங்கள் கட்சி!

    பதிலளிநீக்கு
  37. //கடவுளுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை என்ற உங்கள் கருத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆசை.//

    தங்கள் ஆசைக்கு நன்றி, அப்பாஜி!

    கடவுளும் மதமும் ஒன்றா, அல்லது சம்பந்தப்பட்ட ஒன்றா இல்லை தனித்தனியா என்று சொல்ல வேண்டும் நீங்கள்.

    இரண்டும் ஒன்றே அல்லது சம்பந்தபட்ட ஒன்றே என்று நீங்கள் கருதுவீர்கள் ஆனால், அவை எப்படி ஒன்றே அல்ல என்பதை சொல்வேன். சம்பந்தப்பட்டதே என்றால் இரண்டையும் பிரித்துப் பார்க்க வழி சொல்வேன்.

    இல்லை, தனித்தனி என்றால் என் வேலை சுலபம். கடவுளின் பக்கத்திலேயே மதத்தைச் சேர்க்காதீர்கள். கடவுள் வேறு; மதம் வேறு என்று பிரித்து மதத்தை ஒதுக்கி வைத்து விட்டு கடவுளை பற்றி மட்டும் பேசுவோம். கடவுளே இல்லாத பட்சத்தில் எதைப்பற்றிப் பேசுவது என்றால், மதத்தை ஒதுக்கி வைத்த அந்த சடுதியிலேயே மதப்பூச்சற்ற நிர்மலமான அந்த வேண்டுதல் வேண்டாமையிலானின் சொரூபம் நமக்குத் தெரியலாம் என்பதற்காகச் சொன்னேன். எண்ணையும் தண்ணீரூம் கலந்து விட்டது என்றால், எண்ணையை மட்டும் தனியாகப் பிரித்துக் கொள்வோம். பின் எந்த மதச் சடங்குகளோ, வழிபாடுகளோ, மதாச்சார்யார்களின் மேற்கோள்களோ அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார், இவர் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்கிற கண் மறைத்தல்களோ குறுக்கிடாது. அவற்றிற்கெல்லாம் வேலையற்றுப் போய் எந்தக் குழப்பமும் இல்லாமல் ரொம்ப சுலபமாக நாம் நாமாக நம் உணர்வில் பிரகாசிக்கும் இறைவனை நெருங்கலாம்.

    எந்தக் குறுக்கீடும், திசைதிருப்பலும் அங்கீகரித்தலும், மறுத்தலுமின்றி நாம் இருவர் மட்டுமே நம் இருவருக்கும் அவகாசம் கிடைக்கும் பொழுதெல்லாம் தொடர்ந்து இந்த சரடு பற்றி உரையாடுவோம். அப்படியான இருவரின் கருத்துப் பரிமாறல்களுக்கு இப்படியான பதிவில், பொதுவில் வைத்து உரையாடுதல் சாத்தியமில்லாது போகலாம். அதனால் எனது தனி மெயிலில் தொடர்ப்பு கொள்ள வேண்டுகிறேன். அல்லது என்னை ஆரம்பித்து வைக்கச் சொன்னாலும் செய்கிறேன்.

    இந்த உரையாடல் இருவரின் தொடர்ந்த குறுக்கீடற்ற கருத்து பரிமாற்றல்களுக்கு ஒரு செளகரியமான ஏற்பாடாகும் என்பதற்காகவே. உரையாடல் நிறைவு பெற்றதும் பலருக்குப் பயன் படுமே என்று அதைப் பொதுவில் வைக்க நீங்கள் விரும்பினால் அதையும் செய்யலாம்.

    மிக்க நன்றி, அப்பாஜி!

    பதிலளிநீக்கு
  38. ஹா ஹா ஹேமா! நேர்மையான நா.ஆ.த்திகம்!

    பதிலளிநீக்கு
  39. தனித்தனியா, சம்பந்தப்பட்டா ஒன்றா என்ற என் கருத்து இருக்கட்டும் (ஸ்ரீராம் பாணி), எப்படியிருந்தாலும் இரண்டையும் பிரிக்க முடியாதென்கிறேன். பிரித்தால் ஒன்றில்லாமல் மற்றொன்றை இயக்க முடியாது என்கிறேன். காயேனவாசா என்ற சாதாரண சடங்கு/confession கூட நாராயாணா என்ற கடவுளைத்தான் மையமாக வைத்தே செய்யப்படுகிறது. இன்னொரு சாதாரண சடங்கு: வருடம் ஒருமுறை சுயதேடலுக்காக யாத்திரை போகலாம் என்றால் எத்தனை பேர் வருடக்கணக்கில் இருமுடி கட்டியோ வேல் சுமந்தோ சபரிமலை பழநி என்று நடப்பார்கள்? எத்தனை பேர் ஹஜ், ஜெரூசலம் என்று யாத்திரை போவார்கள்? உடலுக்கு நல்லது என்று மட்டும் சொன்னால் எத்தனை இஸ்லாம், கிறுஸ்தவ, யூத மதத்தினர் இருபதிலிருந்து நாற்பது நாள் வரை 'உண்ணா' நோன்பு இருப்பார்கள்? உடனே "தானாகச் செய்ய மாட்டோம்.. அதற்காகத் தான் கடவுள் என்ற சேர்க்கை" என்ற வாதத்தை முன் வைத்தால் இது வட்டக் கேள்வியாகி விடும். சில சமயம் யோசிப்பேன் (உண்மையும் அது தான்): பிற மதங்களில் போல இந்து மதத்தில் உண்ணா நோன்பு என்று பொதுக் கொள்கையாக இருபது முப்பது நாள் ஏன் இருப்பதில்லை? மாறாக வருடா வருடம் பண்டிகை என்று நிறைய சாப்பிடுவது போல் தோன்றுகிறதே?

    விரிவானக் கருத்துக்கு நன்றி ஜீவி. உரையாடலைத் தொடர்வதற்கான ஐடியா சுவாரசியமாக இருக்கிறது. tony blair, chris hitchens போல கட்சி கட்டிப் பேசவேண்டுமா? :-) [ஏழாம் வகுப்பு நாட்கள் நினைவுக்கு வருகின்றன. தமிழாசிரியர் வகுப்பில் பாடம் முடிந்து நேரத்தைக் கடத்த, 'உண்டா இல்லையா?' விவாதத்தை தொடக்கிவிடுவார். அனேகமாக என்னை 'உண்டு' கட்சியிலும், பன்னீர்செல்வத்தை 'இல்லை' கட்சியிலும் வாதாட விட்டு வேடிக்கை பார்ப்பார். வகுப்பில் ஒருத்தி தவிர அத்தனை பெண்களும் பன்னீர்செல்வம் பேசுவதை வைத்த காது வாங்காமல் கேட்பார்கள்.]

    பதிலளிநீக்கு
  40. சுந்தர்ஜி - உங்கள் எண்ண அலைகள் பிரமாதம்

    பதிலளிநீக்கு
  41. சுந்தர்ஜி மேற்கோள் காட்டியிருக்கும் மைத்ரேயீ சுலோகம் மறுபடி உறுத்துகிறது. மைத்ரேயீ, கடோ போன்ற உபநிஷதுகளை அதிகம் பேர் படிக்கச் செய்ய வேண்டும். செத்த வீட்டில் மட்டும் படித்தால் விவரம் தெரியாமலே போய்விடும்.

    பேசும் பொழுது கடவுளைத் தன்னில் காணலாம், செடியில் கொடியில் காணலாம், மழலையின் சிரிப்பில் காணலாம் என்று பேசுகிறோம்.. ஆனால் மறுபடி மறுபடி கல்லையும் பொன்னையும் ஆராதிக்கிறோம், கோடிக்கணக்கில் செலவு செய்து இருக்கிற கோவில் போதாது என்று இன்னொரு கோவில் கட்டுகிறோம். உதாரணத்துக்கு.. கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில் பண்டரி something என்று புதிதாகக் கட்டியிருக்கிறார்கள். what an eyesore and waste of resources! அந்தக் கிராமத்தின் அழகையே கெடுத்த அடுக்கு மாடிக் கட்டிடம். கேட்டால் துவாரகைக் கண்ணன் பண்டரிபுர சுவாமி என்று பயமுறுத்தி அடக்கி விடுகிறார்கள். பணம் இல்லை, ஏழ்மை என்று எத்தனை அடித்துக் கொள்கிறோம் - பணம் இருப்பவர்கள் இப்படிக் கோவில் கட்டுகிறார்கள், இல்லாதவர்களும் சிரமப்பட்டுக் காணிக்கை சேர்க்கிறார்கள்!! கேட்டால் இந்து மதம் தேய்ந்து கொண்டே இருக்கிறது என்கிறார்கள். இஸ்லாத்தில் இப்படிச் சொன்னால் தலையை வெட்டுவார்கள், கத்தோலிக்கர் காலை வெட்டுவார்கள்.. இந்துமதம் தான் பொறுத்துக் கொள்கிறது என்று உபரி அச்சுறுத்தல் வேறே.
    சொல்லுங்கள், மதமும் கடவுளும் வேறா?

    பதிலளிநீக்கு
  42. மைத்ரேயீ, கடோ போன்ற உபநிஷதுகளை அதிகம் பேர் படிக்கச் செய்ய வேண்டும். செத்த வீட்டில் மட்டும் படித்தால் விவரம் தெரியாமலே போய்விடும்.//

    ithai kurithu visarichu solren. but time akum. anal ungalukku theriyathuna achariyam than.

    for your kavithai, hehehehehe

    enna solrathu, veluthu vangki irukingka. unglalale melum pala kavinjarkal uruvaki irukangka. maththa comments appurama. :))))))))

    பதிலளிநீக்கு
  43. மன்னிக்கவும். நான் கருத்தில் கொண்டது இந்து மதமும், அதன் சில கருத்துக்களை மட்டுமே. தெரிந்ததைத் தானே சொல்ல முடியும்?..

    பதிலளிநீக்கு
  44. பெயரில்லாசெப்டம்பர் 24, 2012

    The people here are tortured everyday by our politicians and ministers. We go to temples to get some peace. Why don't you write about the wretched politics and kalagams and Gandhis of our country? Why are you picking the religion? What is wrong in worshipping a stone when the leader people who are supposed to help us are cheating right before our eyes? Atleast we know the stone may not answer our prayers, but it is atleast giving some peace for us. If you have guts, pick on Sonia, Jayalalitha or Karunanidhi or anyone political leader. Leave our gods and religion alone. We are not forcing you to pray. Please use your education for good purpose.

    பதிலளிநீக்கு
  45. அப்பாதுரை அவர்களே! சொனியாவை, ஜெயாவை,கருணானிதியை திட்டி நீங்க அடிவாங்குங்க! பெயரில்லாதவர் கல்லை கும்பிட்டு நல்லா இருக்கட்டும்.!---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  46. ''கிடையாது'' கவிதைக்கு நிறைய கிடைக்கிறது சுந்தர்ஜி முதலானவர்களின் சிந்தனை முத்துக்கள் ...

    பெரியவர்கள் அருமையாக சொல்லிகொண்டிருக்கிறார்கள் ... பாப்பாக்களுக்கு ஏன் '' கிடையாது ''கூடாதென்று .

    பாரதி நாத்திகத்திற்கு நெருக்கம் , ஆத்திகத்திற்கு நெருக்கம் , தேசியத்திற்கு நெருக்கம் , ஞானத்திற்கு நெருக்கம் ... என அவனது பலதரப்பட்ட பாடல்களை எடுத்து வாதித்து விவாதித்து நம் நிலைக்கேற்ப அவனை நம்மோடு இணைத்துக் கொள்ளலாம் .... தப்பே இல்லை ... பாரதி, பாப்பாக்களுக்கு பாடும் பொழுது வெகு கவனமாக பாடியிருக்கிறான் ...அவனது வரிகள் ....
    தெய்வம் நமக்குத்துணை பாப்பா ... ஒரு தீங்கும் வரமாட்டது பாப்பா ....
    அன்பு மிகுந்த தெய்வமுண்டு -- துன்பம் அத்தனையும் போக்கிடும் பாப்பா....
    முத்தாய்ப்பாக ....
    உயிர்களிடத்து அன்பு வேணும் ;
    தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும் ;
    வயிர முடைய நெஞ்சு வேணும் ; இது வாழும் முறைமையடி பாப்பா ......

    பதிலளிநீக்கு
  47. ஹிஹி.. காஸ்யபன் சார். நல்லா சொன்னீங்க.

    பதிலளிநீக்கு
  48. //பாப்பாக்களுக்கு பாடும் பொழுது வெகு கவனமாக பாடியிருக்கிறான்

    ஓகே பத்மநாபன்.. புரியுது. பாப்பாக்களின் புரிந்து கொள்ளும் சக்தி 'அப்பா'க்களுக்கும் மீறியது. :)

    பதிலளிநீக்கு
  49. ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று பேசி
    அலையும் அறிவிலிகாள்- பல்
    ஆயிரம் வேதம் ஓதும் தெய்வம்
    ஒன்றாம் எனக் கேளீறோ என்றான் பாரதி.
    அத்வைதத்தை எதிர்த்த பாரதியை அவன் கோட்டு தலைப்பாகையோடு நாமத்தைப் போட்டு சிலையாக்கி பதிமூன்றாவது ஆழ்வாராக்கி விட்டார்கள். வைணவர்கள். அறுபத்துமூன்று நாயன்மார்கள் அல்ல.அறுபத்து ஐந்து. நவநாத சித்தர்(கார்ல் மார்க்ஸ்) அறுபத்து நான்கு! சொல்லடி நாயனார் (பெரியார்) அறுபத்துஐந்து.
    பரதியும் மனிதன் தான். தெச பக்தன். புரட்சியாளன். ஆனாலும் he is a bundle of contrdiction and a mixer of confussion. ஆத்திகம் மிகவும் வலிமையானது. அது நாத்திகனையும் முழுங்கி ஏப்பம் விட்டுவிடும் ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  50. உங்களுடைய பாரபட்சமில்லாத அறிவுத் தேடலின் வீச்சு எனக்குத் தெரியும் அப்பாதுரை.

    உங்களின் நேர்மையான வார்த்தைகளுக்குக் கண்கள் கசிய என் நமஸ்காரம்.

    விஷயத்துக்கு வருகிறேன்.

    கடோபநிஷத்தையோ, மைத்ரேயி உபநிஷத்தையோ மரணம் நிகழ்ந்த வீட்டில்தான் படிக்கவேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் உபநிஷத்துக்களில் இல்லை.

    மொத்தம் 108 உபநிஷத்துக்கள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றும் ஒரு ரத்னம். வஜ்ரஸூசிகா உபநிஷத்து, நாரத பரிவ்ராஜக உபநிஷத்து,நாதபிந்து உபநிஷத்து, ஸூபாலா உபநிஷத்து பற்றியெல்லாமும் தனித்தனியே இடுகைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். இவற்றில் நிர்வாணோபநிஷத்தின் மொழியே ஒரு கவிதை.அதுபோல் நவீனமான ஞானக் கவிதை இன்னும் எழுதப்ப்படவில்லை.

    மைத்ரேயி உபநிஷத்து ஸாம வேதத்தைச் சேர்ந்தது. இது மைத்ரேய முனிவர் சிவனிடம் பெற்ற உபதேசம்.இதைத் தனியாக எனது இடுகையில் முழுதுமாக எழுதுகிறேன்.

    தினசரி வாழ்க்கைக்கான சட்டதிட்டங்களை விதிப்பது உபநிஷத்துக்களின் நோக்கமில்லை. அந்த வேலையை ஸ்மிருதிகள் செய்கின்றன.

    இமயத்தின் மேலேறிச் செல்பவனுக்கு புறப்பட்ட இடம் எப்படித்தோற்றமளிக்குமோ அப்படியே சமூகத்தின் வேற்றுமைகளும் உதிர்ந்து ஞானத்தின் திறவுகோல் அவன் கைகளில் தஞ்சமடைகின்றன.அந்த அனுபவம் பயிற்றுவிக்கப் பட முடியாததும், தேடுபவனுக்கே கிடைப்பதும்.

    கடவுளைத் தேடி உணரும் அந்த இடத்தில் ஆஸ்திகம், நாஸ்திகம் இரண்டுமே அர்த்தமில்லாத வெற்றுச் சொற்கள்.

    மற்றுமொரு வேண்டுகோள்.

    பாரதி ஒரு மேதை.வெறும் 39 ஆண்டுகள் மட்டுமே கடுமையான நெருக்கடிகளுக்குள் வாழ்ந்த ஞானி.அவன் வாழ்நாளுக்குள் அவனைப்போல அதிகம் எழுதியதும்,அனுபவங்களைப் பெற்றதும்,மக்களை நெருங்கியதும் ஆதிசங்கரரும், விவேகானந்தருமே. அவனைப் புரிந்துகொள்ளவும், விமர்சிக்கவும் மிகுந்த கவனமும் நிதானமும் தேவை.

    பதிலளிநீக்கு
  51. ஆத்திகம் மிக வலிமையானது காஸ்யபன் சார், சந்தேகமே இல்லை. உலகில் ஆத்திகத்தின் ஆதிக்கம் தான் என்றைக்கும்.

    பதிலளிநீக்கு
  52. ஒரு பழம். ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை பழுக்கும் அரிய பழம். பார்த்தாலே நிறைவைத் தரும் பொலிவு. பழத்தின் ஒளியும் மணமும் மனதை எங்கோ இட்டுச் செல்கிறது.

    எல்லோரும் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இன்னொருவர் வந்தார். "என்ன பழம் இது?" என்று கேட்டார். பழத்தின் பெருமையை எல்லோரும் விவரித்தார்கள். தெய்வீகப் பழம் என்றார் ஒருவர். ஆராதிக்க வேண்டிய பழம் என்றார் ஒருவர்.

    "அப்படியா! என்ன ஆச்சரியம்!" என்றவர், உடனே பழத்தை எடுத்து சாறு வழியச் சாப்பிட்டு முடித்தார். "ஆகா! என்ன ருசி! என் பாக்கியம்!" என்றார்.

    திடுக்கிட்ட மற்றவர்கள், "என்னய்யா இது! ஆயிரம் வருடத்திய அரிய பழத்தை இப்படி சாறு வழிய நக்கிச் சாப்பிட உனக்கு எப்படி மனம் வந்தது? நாகரீகம் இல்லையா?" அப்படி இப்படி என்று விவாதித்தனர்.

    சாப்பிட்டவர், "இது பழம். சாப்பிட வேண்டியது. இந்தப் பழம் தான் என்னைச் சாப்பிடு என்று அழைத்தது. ஆயிரம் வருடத்திய அழுகலாக வேண்டாமென்று சாப்பிட்டேன்" என்று கையைத் துடைத்துக் கொண்டு போனார்.

    ப்ரிய சுந்தர்ஜிக்காக இந்தக் குட்டிக் கதை. (நான் சாப்பிட்டவர் கட்சி :-)

    பதிலளிநீக்கு
  53. என் பங்கிற்கு.. Atheists Universe என்ற புத்தகத்தில் டேவிட் மில்ஸ் எழுதியிருந்ததை அப்படியே கீழே தருகிறேன்..

    We should recognize that all children are born as atheists.

    There is no child born with a religious belief.

    The Jesuits used
    to have a saying: "Give us a child until he's 5 years old and we'll
    have him for life." In a similar mode of thought, Bertrand Russell
    once observed that "A man's religion, almost without exception, is
    the religion of his community.”

    இப்படியெல்லாம் வெஸ்டனர்ஸ் சொன்னாலும் பக்தப் பிரகலாதன் வயிற்றுக்குள்ளிருந்தே நாராயண நாமத்தை ஸ்மரணம் செய்ததை நம்பாமல் இருக்க முடிவதில்லை. இப்போது அறிவியல்பூர்வமாக வெளியிலிருந்து எழுப்பப்படும் இசை கருவிலிருக்கும் குழந்தைக்கு நன்மை பயக்கும் என்று நிரூபிக்கிறார்கள்.

    வைரமுத்து ஒரு முறை மேடையில் சொன்னது.

    ”பாப்பா உன் மதம் என்ன?” என்ற கேள்விக்கு..

    ”தேதியாது” என்று பேசத்தெரியாதபோது சரியாகச் சொன்னது.

    வளர்ந்து பேசத்தெரிந்த போது என் மதம் உன் மதம் என்று தவறாகப் பேச ஆரம்பித்தது.

    பதிலளிநீக்கு
  54. நன்றி RVS. அருமையான topicஐத் தொட்டிருக்கிறீர்கள்.

    இதை 'நானும்' பதிவின் இறுதியில் எழுத எண்ணியிருந்தேன். சுந்தர்ஜியும் தொட்டுவிட்டதால் என் கருத்தைத் தெளித்து விட்டுப் போகிறேன்.

    கருவுற்றக் கணத்தில் சாத்தியப் பெற்றோரின் இன மத இன்னபிறச் சுவடுகள் கருவின் மேல் படிந்தாலும், பிறக்கையில் ஆத்திகரும் இல்லை நாத்திகரும் இல்லை. இரண்டுமே ஒருவித தகாத உரிமையின் விளைவாக ஊட்டப்படும் முலைப்பால். முதல்சோறு.

    புற இசையைக் கரு கேட்டு வளரும் என்பதன் எதிர்குழுவும் இருக்கிறது. கருவிலிருக்கும் பிள்ளை, வெளியுலக ஓசையைக் கேட்க சாத்தியம் உண்டு என்று மட்டுமே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ('சாத்தியம்' நிரூபிக்கப்பட்டிருக்கிறது!) அது இசையா என்னவென்று கருக்குழவியால் அறிய முடியாது. எத்தனையோ தம்பதிகள் கருவுற்றக் காலத்திலும் அடித்துக் கொள்கிறார்கள், சண்டை சச்சரவு என்று நிம்மதியைக் குலைத்துக் கொள்கிறார்கள். அன்பில்லாமல் கருவுற்ற மனைவியை எரிந்து விழுந்து சீறிக் குதறும் கணவர்கள், அழுகையோ அழுகை என்று இயலாமையில் திரியும் மனைவிகள் - இத்தனை ஓசைகளும் கருவைப் பாதிக்கும் தானே? இதற்கான சாத்தியங்கள் அலசப்பட்டிருக்கின்றனவே தவிர இது தொடரும் ஆய்வாகும். 'சனியன் முண்டை'க்குப் பதிலாகக் கொஞ்சம் சங்கீதம் கேட்டால் நிச்சயம் நல்லது தானே (குறிப்பாக, தாய் தந்தையருக்கு! :-). தாய் அமைதியாக இருந்தால் உடலுள் இருக்கும் கருவுக்கும் 'அமைதி' உண்டாகிறது. சுரப்பிகளின் விளைவு. இதை அப்படியே சொன்னால் சுவாரசியம் இருக்குமா? அதனால் கருவுக்கு முகாரியை விட மோகனம் பிடிக்கும் என்று சொல்கிறோம், அவ்வளவு தான். பிரகலாதன் கருவில் 'நாராயண ஸ்மரணை'யோடு இருந்திருக்க முடியாது என்றும் நாமறிவோம். இருந்தாலும் நம்புகிறோம். அஞ்ஞானம். (சரியானத் தமிழ்ச்சொல் தெரியவில்லை, என் அறிவுக்குறை). இன்னொரு பார்வையில், அப்படி கருவிலேயே நாராயணப் பாராயணம் செய்யாத பிரகலாதன் கதையில் சுவாரசியம் குறைந்து போயிருக்கும். இது கதாசிரியர் எடுத்துக் கொண்ட உரிமை. ராவணனுக்கு ஒரு தலை தான் என்றால் ராமனின் பராக்கிரமத்தில் லேசாகப் புழுதி படியும் என்பதால் கதாசிரியர் எடுத்துக் கொண்ட உரிமை. படிக்கும் நமக்கும் கண நிறைவாக இருக்கிறது.

    என் கருத்துக்கு வருகிறேன். ஆத்திகத்தின் கடைசி நூற்றாண்டு இது. இதை என் கனவென்று பிறர் நிராகரித்தாலும் சரி. ஆத்திகம் மறையும் அதே கணத்தில் நாத்திகமும் மறையும்.

    பதிலளிநீக்கு
  55. //தெரிந்ததைத் தானே சொல்ல முடியும்?..

    இப்படி வாருறீங்களே ஜீவி சார், நியாயமா? ஹிஹி..

    பதிலளிநீக்கு
  56. "ஆத்திகத்தின் கடைசி நூற்றாண்டு இது.ஆத்திகம்மறைந்த அடுத்த கணம் நாத்திகமும் மறையும்"அற்புதமான வரிகள்.ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் அப்பாதுரை அவர்களே---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  57. அப்பாதுரை தளத்தில் பதிவுகள் எப்போதும் காவிரியில் நுரையுடன் வரும் புதுத்தண்ணீர் போல!
    அது சில/பல சமயம் கொள்ளிடமாய்!!
    காவிரியும் கொள்ளிடமும் எங்களுக்கு (வாசகர்களுக்கு) ஒன்றுதான், நாங்கள் குளித்து மகிழ்கிறோம்!!!
    ஜீவி,சு(ந்தர்)ஜி,அ(ப்பா)ஜி எல்லோரும் தனிமடல் அல்லாது இங்கு உரையாடினால் நாங்களும் பயன் பெருவோம் என வேண்டிக்கொள்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  58. சுந்தர்ஜி அவர்களின் பாடலும் நன்றாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  59. Dear Sir,

    Your poem is excellent. I wish that the Tamilnadu Government uses your poem in the Tamil text books for the children to learn.
    Please keep up your good work.

    பதிலளிநீக்கு
  60. I don't think I have anything to comment on the topic as such... Though, "strictly confining my comment to the post"- I think it's brilliant.

    The comments are all awesome. Esp- Jeevi sir and Sundarji! When people say- "I am spiritual, but not religious", I have always wondered if they really understand what they are talking about. Of course, there are very few people who say that... Sundarji's poetry- I have no words!

    I used to think the stories of magic, gods and goddesses widen the scope of a child's imagination. But as one grows up- the very complexities of human mind, leaves gods and magic- far behind! Funny though it may seem- I actually came across Russell saying, "The idea that things must have a beginning is really due to the poverty of our imagination"- later- which changed my opinion on what could contribute to "imagination".

    Isn't there a risk in "bringing up" a child as an atheist? After all, both "Religion" and "Spirituality" are highly persuasive...

    But as they say- this topic itself is something that is to be spoken on, only after a good lunch... There's a world out there to live...

    பதிலளிநீக்கு
  61. ஆ...ஹா, "வ‌.கோ.வா. வீர‌ப்பாவாய்"
    "ச‌பாஷ்....ச‌ரியான‌ போட்டி" என ஆர்ப‌ரிக்க‌த்தான் தோன்றிய‌து.
    ஆட்ட‌த்தில் இருப்ப‌து அப்பாஜியும் சுந்த‌ர்ஜியும் அல்ல‌வா?
    'காத‌ல் ம‌ன்ன‌னாய்' யாரும்
    திரைச்சீலையை இழுத்து போட்டியை முடித்து விடாதீர்க‌ள்.
    ....................
    க‌ட+ உள் = க‌டவுள்.
    க‌ட‌ந்தோமா? க‌ட‌க்க‌த்தான் வேண்டுமா?
    க‌ட‌ந்தால் க‌ண்ட‌டைந்த‌து என்ன‌?
    க‌ட‌வுள் ந‌ல்ல‌வ‌ரா, கெட்ட‌வ‌ரா?
    சுவ‌ர்க்க‌ம், ந‌ர‌க‌ம் தீர்மானிப்ப‌வ‌னா?
    அறம், ம‌ற‌ம் பிரிப்ப‌வ‌னா?
    ஹிம்சை எது? அஹிம்சை எது.
    எல்லைக் கோட்டின் அந்த‌ப் ப‌க்க‌மா?
    இந்த‌ப் ப‌க்க‌மா அல்ல‌து ந‌டுவிலா?
    நிம்ம‌தி, அமைதி, சாந்தி என்ப‌தின்
    அளவீடு என்ன‌? அது த‌னிந‌ப‌ர் சார்ந்த‌தா?
    ச‌முதாயம் சார்ந்த‌தா?
    அணுவின்றி எதுவும் அசையாது
    அணுமின்சார‌ம் வேண்டுமா?
    அது ந‌ன்மையா, தீமையா?
    அழிவா, ஆக்க‌மா? இர‌ண்டுமேவா?
    இல்லை அதையும் க‌ட‌ந்த‌தா?

    சாமி இருக்கானா? துன்ப‌ப்ப‌டுப‌வ‌னின் ஐய‌ம்
    (குழ‌ந்தை நேய்வாய் ப‌ட்டிருக்கும் போது
    பார‌தி, காளியிட‌மே, "இப்ப‌டிச் சோதித்தால்
    நான் ஆத்திக‌னாகி விடுவேன்" என‌க் கோபிக்கிறார்.
    பின் "எங்கெங்கு காணினும் ச‌க்திய‌டா" எனவும் குதுக‌லிக்கிறார்.

    'நித்தி'யின் சிவ‌ச‌க்தி பூஜையும், சிவ‌லிங்க‌ வ‌டிவும்
    ஒன்றையே 'பாவி'க்கிற‌தா? (தளையசிங்கத்தின் 'தொழுகை'
    கதையிலும் இப்ப‌டி ஒரு காட்சி வ‌ருகிற‌து)
    இதுப‌ற்றி பாற்க‌ட‌லில் ஆழ‌ம் பார்த்தால்‌ கிடைப்ப‌து, அமிர்த‌மா? ஆல‌மா?

    க‌ட‌வுள் இல்லையென்றிருந்தால், இத்தனை சாமிக‌ளும் ம‌த‌ங்க‌ளும் கோவில்களும்
    அதை ந‌ம்பி ஊரும். நாடும், நாண‌ய‌மும்(In GOD we TRUST), ஒன்றாகி, ப‌ல‌வாகி, இணைந்து, பிரிந்து, பிரித்து,
    உயிரூட்டி, கொலைக‌ள் செய்து, குண‌மாக்கி, குருடாக்கி, கொடுத்து, ப‌றித்து என இத்த‌னை லீலைக‌ளும், திருவிளையாட‌ல்க‌ளும், கோடுக‌ளும், வ‌டுக்க‌ளும், முடிசூட்ட‌லும், ம‌ழித்த‌லும், இன்ன‌பிற‌வும் ந‌ட‌ந்திருக்குமா?

    இந்த‌க் குழ‌ப்ப‌ம் வ‌ரும் போதெல்லாம்,
    "ஆமா, ஆமா, இவ‌ரு பெரிய‌ மேதாவி, ஆனாப்ப‌ட்ட‌
    பார‌தியும், விவேக‌ந‌ந்த‌ருமே ந‌ம்பிய‌, வ‌ழிகாட்டிய‌
    பாதையை விட‌ வேற‌ மார்க்க‌ம் ஏது?
    நீ என்ன‌ அவ‌ர்க‌ளை விட‌ பெரிய..."
    என எனக்கு நானே
    புத்தி சொல்லிக் கொள்வேன்.

    'வெற்றியெனில் த‌ன்னால்
    தோல்வியெனில் அவ‌னால்'
    எனத் தோல்வியை சும‌க்க‌
    அல்ல‌து மாற்றான் வெற்றிக்கு
    கார‌ண‌ம் காட்ட‌வாவ‌து க‌ட‌வுள் தேவை தானோ!

    தொட‌ருங்க‌ள். இந்த‌ப் ப‌ழ‌த்தை கொண்டுவ‌ந்து
    நாட‌க‌த்தை நார‌த‌ர் ந‌ட‌த்தட்டும். இந்த‌ போட்டி
    அனைவ‌ருக்கும் நன்மையில் முடியுமென்ப‌து திண்ண‌ம்.

    பதிலளிநீக்கு
  62. நன்றி மாதங்கி. particularly your wodehousian parting lines - brilliantly humorous or humorously brilliant, depending on the time of the day.

    it is possible to separate religion from spirituality.. in my view, that is the only way to seek spiritual solace. we don't need to scour scriptures or ancient lores - there's an example round the corner: ramana maharishi.

    about 'bringing up a child as an atheist' - interesting pov. i think the risk is in "bringing up" regardless of how :) coz' i think it is a fallacy wrapped in parental arrogance. children are not brought up, they grow.

    பதிலளிநீக்கு
  63. //it is possible to separate religion from spirituality.. in my view, that is the only way to seek spiritual solace..... ramana maharishi.//

    ஒளிக் கீற்றின் பளீரிடல்!

    தகுந்த இடத்தில் மேன்மையான இந்த மேற்கோளை எடுத்தாண்ட அழகு,
    அழகுக்கு அழகு சேர்த்தது.

    பதிலளிநீக்கு
  64. வாருக, i mean, வருக வாசன்! சுந்தர்ஜியோட போட்டியா? டெபாசிட் தொலைக்க வழி சொல்றீங்களே, நியாயமா?

    //இவரு பெரிய மேதாவி...
    நான் இப்படி அவ்வப்போது நினைத்துக் கொள்கிறேன். நாத்திகத்தைத் தழுவத் தொடங்கிய புதிதில் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். தமிழ் இறையிலக்கியங்களில் எனக்கு மிகவும் பிடித்த திருவாசகம், திவ்வியப்பிரபந்தம் படிக்கும் பொழுது இவர்களுக்கு இல்லாத அறிவும் விழிப்புமா எனக்கு வரப்போகிறது, இவர்கள் என்ன முட்டாள்களா என்று அடிக்கடி நினைப்பேன். (இரண்டு வருடங்களுக்கு முன் வரை தினம் திருவாசகம் திவ்வியப்பிரபந்தம் படிப்பேன்). ஆனால் என் குழப்பங்களுக்கான தெளிவு திருவாசகம் திவ்வியப்பிரபந்தத்திலேயே கிடைத்தது - ஒரு நாள் சுவரில் முட்டிய அனுபவம் போல.

    விவேகானந்தரின் 'எழுந்திரு, விழித்திரு' ஆன்மீகம், நாத்திகம் என்று நான் நினைக்கிறேன்.

    பார்வையில் இருக்குது காட்சி.

    கொஞ்சம் மாத்திச் சொல்றீங்களோ சார்? வெற்றி என்றால் கடவுள் அருள், தோல்வி என்றால் தன் முன்வினை - இப்படித்தானே சொல்கிறோம்?

    பதிலளிநீக்கு
  65. //ஆனால் என் குழப்பங்களுக்கான தெளிவு திருவாசகம் திவ்வியப்பிரபந்தத்திலேயே கிடைத்தது // அப்பாதுரை தெளியவெச்சி தெளியவெச்சி அடிக்கிறீங்களே அய்யா, திருவாசகத்தில் அது எந்த வாசகம் எனச் சொல்லுங்களேன். நான் தேருவேனா? குளித்து கரை ஏறுவேனா?

    பதிலளிநீக்கு
  66. வாங்க அரசூரான்.

    திருவாசகத்தில் தனியாக ஒரு வாசகம் என்று எதுவும் இல்லை - ஆனால் நான் தினமும் படிச்ச அதே பாடல்களில் சில வேறு பொருளில் தோண ஆரம்பிச்சுது. என் குழப்பங்களை நானே தீர்த்துக் கொண்டேன் என்பது சரியான விளக்கமாகுமோ? இறையிலக்கியம் படைத்தவர்களும் முட்டாளில்லை, நானும் முட்டாளில்லை என்ற தெளிவும் சமாதானமும் கிடைச்சது என்று சொல்லியிருக்க வேண்டும்.
    இந்த realization & rationalization பற்றி அவசியம் எழுத நினைச்சிருக்கேன், 'நானும் கடவுளும்' பதிவில்.

    அடுத்து பதிவிடலாம்னு நினைச்சிருக்குற பாப்பாக் கதைக்கே என்னை உதைக்க ஆளிருப்பாங்கனு தோணுது - இதுல திருவாசகத்துலயும் திவ்வியப்பிரபந்தத்துலயும் நாத்திகம் இருக்குதுனு சொன்னேன்னு வைங்க, தமிழ்நாட்டுல இனி காலடி வைக்க முடியும்னு தோணலிங்க :)

    பதிலளிநீக்கு
  67. சாதாரண பாப்பாப் பாட்டாக எழுதிப் பதிவு செய்தேன். சிவகுமாரன் சொல்லியிருப்பது போல பின்னூட்டங்களில் சிந்தனைக் கதவுகள் திறந்தவண்னம் இருக்கின்றன. இவற்றின் சாரத்தை இன்னொரு பதிவில் சேர்க்க எண்ணியிருக்கிறேன், உங்கள் அனுமதியுடன். அத்தனை பின்னூட்டங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  68. அப்ப, கதவுகளைச் சாத்தியாச்சா?..

    பதிலளிநீக்கு
  69. என் கண்ணுக்கு எல்லாமே ஜன்னலாத்தான் தெரியுது ஜீவி சார் :)

    பதிலளிநீக்கு
  70. //ஆத்திகத்தின் கடைசி நூற்றாண்டு இது. இதை என் கனவென்று பிறர் நிராகரித்தாலும் சரி. ஆத்திகம் மறையும் அதே கணத்தில் நாத்திகமும் மறையும். //

    சார்
    இந்த வரிகள் பல உண்மைகளை சொல்லாமல் சொல்கிறது
    இவ்வளவு பெரிய கருத்தாடலுக்கு வழி வகுத்து உங்கள் பாடலுக்கு
    நன்றி
    இதை போல் நிறைய எதிர்பார்க்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  71. வளரும் குழந்தைகளுக்கு அவசியம் தெரிய வேண்டிய விஷயம். முன்னோர்கள் சொன்னது எல்லாம் பொய், நீங்கள் சொல்வது மட்டுமே உண்மை என்று குழந்தைகள் புரிந்து கொள்ளட்டும். உங்கள் தொண்டு வாழ்க! ஆகா! ஆகா! இதுக்குப் பட்டம் வேறே குடுக்கணும்னு சொல்றாங்களே? I cannot agree more.

    பதிலளிநீக்கு