2012/06/11

தைவாதர்சனம்




◄◄   1




    தை கேக்கத் திரும்பி வந்தவாளுக்கு ஒரு ஆத்மார்த்த வெல்கம் போட்டுடறேன்.

கார்த்தால வடபழனி கோவிலுக்குப் போக வேண்டியிருந்தது. இன்னைக்குப் பாத்து என்னோட பழைய எடர்னோ வேலை செய்யலை. கால் டேக்சி பிடிச்சு கோவிலுக்குப் போய்ட்டு வந்தேன். அசோக் நகர் பக்கம் ரோடு மகா மோசம். தூக்கித் தூக்கிப் போட்டுதா, இந்தப் பொடி டப்பா எங்கயோ விழுந்து காணாம போயிடுத்து. என்னோட மாமனார் உபயோகிச்ச வெள்ளி டப்பா. நித்யம் பொடி டப்பாவைப் பாத்தாலே அழகான முகத்தை அஷ்டகோணலா பண்ணிக்கிற எங்காத்துக்காரி, இன்னிக்கு டப்பா காணோம்னதும், பொறந்தாத்து சொத்தாச்சே, கங்களாஞ்சேரி பிராமணரைக் கல்யாணம் பண்ணிண்டா இப்படித்தான் சகலத்தையும் தொலைச்சுட்டு வந்து நிப்பார்னு இடிக்கறா. பொடி இல்லாம நேக்கு கையும் ஓடமாட்டேங்கறது, கதையும் ஓடமாட்டேங்கறது. ஜிடாக்ஷம்னு சொல்வா பாருங்கோ, துறந்த நிலை, பொடி போட்டா நேக்கு ஜிடாக்ஷம் எட்டு ஊருக்கு வரும். கால் டேக்சிக்காரா நல்லவானு சொல்றா. கொண்டு வந்து குடுத்தாலும் கொடுப்பான் தீர்க்காயுசுக்காரன். திரும்பக் கெடச்சா அந்த வைத்தீஸ்வரபுத்ரன் அனுக்ரகம். கிடைக்கலேன்னா என்னோட கர்மபலன். எல்லாமே அப்படித்தான். விடுங்கோ, கதைக்கு வரேன்.

ந்ருத்யசாலைலே பிரதாபகுமாரனும் தேவகன்னிகையும் ஒருத்தரையொருத்தர் பாத்து மெய் மறந்துட்டானு சொன்னேனில்லையா? வாஸ்தவமாத்தான். இவனோட கண்லேந்து அவளோட கண்ணுக்குப் பாலம் கட்டினா மாதிரி ரெண்டு பேர் மனசும் ஸ்ருங்கார சவாரி போய்ட்டு வரது. 'கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே'னு சினிமால ஆடுவாளே அந்த மாதிரி. இவனோட கண்ல அவ நெறஞ்சிருக்கா. அவ கண்ல இவனை விட்டா வேறே தர்சனமே இல்லை.

எத்தனை நாழி இப்படி நின்னுண்டிருந்தாளோ, அவாளுக்கே தெரியாது. சட்டுனு முழிச்சுக்கறா ரெண்டு பேரும். பிரதாபகுமாரன் சிம்ம நடை நடந்து, அவ கிட்டே ரொம்பப் பக்கத்துல போய் நின்னு, அவளோட மேலணியை எடுத்துக் குடுக்கறான். அவ வெக்கத்தோட வாங்கி இடுப்பையும் மாரையும் போத்திக்கறா. வாங்கும் போது, அவன் கை விரல் அவ உள்ளங்கைல படறது. ஊசி குத்தின மாதிரி வலிக்கிறது அவளுக்கு, அதே சமயம், சந்தனம் தடவின மாதிரி இதமாவும் இருக்கு.

"யார் நீங்கள்?"னு கேக்கறா. கோகிலம் பாடறா மாதிரி இருக்கு.

பதில் சொல்லிட்டு, அதே கேள்விய திருப்பிக் கேக்கறான் பிரதாபகுமாரன்.

"நான் தேவகுலம். ஊர்வசி தெரிந்திருக்குமே, அவள் என் மாமன் மகள்". கொம்புத் தேனாக் கொட்டறா.

"ஊர்வசி உன் உறவென்றால், ஏன் உன்னைப் போல அழகாக இல்லை?"னு ஒரு போடு போடறான் பிரதாபகுமாரன்.

அவ அப்படியே வெக்கத்துலயும் பெருமைலயும் உருகிப் போயிடறா. அழகான பொண்ணு வெக்கப்படறதைப் பாத்துட்டா அந்தக் க்ஷணமே குருடனாயிடலாம்பேன். லோகத்துல அப்புறம் பாக்கறதுக்கு கண்கொள்ளாக் காட்சி வேறே என்ன இருக்குங்கறேன்? பாருங்கோ, லஜ்ஜை அவளோட லாவண்யத்தை இன்னும் ப்ரகாசப்படுத்தறது. அந்தப் ப்ரகாசத்துல அவனோட மனசு உருகிப் போயிடறது. அவ ஏதோ சொல்ல நெனச்சு அவனை ஏறிட்டுப் பாக்கறா.

வாசல்ல டக் டக்னு பாதுகை தட்டற சப்தம் கேக்கறது.. ரெண்டு பேரும் திரும்பிப் பாக்கறா.

பிரதாப ராஜா நின்னுண்டிருக்கார். "குமரா, விநாயகரோட மீடிங்க் முடிஞ்சு போச்சு. வா, போகலாம்"னார். அந்தப் பொண்ணைப் பாத்துட்டு மரியாதையோட லேசா சிரிச்சார். அவ குடுகுடுனு ஓரமா ஓடி ஜவனியை இழுத்து மூடி மறைஞ்சுக்கறா.

அவ அந்தண்டை போனதும், ராஜா கேக்கறார்: "நான் இங்கயே நின்னுண்டிருக்கேன். ரெண்டு பேரும் என்னைக் கவனிக்கலையா?". ராஜகுமாரன் வெக்கப்படறான்.

கொஞ்சம் தயங்கி அவன் கிட்டே வரார் ராஜா. "குமரா, அவ தேவகுலம். நாம மனுஷகுலம். சேராது கண்ணா. மறந்துடு. வா, போலாம்"னு சத்தமா, கர்டனுக்குப் பின்னாடி இருந்தவ காதுல விழும்படி சொல்லிட்டு புத்திரனை இழுத்துண்டு போறார்.

வாசல் கிட்டே போறப்போ, அவன் திரும்பிப் பாக்கறான். ஒரு பட்டுத்துணியை உடம்புல போர்த்திண்டு வெளில வந்து அவனையே பாத்துண்டிருக்கா. அவ கண் கலங்கியிருக்கு. அவனைத் துளைக்கறது. 'நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா?'னு பாடறாப்ல மாதிரி இருக்கு. அவன் நிக்கறான்.

அப்பா அவனைத் தள்ளி, "ம்..ம்"ங்கறார். அவரோட நடந்துண்டே, அவள் பக்கம் திரும்பி, கைய மட்டும் காட்டறான். 'சொந்தமான உள்ளம் போடும் கணக்குப் புரியுமே'னு பாடற மாதிரி இருக்கு. அவ கண்ணைத் தொடச்சுக்கறா.

ராஜாவுக்கு வலிக்கறது. இருந்தாலும், "குமரா, சொன்னாக் கேளு, வா போகலாம்"னு அவனை வலுக்கட்டாயமா இழுத்துண்டு போயிடறார்.

    லோகத்ல பாருங்கோ, பகுசாதாரணமான குணம் ஒண்ணு உண்டு. பால்யராகட்டும், போற வயசாகட்டும், சாமான்ய லக்ஷணம் என்னனு கேட்டேள்னா இதான்: எதைச் செய்யக் கூடாதுனு சொல்றமோ, அதைச் செய்யத் தோணும். எதை மறந்து போகணும்னு சொல்றோமோ, அதை சதா சர்வகாலமும் நினைக்கத் தோணும்.

அப்பா அவளை மறந்துடுன்னார். பையனோ அவளைத் தவிர, மிச்ச எல்லாத்தையும் மறந்துட்டான். சாப்பாடில்லே, தூக்கமில்லே. 'துளியாவது சாப்பிடேன்'னு வற்புறுத்தரா வேலைக்காரா. சாப்பாட்ல மாம்பழம் போட்டிருக்கா, அவளோட முகம் ஞாபகம் வரது. தேன்ல பலாச்சுளை கலந்து போட்டிருக்கா, அவளோட ரெண்டு உதடும் ஞாபகம் வரது. கேசரிப்பூ கலந்து சாதம் வடிச்சுப் போட்டிருக்கா, அவளோட சிரிப்பு ஞாபகம் வரது.

ஒண்ணும் பிடிக்காம வெளில போய் நடக்கறான். தோட்டத்து விருக்ஷமெல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு, அவளை மாதிரி. பக்ஷிக் கூட்டம் பாடறது, அவ குரலை ஞாபகப் படுத்தறது. ஆகாசம், அவளோட உடம்பை ஞாபகப் படுத்தறது. வட்ட நிலா அவளோட குசத்தை ஞாபகப் படுத்தறது. நெளிஞ்சு ஓடற சின்ன சரசெல்லாம் அவளோட இடுப்பை ஞாபகப் படுத்தறது. அங்கே இருக்கற ஜந்து, வஸ்து ஒண்ணொண்லயும் அவதான் வியாபிச்சிருக்காப்ல இருக்கு. நின்னா, நடந்தா,மூச்சு விட்டா அவதான் அவனுக்குத் தெரியறா.

அவ என்னடான்னா, அவனை விட பரமமா உருகிண்டிருக்கா. அமரத்வம் தேவ லக்ஷணமாச்சா, அதனால சாப்பாடு, தூக்கம் இல்லாதது பாதிக்கலை. ஆனா, அவனைப் பாத்தப்புறம் வேற எதையும் பாக்கப் பிடிக்காம கண்ணை மூடிண்டு அந்த்ர நயனமா, கண்ல ஜலத்தோட, அவனையே நினைச்சுண்டு இருக்கா. காதல், பக்தி ஆதங்கத்தோட வர்ற அழுகையை ப்ரசாக்தம்னு சொல்லுவா, அவனையே ஸ்லாகிச்சுண்டு அப்படி வந்த நேத்ரஜலத்தை, கீழே விழுந்துடப் போறதேன்னுட்டு ஒரு தங்கப் பாத்திரத்துல பிடிச்சு வச்சுக்கறா. அவ கண்ணீர்லயும் நெறஞ்சிருக்கானாம் அவன்.

அப்பா அம்மா தோழிகள்ளாம் சொல்லிப் பாக்கறா, அவன் சாதாரண மனுஷன் தானே, என்ன பெரிய விஷயம், மறந்துடுங்கறா. ஆனா, அவளால முடியலை. அவனையே நினைச்சுண்டு இருக்கா. அவனைப் பாத்தே ஆகணும், அவனைத் தொட்டே ஆகணும், அவனோட கையைப் பிடிச்சே ஆகணும், அவனோட முகத்தைக் கையால வருடியே ஆகணும், அவனோட தோள்ல சாஞ்சே ஆகணும், அவனோட மார்ல முகம் புதைச்சே ஆகணும், அவனோட முத்தம் தன் மேலே பட்டே ஆகணும், அவனோட கை தன் மார்ல தொட்டே ஆகணும், அவனோட ஸ்வாசம் தன்னோட முகத்துல விட்டே ஆகணும், அவனோட தேகம் ஸ்பர்சம் பண்ணியே ஆகணும், அவனோட சேந்தே ஆகணும்னு... ஏகத்துக்கு நினைக்கறா.

இது காதல் இல்லைன்னா, வேறே எது காதல் சொல்லுங்கோ? லோகாயதமான பொடி டப்பா திரும்பக் கிடைக்குமாங்கற கவலையே என்னால தாங்க முடியலே. ஆத்மார்த்தமான காதலை இழந்துட்டோமோனு ரெண்டு பேரும் எப்படித் துடிச்சிருப்பா! யோசிச்சுப் பாக்கக் கூட முடியலே.

அத்யந்த ப்ரேமை இருக்கு பாருங்கோ. விசித்ரமானது. இழந்துட்டா அப்புறம் வராது. அந்தக் கணம் தாண்டிட்டா ப்ரேமைக்கும் புடலங்காய்க்கும் வித்தியாசம் கிடையாது. இது ப்ரேமை, இது உயிரைச் செதுக்குற காதல்னு உணர்ந்து உடனே அதைத் தேடிப் போய்ப் பிடிச்சு உசிருக்குள்ள சேத்துடணும். இல்லேனா புடலங்கா வாசனையோட சாகற வரைக்கும் பெருமூச்சு விடவேண்டியது தான். இது நிறைய பேருக்குத் தெரியறதில்லே. தெரிஞ்ச சில பேர் செயல்ல இறங்குறதில்லே. ஆனா நம்ம ஹூரோயின் அப்படியில்லை. தேவப் பொண்ணுன்னாலும் புத்திசாலிப் பொண்ணாச்சே?

தன்னை மாதிரியே அவனும் இருக்கானா, மறந்துட்டானான்னு நினைச்சுக்கறா. ஏன் இன்னும் தன்னைத் தேடிப் பாக்க வல்லைனு நினைச்சுக்கறா. ஒரு வேளை தேவகுலம்னால வரலையோனு அவளுக்குத் தோணறது.

ஒரு முடிவுக்கு வரா. தேவாளுக்கு மனுஷாளை விடப் பவர் ஜாஸ்தியாச்சே, அதனால அதீத வித்தையெல்லாம் தெரிஞ்சிண்டிருக்கா. டக்குனு அவனோட அந்தப்புறத்துல வந்து நிக்கறா. அவளை மறந்து போயிருப்பான்னு நினைச்சு அங்க வந்தவ, அவனோட பரிதாப நிலைமையப் பாக்கறா. அங்கே அவனைத் தவிர வேற யாருமில்லையா.. டக்குனு அவன் கண் முன்னாடி தெரியறா.

அதிர்ந்து போன பிரதாபகுமாரன், அவளைப் பாத்ததும் பிரசன்ன குமாரனாயிடறான். ஓடிப் போய் கட்டிக்கறான். எப்படி இருக்கேனு கேக்கறான். 'இளைய கன்னியின் இடை மெலிந்ததோ'னு பாடறான். அவள் தலைல ஆரம்பிச்சு ஒரு இடம் பாக்கியில்லாம முத்தம் குடுக்கறான். அவளும் அவனோட வேகத்துக்கு ஏத்த மாதிரி வளஞ்சு குடுத்து வாஞ்சையா இருக்கா. போது போறது தெரியாம அன்யோன்யமா இருக்கா ரெண்டு பேரும்.

"இத்தனை நெருக்கமாயிட்டோம், உன் பேர் கூடத் தெரிஞ்சுக்கலையே, உன் பேர் என்ன?"னு கேக்கறான்.

"இப்பத்தான் கேக்கத் தோணித்தா?"னுட்டு சலீலமா அவனோட கன்னத்தைத் தட்டறா. "உனக்கு எப்படி கூப்பிடணுமோ அப்படி கூப்பிடேன்?"னு கொஞ்சறா.

அவனும் விடாம, "உன்னைப் பார்க்கறது இனிமை, உன் பேச்சைக் கேக்கறது மதுரம்"னுட்டு என்னென்னமோ பாஷ்யம் சொல்றான். அவ கலகலனு நவரத்னம் கொட்ன மாதிரி சிரிக்கறா. "உன்னைப் பார்த்துண்டே இருக்கணும் போலருக்கு"னுட்டு, "அதனால உன்னை ப்ரியதர்சனின்னு கூப்பிடறேன்"ங்கறான்.

"ப்ரியதர்சனி, எனக்கும் பிடிச்சிருக்கு"ங்கறா அவ.

உடனே அவன் அவளோட ரெண்டு கையையும் கோர்த்துண்டு தன்னோட இழுத்துக்கறான். முகத்தோட முகம் ஒரசிண்டு, "ப்ரியதர்சனி, நாம கல்யாணம் பண்ணி காலா காலத்துக்கும் ஒண்ணா இருப்போமா?"ங்கறான்.

"நாம் எப்படி கல்யாணம் பண்ணி ஒண்ணா இருக்க முடியும்? ரெண்டு பேரும் வேறே ஜாதியாச்சே?"னு கேக்கறா அவ.

அவன் ரொம்ப வருத்தமாயிடறான். அப்போ அவ லேசா சிரிச்சுக்கறா. "என் மேலே அவ்ளோ ஆசையா?"ங்கறா.

"உன்னை விட்டா, எனக்கு யார் மேலயும் ஆசையில்லே. என்னோட ஹ்ருதயத்துல நீதான் நெறைஞ்சுருக்கே"ங்கறான் அவன்.

"எங்கே காமி பாக்கலாம்?"னு வெளயாடறா அவ.

இவன் பித்துக்குளியாட்டம் உடனே ஒரு கத்தியை எடுத்து நெஞ்சைப் பொளந்து காட்டறான். ரத்தமா கொட்டறது. ஹ்ருதயம் அடிச்சுக்கறது. அவ பதறிப் போயிடறா. நல்ல காலம், தேவகன்னியா இருக்கறது வசதியா இருக்கு. அவனோட காயத்தைத் தொட்ட உடனே அது சரியாயிடறது. "விளையாட்டுக்குச் சொன்னா இப்படித்தான் முட்டாள்தனமா நடந்துப்பியா? பிராணன் போயிருந்தா என்னாகும்? நீ மனுஷகுலம்னு மறந்து போச்சா?"னு கோபத்தோட கேக்கறா அவ. கோபம் அடங்கி அவனோட தலைய வருடிக் குடுத்துண்டே அவன் முகத்தை மார்ல வச்சுக்கறா. ரெண்டு பேரும் சித்த நாழி பேசாம இருக்கா.

அவ சொல்றா: "இன்னிக்கு வெள்ளிக்கிழமை. கோவிலுக்கு வராப்ல வா. நீ என்னைப் பாக்கணும்னா இனிமே ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்னிக்கும் சாயரட்சைல கோவில் நிருத்யசாலைக்குப் பின்னால இருக்கற சிற்பக் கூடத்துக்கு யாருக்கும் தெரியாம வா, நாம் சேந்து இருக்கலாம்".

அவன் சரிங்கறான். சந்தோஷமா அவனைக் கட்டிக்கறா. பட்டுனு காணாமப் போயிடறா. சாயந்திரம் அவா ரெண்டு பேரும் அபிசாரகமா சிற்பக் கூடத்துல மீட் பண்றா. சந்தோஷமா இருந்துட்டு, மறு நாள் அவா அவா இடத்துக்குப் போயிடறா.

இப்படியாகத்தானே யாருக்கும் தெரியாம வெள்ளிக்கிழமை சாயந்திரத்துலந்து சனிக்கிழமை கார்த்தால வரைக்கும் அவா சந்தோஷமா இருந்துண்டிருக்கா. வெள்ளிக்கிழமை சாயந்திரம் கோவிலுக்குப் போற பழக்கம் அப்படி வந்ததாக்கும்.

    இது இப்படி இருக்கச்சே, பிரதாபராஜா சபைல இன்னொரு விசேஷம் நடக்கறது. நாலஞ்சு வாரமா ஒரே களேபரம்.

நோட்டீஸ் போர்ட்ல வேகன்சி என்ன போட்டிருக்கா, என்னென்ன உபாதிதம், க்வாலிவிகேஷன், போட்டிருக்கானு பாக்க தேவாள்ளாம் ஓடினப்போ, ஒரு மனுஷ்யனும் அவா பின்னாடி ஓடினான்னு சொன்னேனில்லையா?

அவன் அதெல்லாம் படிச்சுட்டு, நேரா பிரதாப ராஜனண்டை போய் சேவிதம் பண்ணிட்டு, "மகராஜா, மகாபிரபு, தேவசபைல என்ன நடந்ததுன்னு தெரியலை, ஆனா நாலாவது மூர்த்தி ஒருத்தரத் தேடி விளம்பரம் பண்ணியிருக்கா"னு சப்ஜாடா விவரம் சொன்னான்.

பிரதாப ராஜாவுக்கு இது நல்ல சான்சு, ஆனா எப்படி தேவனாறதுனு தெரியலையேன்னு வருத்தமா இருக்கு. ம்ருத்யுன்னாலே மனுஷ்ய ஜாதிக்குத் தான். தேவாள்ளாம் அமரத்வம் கொண்டவாளாச்சே, அவாளுக்கு எப்படி ம்ருத்யுவ மேனேஜ் பண்ணத் தெரியும், மானுட ஜன்மமாயிருந்ததாலே தனக்கத்தனை தெரியும், தானில்லையோ இந்த வேலைக்கு உசிதம்னு நினைக்கறார்.

உடனே தனக்குண்டான அத்தனை பௌருஷத்தையும் பயன்படுத்த நினைக்கிறார். அத்தனை செல்வாக்கையும் பயன்படுத்தப் பார்த்தார்.

பழைய தர்மராஜாவண்டையே போய் கேக்கறார். அவரோ "தார்மீகமா பாத்தா தேவாள் மட்டுந்தான் அப்ளை பண்ணனுங்கறது சரியில்லே. ஆனா என்னால் எதும் பண்ணமுடியாது"னு சொல்றார். "ஏன் வேலையை வேண்டாம்னீர்?"னு கேட்டார் பிரதாபன். "பின்னே என்ன ஓய்? அவாவா நல்ல நல்ல வாகனமா வச்சுண்டிருக்கா. நேக்கு மட்டும் எருமைமாட்டைக் கொடுத்திருக்கா"னு புலம்பறார். "தெனம் எருமைமாட்டுல ஏறிப் போனாத்தான் அந்த அவமானம் புரியும்"னுட்டு ஓனு அழறார். 'ஏது, இவர்ட்ட ஐடியா கேக்க வந்தோமே'னுட்டு ராஜா அந்த இடத்தை விட்டு ஜகா வாங்கினார்.

இந்த்ரன் கிட்டே பேசினார். இந்த்ரனுக்கு பொறாமை ஜாஸ்தியோன்னோ? தன்னைவிட ஸ்டேடஸ்ல பெரிய போஸ்டுக்கு கேவலம் ஒரு மனுஷ்யன் வந்துடுவானேங்கறது பிடிக்கலை. 'நரகத்துல குவார்டர்ஸ் எடுத்துண்டு தங்கணும், தினம் எண்ணெய் ஸ்டாக் எடுத்து கொப்பறைல விடணும்'னு இல்லாத ரீலெல்லாம் விடறார். பிரதாபன் அதைக் கேட்டு இன்னும் ஆசை ஜாஸ்தியானதைத் பாத்ததும் இந்த்ரன், "நான் போகணும், யாரோ மகரிஷியோட சாபம் என்னைத் துரத்திண்டு வரா மாதிரி இருக்கு.. வரட்டா?"னு பிச்சிண்டுட்டார்.

மகாவிஷ்ணு கிட்டே மனு போட்டார். நைசா நழுவுறதை மீனுக்கே கத்துக் கொடுத்தவராச்சே விஷ்ணு? "யப்பா பிரதாபா.. நான் அவசரமா ஒரு அவதாரம் எடுக்கணும்.. வந்தப்புறம் மொதல் வேலையா உனக்கு உதவி பண்றேன்"னுட்டு மாயமா மறைஞ்சுட்டார்.

சிவன் கிட்டே பேசினார். "ஐயா.. நீர் தானே செலக்சன் கமிட்டி சீஃப்? எனக்கு அந்த வேலையைக் குடும்னு" கேக்கறார். சிவனோ, "பிரதாபா... இது தேவாள் மட்டுமே அப்ளை பண்ண முடியும்.. வேறே ஏதாவது வரம் வேணும்னா கேளேன்? கொஞ்ச நாளா யாருமே என் கிட்டே வரம் கேக்கலை.. கை நம நமங்கறது"னுட்டு போயிடறார்.

பிரம்மா கிட்டே போனார். ஒரு தலை ஆசாமி கிட்ட பேசறதே கஷ்டமில்லையோ? இந்தாளுக்கு நாலு சிரசாச்சே? வேணும்னே, "யாரு... பிரதாபனா? குரல் பிரதாபன் மாதிரி இருக்கே? எங்கேப்பா இருக்கே?"னு ஒவ்வொரு தலையா மாத்தி மாத்திக் கேக்கறார். பிரதாபனும் சுத்தி சுத்தி வந்து அலுத்து போய்த் திரும்பிட்டார்.

பிள்ளையார்ட்ட போனார். நேரா விஷயத்துக்கு வந்தார். "ஓய் கணேசரே.. உமக்கு எத்தனை வண்டி வாழைப்பழம், கொழக்கட்டை வேணும் சொல்லும்.. லைஃப் டைம் சப்ளை பண்ணிடறேன்.. இந்த வேலையை எனக்குக் கிடைக்கும்படி செய்யும். மனுஷ்யனான எனக்குத்தான் மரணத்தைப் பத்தித் தெரியும். நான் சூபர் குவாலிஃபைடு, இருந்தாலும் இந்த வேலைக்கு அப்ளை பண்ண முடியலே.. நீர் மனசு வச்சா நடக்கும்.. நானும் உம்மை கவனிச்சுக்கறேன்"னுட்டு அட்வான்சா எட்டு சீர் ரஸ்தாளி, மூணு சீர் மொந்தன், நூத்தியெட்டு வெந்த கொழுக்கட்டை, நூத்தியெட்டு பொறிச்சதுனு சம்திங் தள்ளினார். பிள்ளையார் எல்லாத்தையும் வாங்கிண்டு, "உம்ம கர்மபலன் போலவே நடக்கும்"னுட்டு மூஞ்சூர் வேகத்துல காணாமப் போயிடறார். லஞ்சம் கொடுக்கறதுல இதான் சங்கடம். கார்யம் ஜெயமாகுமானு தெரியாது.

இப்படி நாலஞ்சு வாரமா பிரதாபன் அல்லாடறார். ஒவ்வோரு தேவாளாப் பாத்து அட்ஜஸ்ட் பண்ண நெனச்சு எதுவுமே நடக்கலே. அப்ளை பண்ண கடைசி நாளோ நெருங்கிண்டு இருக்கு. இந்த வேலையை எப்படியும் வாங்கியே தீரணும்னு வைராக்கியமா இருக்கார். அப்படித்தான் இருக்கணும் தெரியுமோ? ஒரு லட்சியம்னு ஒரு கோல்னு இருந்தா அதை அடைஞ்சே தீரணும்னு செயல்ல இறங்கணும். சும்மா ஆசைப்பட்டா போறாது. என்ன தடை வந்தாலும் அதை சுக்கலாப் பண்ணி, தான் விரும்பியதை அடையறவா தான் மனுஷா. மிச்சவாள்ளாம் ப்ராணனுள்ள ஜடமாக்கும்.

இத்தனை நாளா நேரடியா ருஜ்யுத்வமா முயற்சி பண்ணி எதுவுமே நடக்கலே. இனிமே, இன்டைரக்ட் அப்ரோச்ம்பா பாருங்கோ, அப்படி அதிபலமா ட்ரை பண்ணத் தீர்மானிச்சார். தேவாள் மட்டுந்தான் அப்ளை பண்ணமுடியுங்கறது பெரிய சிக்கல். இதை மீற ஏதாவது அடாவடி பண்ணினாத்தான் உண்டுனு தீர்மானமாத் தெரியறது பிரதாப ராஜாவுக்கு. அடாவடிச் சக்ரவர்த்தி யாருன்னு யோசிக்கறார். கிங் ஆஃப் தில்லுமுல்லுனா ஒருத்தர் தான் இருக்க முடியும். மகாவிஷ்ணுவைப் பார்க்கிலும் அழிச்சாட்டியக்காரர் உண்டோ? எத்தனை ப்ராடு பண்ணினாலும் பக்தாள் மனமுருகிப் போகலியோ? எப்படியாவது மகாவிஷ்ணுவை மடக்கிப் போட நினைச்சார் ராஜா. மகாலக்ஷ்மியைப் பிடிச்சா கார்யம் ஜெயமாகும்னு தோணறது. மகாலக்ஷ்மிக்கு ரெண்டு கிலோ குங்குமம் வாங்கிக் கொடுத்தா போறும், வசப்படுத்திடலாம்னு தெரியும்.

அன்னைய பஞ்சாங்கத்தைப் பாக்கறார். உருப்படாத தினப்பலன் ஏதோ எழுதியிருக்கு. அதுக்குக் கீழே கிழமையைப் பாக்கறார். வெள்ளிக்கிழமை. சாயந்தரம் வெளக்கேத்தி வச்ச எல்லார் ஆத்துக்கும் மகாலக்ஷ்மி ஃப்லையிங் விசிட் அடிப்பார்னு தெரியும். அப்புறம் விஷ்ணுவோட சேந்து கோவில்ல இருப்பார்னும் தெரியும். இன்னிக்கு மகாலக்ஷ்மி மூலமா விஷ்ணுவை மடக்கிட வேண்டியதுனுட்டு சேவகாளைக் கூப்பிட்டு உசந்த குங்குமமா நாலு கிலோ பார்சல் பண்ணச் சொல்றார்.

    இங்க இப்படி இருக்கச்சே, தேவ ஜாகைலயும் ஒரு அமர்க்களம் நடக்கறது. தேவ ஜாதின்னாலும் அவாளுக்கு கைக்காரியம் எல்லாம் பண்ண மனுஷ்ய ஜாதி ஆட்கள் தான். மனுஷ ஜாதியோன்னோ, அடுத்தவா சந்தோஷமா இருந்தா பிடிக்கலை. "பொண்ணு வெள்ளிக்கிழமை வந்தா காணாமப் போயிடறா, சிற்பக் கூடத்துல இன்னொரு மனுஷ்ய ஜாதி யுவனோட பாத்தேன்"னுட்டு ஒரு மனுஷ ஜாதி சேடிப் பொண்ணு கம்ப்லெயின் பண்ணிடறா.

நம்ம ஹீரோயினோட அப்பா தேவருக்குக் கோபம் பொத்துண்டு வர்றது. "யாரது?"ன்னு கேக்கறார். சேடிப் பொண்ணு பிரதாபகுமாரனைப் பத்தி எல்லாம் சொல்லிடறா. "இன்னிக்கு வெள்ளிக்கிழமை, இன்னிக்குப் போனேள்னா கையும் களவுமா பிடிச்சுடலாம்"னு சொல்லிடறா. ஒடனே அந்த தேவ தகப்பனாரும் கிளம்பறார்.

    கோவிலுக்கு வந்த பிரதாப ராஜா மகாலக்ஷ்மிக்காக வெயிட் பண்றார். அப்போ தன்னோட குமாரன் நைசா நழுவுறதைப் பாத்துட்டு, அவன் பின்னாடியே சிற்பக் கூடத்துக்கு வரார்.

அவன் என்ன பண்றான்னுட்டு ஒளிஞ்சு கவனிக்கறதுக்காக எடம் தேடறச்சே, அங்கே இன்னொரு ஆசாமி ஒளிஞ்சுண்டிருக்கறதைப் பாக்கறார். யாருன்னு பாத்தா, நம்ம ஹீரோயினோட அப்பா. "என்னய்யா, உன் பையன் அடிக்கற கூத்து!"னுட்டு எரைச்சல் போடறார், தேவப்பொண்ணோட தேவத்தோப்பனார்.

"எல்லாம் உம்ம பொண்ணோட வேலை, என் பையன் பரம சாதுவாக்கும்"ங்கறார் பிரதாப ராஜா.

"பரம சாது பண்ற வேலையை பாரும்"ங்கறார் தேவ தோப்பனார். ரெண்டு பேரும் உள்ளே பாக்கறா.

அங்கே பிரதாப குமாரன் ப்ரியதர்சனியோட வஸ்த்ரத்தையெல்லாம் அச்சிதம் பண்ணிண்டிருக்கான். அவஸ்த்ரமா, பிறந்த மேனியா, இருந்தாலும் ப்ரியதர்சனி அவனோட கை படற போதெல்லாம் வெக்கத்துல சொக்கிப் போறா. 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்'னு அவன் பாடறான். அவ முனகல்லே ம்யூசிக் போடறா. சித்த நாழிலே ரெண்டு பேரும், அப்ர்யம்னு சொல்வா, அதாவது காத்தை மட்டும் உடுத்திண்டு இருக்கறதுக்கு பேரு அப்ர்யம், அப்படி இருக்கா. பிரதாபகுமாரன் மடில, அவ கந்தர்வ வீணையா மாறிடறா. இன்னொரு க்ஷணம், ரெண்டு பேரும் மானா மாறி ஒத்தரை ஒத்தர் துரத்திண்டு ம்ருக காமம் கொண்டாடறா. இன்னொரு க்ஷணம் ப்ரியதர்சனி கைல பிரதாபகுமாரன் களிமண்ணா மாற, அவ சிற்பம் செதுக்கறா. இன்னொரு க்ஷணம் அங்கயே ஒரு சின்ன தடாகம் ஏற்பாடு பண்ணி, ரெண்டு பேரும் அன்னப் பக்ஷியா மாறி கூடிக்கறா. அடுத்த க்ஷணம், மறுபடி சாதாரணமா மாறி அவ மடில இவன் தலை வச்சுக் கொஞ்சறான். இப்படி க்ஷணத்துக்குக் க்ஷணம் ரெண்டு பேரும் அதியத்புத காமக்ரியைல இருக்கா.

முதிர்ந்த ரசிகருக்கான காட்சி ஆங்காங்கே தெரியறதைப் பாத்துட்டு கண்ணை மூடிக்கறார் பிரதாப ராஜா.

தேவ தோப்பனாருக்கோ ஆத்திரம் வந்து அவா ரெண்டு பேர் முன்னாலயும் கோபாவேசத்தோடு பிரசன்னமானார். "எம்பொண்ணையா இப்படிக் கலைக்கறே பாதகா!"னுட்டு, என்ன பண்றோம்னு தெரியாம பிரதாபகுமாரனை தலையைச் சீவிக் கொன்னுட்டார்.

நாழியாயிடுத்து பாருங்கோ. மிச்ச கதையை அடுத்தப் பரசங்கத்துல சொல்றேன்.

மிச்ச கதை

12 கருத்துகள்:

  1. அட ராமா...... ! இப்படி ஸ்வாரஸ்யமான கட்டத்திலே தொடரும் போட்டுட்டேளே!!!

    ஆமாம்..... உபன்யாஸசிரோமணி ஸ்வாமிகளே, ஏகப்பட்ட சினிமா பார்த்துண்டிருக்கேள் போல :-)))))

    பதிலளிநீக்கு
  2. அப்பாதுரை அவர்களே! மிகச்ச்சிறந்த நாடக ஆசிரியர் ஜெர்மன் நாட்டைச்செர்ந்த பெற்றோல் ப்ரெஸ்ட்..அவர் என்னுடைய நாடகத்தப் பார்த்துவிட்டு பார்வையாளன் உணர்ச்சி வசப்பட்டு நான் சொல்கிற சேதியை மறந்திடக்கூடாது என்று பர்வையாளனை அந்நியப்படுத்துவார்( Allinineation). நம்ம ஊர் கதாப்பிரசங்கிகள் அந்தக்காலத்திலேயே அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நீரும்---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  3. உபன்யாச சிரோன்மணி! ஒரு ஆட்டோ அனுப்பி வச்சிருக்கேன்..

    பதிலளிநீக்கு
  4. சரியான இடத்திலே தொடரும் போட்டுட்டீங்க. துளசி சொல்றதை அப்படியே ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு! :))))))

    பதிலளிநீக்கு
  5. முதிர்ந்த ரசிகருக்கான காட்சி - வார்த்தைப் பிரயோகத்தை மிக ரசித்தேன். அங்கங்கே ப்ரவசனத்தில் தெளித்துள்ள இனிமையான தமிழ்த் திரைப் பாடல்களும் அருமை. சரியான இடத்துல நிறுத்திட்டீங்களே... சீக்கிரம் தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  6. படித்தேன், ரசித்தேன் மீதியை தொடரக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா! என்னாவொரு கதை. செத்த சீக்கிரம் வாங்கோ. கதைய தொடருங்கோ.

    பதிலளிநீக்கு
  8. அட சீக்கிரம் வாங்கோ, கதையை தொடர்ந்தா, காணாம போன வெள்ளி டப்பாவை விட பெரிய வெள்ளி டப்பா பொடியோட உங்களுக்கு உண்டு....

    என்னமா வார்த்தைகளால கலக்கறேள்!

    பதிலளிநீக்கு
  9. அடே............................ங்கப்பா.
    அப்படியே சொக்க வச்சுட்டேள் போங்கோ.

    பதிலளிநீக்கு
  10. //"ஊர்வசி உன் உறவென்றால், ஏன் உன்னைப் போல அழகாக இல்லை?"னு ஒரு போடு போடறான் பிரதாபகுமாரன்.//

    சரியான போடு! 'விஷயம்' தெரிந்த லீலாவினோதனாய இருக்கிறானே இந்த பிரதாபகுமாரன்!

    வேண்டும் என்றே தெரிஞ்சே அங்கங்கே லஜ்ஜை, நேத்ர ஜலம் போன்ற வார்த்தைகளைத் தூவி வைச்சிருக்கிறது, அன்னியப்படாம பாந்தமா இருக்கு!

    //லோகாயதமான பொடி டப்பா திரும்பக் கிடைக்குமாங்கற கவலையே என்னால தாங்க முடியலே. ஆத்மார்த்தமான காதலை இழந்துட்டோமோனு ரெண்டு பேரும் எப்படித் துடிச்சுப் போயிருப்பா.. //

    எவ்வளவு உணர்தல்!

    //வெள்ளிக்கிழமை சாயந்திரம் கோவிலுக்குப் போற பழக்கம் அப்படி வந்ததாக்கும்...//

    இடுக்கிலே இப்படியும் ஒரு பொன்மொழி!

    இப்போதைக்கு இது.. பாக்கி அப்பாலே.

    அற்புதம், அப்பாஜி!

    பதிலளிநீக்கு
  11. திரும்பக் கெடச்சா அந்த வைத்தீஸ்வரபுத்ரன் அனுக்ரகம். கிடைக்கலேன்னா என்னோட கர்மபலன். எல்லாமே அப்படித்தான்//

    அவன் கை விரல் அவ உள்ளங்கைல படறது. ஊசி குத்தின மாதிரி வலிக்கிறது அவளுக்கு, அதே சமயம், சந்தனம் தடவின மாதிரி இதமாவும் இருக்கு.//

    ஊர்வசி உன் உறவென்றால், ஏன் உன்னைப் போல அழகாக இல்லை?"னு ஒரு போடு போடறான் பிரதாபகுமாரன்//

    எதைச் செய்யக் கூடாதுனு சொல்றமோ, அதைச் செய்யத் தோணும். எதை மறந்து போகணும்னு சொல்றோமோ, அதை சதா சர்வகாலமும் நினைக்கத் தோணும்//

    அவனையே ஸ்லாகிச்சுண்டு அப்படி வந்த நேத்ரஜலத்தை, கீழே விழுந்துடப் போறதேன்னுட்டு ஒரு தங்கப் பாத்திரத்துல பிடிச்சு வச்சுக்கறா. அவ கண்ணீர்லயும் நெறஞ்சிருக்கானாம் //

    லோகாயதமான பொடி டப்பா திரும்பக் கிடைக்குமாங்கற கவலையே என்னால தாங்க முடியலே. ஆத்மார்த்தமான காதலை இழந்துட்டோமோனு ரெண்டு பேரும் எப்படித் துடிச்சிருப்பா! யோசிச்சுப் பாக்கக் கூட முடியலே.//

    வெள்ளிக்கிழமை சாயந்திரம் கோவிலுக்குப் போற பழக்கம் அப்படி வந்ததாக்கும்.//

    லஞ்சம் கொடுக்கறதுல இதான் சங்கடம். கார்யம் ஜெயமாகுமானு தெரியாது.//

    தேவப்பொண்ணோட தேவத்தோப்பனார்//

    உப‌ன்யாச‌ம் ப்ர‌மாத‌ம்! காத்துண்டிருக்கோம்.

    பதிலளிநீக்கு
  12. ////ஒரு தலை ஆசாமி கிட்ட பேசறதே கஷ்டமில்லையோ? இந்தாளுக்கு நாலு சிரசாச்சே? வேணும்னே, "யாரு... பிரதாபனா? குரல் பிரதாபன் மாதிரி இருக்கே? எங்கேப்பா இருக்கே?"னு ஒவ்வொரு தலையா மாத்தி மாத்திக் கேக்கறார். பிரதாபனும் சுத்தி சுத்தி வந்து அலுத்து போய்த் திரும்பிட்டார்.

    கேனத்தனமா சிரிச்சேன் போங்க.. விட்டதையெல்லாம் படிச்சுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு