2011/12/29

ஸ்மரண யாத்ரை

(பெரிய) சிறுகதை


1 2 3 4 ◀◀ பூர்வத்துலே..

    "அந்தக் கமண்டலத்தை கீழே வைங்கோளேன்.. ரொம்ப நேரமா பிடிச்சிண்டிருக்கேள். கை வலிக்கப் போறது"ங்கறான் விஸ்வகர்மா. அவனோட பயம் அவனுக்கு.

"ஹ"ன்னார் கௌதமர்.

"என்னையும் மன்னிச்சிடுங்கோ"னு சாஷ்டாங்கமா கௌதமர் காலிலே விழுந்தா, தாழ்வார அகல்யா.

"அகல்யா மாதிரியே இருக்கே... நீ யாரா இருந்தாலும் தீர்க்கசுமங்கலியா இரும்மா"னுடறார் கௌதமர்.

இதான் சான்சுனுட்டு அவளும் எழுந்துண்டு, ""நான் ஸிந்து. இவரோட பார்யாள்"னுட்டு விஸ்வகர்மாவைக் காண்பிக்கிறா. "உங்க ஆசீர்வாதத்தை மறந்துடாதீங்கோ"னு கௌதமர் கிட்டே சொல்றா.

குழம்பிக் கிடந்த கௌதமருக்கு ஆத்திரமும் அவமானமும் சேர்ந்து இன்னும் பாடா படுத்தறது. விஸ்வகர்மாவையே பாத்துண்டிருக்கார்.

"பூலோகத்துல யாரோட ரூபத்தை எடுத்துக்கறதுன்னு நெனச்சப்போ... இருக்கறவாளிலே ஆதர்ச தம்பதிகளாப் பாத்து அவா ரூபத்தை எடுத்துக்கலாம்னு தோணித்து.. அப்படி யாராவது உண்டானு இவர் கிட்டே கேட்டேன்"னு சொல்றா ஸிந்து.

விஸ்வகர்மா சேந்துண்டான். "அதுக்கு நான் சொன்னேன்... அடி அசடே... நோக்குத் தெரியாதோ? கௌதம மகரிஷியையும் அகல்யாவையும் விட்டா ஆதர்ச தம்பதிகள், பூலோகமென்ன ஸப்த லோகத்லயும் கிடையாதே..?"

நன்னா ஐஸ் வைக்கறான். ஆமோதிக்கற மாதிரி ஸிந்து தலையை நாலு தடவை ஆட்டறா. மருமகள் தன்னைத்தான் கிண்டல் பண்றாளோனு பிரம்மாவுக்கு தோண்றது.. இருந்தாலும் கவனிச்சுக் கேக்கறார். விஸ்வகர்மா தொடர்ந்து சொல்றான். "மகரிஷி.. உங்களையும் அகல்யாவையும் பார்க்க ஸ்மரண யாத்ரை பண்ணி வந்தோம். குடிலுக்குள்ளே பாத்தா யாருமில்லே. அகல்யா கொட்டில்லே கோபூஜை பண்ணிண்டிருந்ததைப் பார்த்தோம். குடில் நிசப்தமா ஆளில்லாம இருந்துது. உங்க பாதம் பட்ட புண்ய பூமியா என்னனு தெரியலை, எங்களுக்கு உடனே உங்களை மாதிரி ரூபமெடுக்கணும்னு தோணித்து.."

"எல்லாம் உங்க மேலே இருந்த அதீத மரியாதையினாலே.. மன்னிச்சுடுங்கோ"னு முடிக்கறா ஸிந்து. "ஹிஹி"ங்கறான் விஸ்வகர்மா. மனசுக்குள்ளே அகல்யா சொல்லிக்கொடுத்த வசனம் எல்லாத்தையும் சரியாச் சொன்னோமான்னு கணக்கு போடறான். கௌதமர் கொஞ்சம் இறங்கின மாதிரித் தோண்றது அவனுக்கு.

'அவசரப்பட்டு சாபத்தை ஆரமிச்சுட்டோமே, முன்கோபத்தை காண்பிச்சுட்டோமே!'னு இருக்கு கௌதமருக்கு. முணுக் முணுக்னு கோவம் வந்தா இப்படித்தான். கண்மண் தெரியாமக் கோபம்னு சொல்வாளே, அது இது தான். என்ன பாக்கறோம் என்ன கேக்கறோம் என்ன செய்யறோம்னு யோசிக்காம, புரிஞ்சுக்காம கோபம் வந்துடுத்துன்னு வைங்கோ, அப்புறம் ரொம்ப சங்கடம் தான். 'கண்ணால் காண்பதும் பொய்'னு புலவர் சொல்லலியோ? 'அது கௌதமருக்கு எப்படிய்யா தெரிஞ்சிருக்கும்?'னு கேக்கறார் ஜிஎம்பி சார். வாஸ்தவம். விடுங்கோ.

முன்கோபத்தினாலே சகலத்தையும் கோட்டை விட்டுட்டோம்னு புரிஞ்சுண்ட கௌதமர், "ஸ்மரண யாத்ரை எந்த்ரமா? என்னய்யா கதை விடறே?"னு ஹீனமாக் கேக்கறார்.

"தோ பாருங்கோ"னுட்டு விஸ்வகர்மா அடுக்களையோரமா இருந்த குண்டத்தைக் காண்பிக்கறான். எடுத்துண்டு வரான். தப்பிச்சது யாரோட புண்யமோனு அவன் மனசு அடிச்சுக்கறது. சட்னு அதுல இறங்கி ஓடிப்போய்டலாமானு தோண்றது. ஆனா வித்வான் பாருங்கோ. வித்வான்களுக்கே உண்டான வித்யாகர்வம் அவனுக்கும் உண்டு. தன்னோட உன்னதமான எந்த்ரத்தை கதைனு சொல்றாரே கிழவர்னு நெனச்சுக்கறான். "கதையில்லை மகரிஷி. வாஸ்தவம்"னுட்டு குண்டத்துல இறங்கி வேறே வேறே ரூபத்துல குடில் முழுக்க ஸ்மரண யாத்ரை பண்ணிக் காட்டறான். அப்புறம் சுயரூபத்துக்கு வந்து, "உங்க பேர்ல இருந்த அலாதி பக்தியிலே.. ஒரு மோகத்துல அப்படி நடந்துண்டோம்.. மன்னிச்சுடுங்கோ"னு மறுபடி கெஞ்சறான். அவனுக்குத் தெரியும் சாபம் கொடுக்க கௌதமருக்குப் பவரில்லேனு.. இந்த்ரன் மேலே சாபம் கொடுக்க ஆரம்பிச்சாச்சே? சாப சக்தி எல்லாம் இன்னொத்தருக்கு நான்-ட்ரேன்ஸ்பரபில் இல்லியோ? அதனால கொஞ்சம் மூச்சு வந்தாலும், எதுக்கும் இருக்கட்டுமேனு மன்னிப்பு மேலே மன்னிப்பா கேட்டு வைக்கறான். விட்டா போறும்னு இருக்கு அவனுக்கு உள்ளுக்குள்ளே. அகல்யா முன்னாடி இந்த்ரன் வேஷம் போட்டதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்னு நெனச்சுக்கறான்.

அசல் அகலிகை கௌதமர் காலில் விழறா. "முனி ஸ்ரேஷ்டரே. உங்க தவபலனைக் கட்டுப்படுத்தறதுக்கு என்னை பிரம்மா இங்கே அனுப்பிச்சார். இங்கே வரதுக்கு முன்னாலயே இந்த்ரன் மேலே எனக்குத் தீராத காதல். உங்க நிழல்லே இருக்குற வரைக்கும் உங்க தர்மத்துக்கும் மானத்துக்கும் புறம்பா நான் ஒரு நாளும் நடக்கலே. உங்க தபோபலனை கட்டுப்படுத்துற நேரம் வந்தாச்சுங்கறதினாலே இப்போ இதெல்லாம் நடக்கறது. இனிமே நான் உங்க பத்னியா மனுஷ்ய ரூபத்துலே இருக்க முடியாது. எனக்கு தேவரூபத்துல என் வழியில போறதுக்கு அனுமதி குடுங்கோ"னு கேக்கறா.

பிரம்மாவும் "இதுக்கெல்லாம் காரணம் நான்தான். உங்களோட முன் கோபத்தைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். உங்க தபோபலன் அதீதமாகி எங்கே இந்த்ரபதவிக்குப் பங்கம் வந்துடுமோனு முன் ஜாக்ரதையா நடந்துக்க வேண்டியதா போச்சு. அதனால அகல்யாவை உண்டாக்கி... இதெல்லாம் என்னோட நாடகம்னாலும் இது என் தொழில் தர்மம். மன்னிச்சுருங்கோ"னு சொல்றார்.

கௌதமருக்கு நன்னா ஏமாந்துட்டோம்னு கடுப்பா இருக்கு. "இந்த எந்த்ரத்தை வச்சுத்தானே நீங்களெல்லாம் என்னை ஏமாத்தினேள்? இனிமே இந்த எந்த்ரம் தேவாளுக்குப் பயன்படாம போகட்டும்"னு சொல்லிடறார். அகல்யை தேவலோகத்துக்குப் போறதைப் பத்தியெல்லாம் அவர் கவலைப்படலே. முன்கோபத்துலே எல்லாத்தையும் இழந்துட்டோமேனு மட்டுமே அவருக்கு வருத்தம். 'சே!'னு ஆயிடுத்து. "இருந்தாலும் இந்த சாபத்தை நான் கொடுத்தே ஆகணும்.. இப்ப என்ன பண்றது?"னு கேக்கறார் பிரம்மா கிட்டே.

"நீங்க இந்த்ரனை கர்த்தாவாக்கி சாபம் கொடுக்க ஆரம்பிச்சதுனாலே, இந்த்ரன் தான் இதுக்கு ஒரு முடிவு சொல்லணும். அவனுக்குத் தான் சாபவலயத்துக்கு உரிமையிருக்கு"னு சொல்றார் பிரம்மா. இந்த்ரனைப் பார்த்து சாபவலய, அதாவது சாபத்தை திசை திருப்ப, யோசனை உண்டானு கேக்கறார்.

இந்த்ரனுக்கு உள்ளுக்குள்ள ஒரு சின்ன பயம் இருந்ததை இப்போ சொல்லியே ஆகணும். விஸ்வகர்மா மாதிரி ஆட்கள் சட்னு தன்னைப் போல வேஷம் போட்டு எல்லாரையும் ஏமாத்த முடியறதுன்னா, இந்த எந்த்ரத்துனாலே ஆபத்து வரத்தான் செய்யும்னு நெனச்சுக்கறான். இதல்லவோ வெபன் ஆப் மாஸ் டிஸ்ட்ரக்ஷன்னுட்டு ஒரு காரியம் பண்ணினான். பொதுவாவே வெபன் ஆப் மாஸ்டிஸ்ட்ரக்ஷன்னு சொல்றவா எல்லாருமே அவசரப்படறா.. அரைலூசா இருக்கா.. ஏன்னு தெரியலே. பாருங்கோ, அமெரிகாவிலே புஷ்ஷு பண்ணின கார்யம்.. சும்மாவானும் ஈராக்கோட ஒரு யுத்தத்தை உண்டுபண்ணி.. தேவையா சொல்லுங்கோ. நம்ம ஊர் கூடங்குளக் கதையாட்டம். பிரச்னை என்னனு நன்னா தெரிஞ்சுண்டு அதுக்கேத்த மாதிரி ஒரு உபாயத்தை.. சித்தியை செஞ்சு முடிக்க வேண்டாமோ? கூடங்குளத்தை இழுத்து மூடுனு சொல்றது கண்மூடித்தனம் இல்லையோ? இந்த்ரனுக்கும் அந்த மாதிரி ஒரு மைன்ட்லெஸ் இன்செக்யூரிடினு வைங்கோ. எந்த்ரத்தையே ஒழிச்சுடணும்னு நெனச்சான்.

கௌதமர் கிட்டே, "மகரிஷி.. உங்க சாபசக்தியை இந்த எந்த்ரத்து மேலே காண்பிச்சுடுங்கோ"னு சொல்லிடறான். கௌதமரும் எத்தனை நாழி கமண்டலத்தைக் கையிலயே பிடிச்சுண்டிருப்பார்? சரியாப் போச்சுனுட்டு சாபசக்தியை இந்த்ரன் கிட்டேயிருந்து திசை திருப்பி எந்த்ரத்து மேலே காண்பிச்சார். கமண்டலத்துலேந்து நாலு சொட்டு தண்ணியைத் தெளிச்சு "கல்லாப் போ!"னு சாபம் கொடுத்தார்.

சாபசக்தியை உள்வாங்கின எந்த்ரம் உருமாறிடுத்து. எந்திரம் இருந்த இடத்துலே குட்டியானை சைசுலே இப்போ ஒரு பெரிய பாறாங்கல் இருக்கு. விஸ்வகர்மாவுக்கு அழுகை தாங்கலை. தன்னோட மாஸ்டர்பீஸ் வேஸ்டாயிடுத்தேனுட்டு வேதனை. எப்பேற்பட்ட எந்திரம் இப்படி காதலுக்காக அடிபட்டு உருத்தெரியாமப் போயிடுத்தேனு புலம்பறான்.

கௌதமருக்கே பாவமாயிடுத்து. என்ன பண்றதுன்னு தெரியலை. "பிற்காலத்துலே ஜனங்கள் எல்லாம் என்னை முட்டாள்னு சொல்வாளே?"னு அவரும் புலம்ப ஆரம்பிச்சார்,

அப்போ பிரம்மா சொல்றார். இங்லிஷ்லே ஸ்பின் டாக்டர்ம்பா பிரம்மா மாதிரி ஆட்களை. ஏதாவது சேதி கட்டி ஏமாத்தற வித்தை தெரிஞ்சவா. "மகரிஷி. ஜனங்களைப் பத்திக் கொஞ்சம் கூட கவலைப்படாதீங்கோ. நாம அதுக்கு ஏதாவது கதை கட்டி விடுவோம். பாருங்கோ, அகலிகை தான் இந்தக் கல்லா மாறினாள்னு சொல்லிக் கதைகட்டி விடுவோம். முட்டாள் ஜனங்க தானே.. எல்லாம் கண்மூடிகள்.. எதைச் சொன்னாலும் நம்பிடுவா.. பாருங்கோ இதுக்காக ஒரு விரதம் ஒரு பூஜைனு வேறே பண்ணுவா பாருங்கோ. இதுக்கப்புறம் உங்க முன்கோபமும் போயிடும் பாருங்கோ.. இது தான் உங்களுக்குப் பாடம்"னு சொல்றார். கௌதமருக்குத் த்ருப்தியா இருக்கு.

விஸ்வகர்மா இன்னும் புலம்பிண்டிருக்கான். பிரம்மா அவன் கிட்டே போறார். "குழந்தே.. போனாப் போறது விடு. புத்திசாலிப் பெண்கள் கிட்டே நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும். இதான் உனக்குப் பாடம். இதே மாதிரி இன்னொண்ணு செஞ்சுக்கோ. விஷ்ணு கூட ஒண்ணு வேணும்னு ஆர்டர் கொடுக்கறதா சொன்னார்"னு ஏதோ சொல்லி அவனை சமாதானப் படுத்தறார். அவன் விசும்பிண்டே இருக்கான். பிரம்மா மேலும் சொல்றார். "மகனே விஸ்வகர்மா.. உனக்கு ஒரு வரம் தரேன். இந்த கல் ஒரு நாள் வெடிக்கும். கவலைப்படாதே. அதுக்குள்ளே இருக்கற ஸ்மரண யாத்ரை எந்த்ரம் வெளிவரும். இன்னொரு காதல் ஜோடியை சேர்த்து வைக்க உதவியா இருக்கும்"

"என்ன ஜோடி?"ங்கறான் விஸ்வகர்மா.

"அது ஒரு கதை. நடக்கபோற கதை. இப்ப சொல்ல முடியாது. அந்த ஜோடியை சேத்து வைக்க ஒருத்தர் கடல் தாண்ட வேண்டியிருக்கும், நெனச்ச நேரத்துல மூலிகை மலையைத் தேடிப் போக வேண்டியிருக்கும்.. அதுக்கெல்லாம் தோதுப்படும் இந்த எந்த்ரம். இந்த இடத்துக்கு அந்தக் கதையோட நாயகன் வந்ததும், இன்னொரு மகரிஷி அதை ரகஸ்யமா சொல்வார்"னு சொல்றார். தன்னோட எந்த்ரம் இன்னொரு காதல் ஜோடியைச் சேர்த்து வைக்கும்னு தெரிஞ்சுண்டு விஸ்வகர்மா அடங்கறான்.

"என்னை சித்தே தனியா இருக்க விடுங்கோ"ங்கறார் கௌதமர்.

இந்த்ரனும் அகல்யாவும் கை கோத்துண்டு கிளம்பிட்டா. பிரம்மாவும் ஐராவதத்துலே லிப்ட் கேட்டுண்டுக் கிளம்பிட்டார். "சீக்கிரம் கெளம்புங்கோ. கிழம் மனசை மாத்திக்கப் போறது"னு கிசுகிசுக்கறா ஸிந்து. விஸ்வகர்மாவும் கெளம்பறான். திரும்பத் திரும்பப் பாத்துண்டே போறான்.

மகோன்னதமான அவனோட எந்த்ரம் இருந்த இடத்துலே இப்போ ஒரு மகாப் பெரிய கல் இருக்கு.

    "இதான் நடந்த கதை"னு சொல்லிட்டு என்னைப் பார்த்தார் மாமா.

'ஆ!'னு வாயப் பொளந்துண்டிருந்தேன். ஆத்துக்காரியும் மாமியும் உள்ளே நன்னா தூங்கிண்டிருக்கா. கர்காரரவம் அதாவது குறட்டை சப்தம் திண்ணைல கேக்கறது. நடுஜாமத்துக்கு மேலே ஆயாச்சு. பக்கத்துல எங்கயோ சுவர்கோழி கத்தறது. ஆகாசத்துல நாலஞ்சு நட்சத்திரம் மினுக்கறது. ரொம்ப தூரத்துல தெருநாய் ஒண்ணு ஊளையிடறது. அதை விட்டா நிசப்தம்னா நிசப்தம்.

நேக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. "என்ன இப்படி.. ஒரேயடியா மாத்திட்டேளே? அகல்யாவை ஸ்மரணம் பண்ணினா பாவம் போகும்னில்லையா சொல்லியிருக்கு? எப்பேர்பட்ட பாவவிமோசன புண்யக் கதையை... ரஜினிகாந்த் சினிமா சயன்ஸ் பிக்சன் மாதிரி மாத்திட்டேளே?"னு கேட்டேன்.

"ஓய்! பாவபுண்யம் வினாசம் சம்ரக்ஷணம் எல்லாம் அவாவா இஷ்டத்துக்குக் கட்டினது ஓய். அகலிகையை தெனம் ஒரு தரம் நெனச்சுக்கோ பாவமெல்லாம் போயிடும்னு சொல்றது நமக்கே ஒருமாதிரியாப் படலியோ? அகலிகையை ஸ்மரணம் பண்ணிப் பாவம் போய்டும்னா தெனம் பாவம் பண்ணிண்டிருக்கலாம்னும் அர்த்தம் ஆறதே ஓய்? ஜனங்கள் கண்மூடிகளா இருக்கற வரைக்கும் இதையெல்லாம் நம்பிண்டிருப்பா"னு சொன்னார்.

நேக்கு விட்டுக் கொடுக்க மனசில்லை. "யுகக் கணக்கா ராமாயணம் பாராயணம் நடக்கறது. ராமபிரான் பாதம்பட்டு அகலிகை விமோசனம் அடைஞ்சதை பக்தியோடே லோகம் முழுக்கச் சொல்லிண்டிருக்கா. நீர் என்னமோ நேர்ல பார்த்த மாதிரியில்லே எந்த்ரம் மந்த்ரம்னு சொல்றீர்? யார் கண்மூடினு தெரியலியே?"னேன்.

"ஓய்! எல்லாம் தெரிஞ்சு தான் சொல்றேன். அனுமார் கடலைத் தாவினார் மலையைத் தாவினார்னு சொல்றேளே? அதெல்லாம் எப்படி நடந்ததுனு நெனக்கறேள்? ராம லக்ஷ்மணருக்கு அகல்யா கதையைச் சொன்ன விஸ்வாமித்ரர் ராமனைத் தனியா அழைச்சுண்டு போய் விவரமெல்லாம் சொன்னார். பையா ராமா.. இதையெல்லாம் ஞாபகம் வச்சுக்கோ. நாளைக்குத் தோதுப்படும்னு சொன்னார். ரகஸ்யத்தை ராமன் யாருக்கும் சொல்லலே. ஆஞ்சநேயருக்கு மட்டும் சொல்லிக் கொடுத்துடறான்.. ராம பட்டாபிஷேகம் முடிஞ்சதுக்கப்புறம், தன்னோட ரகஸ்யம் வேறே யாருக்கும் தெரியக் கூடாதுங்கறதுனால ஆஞ்சநேயர் எந்த்ரத்தை தலையை சுத்தி தூக்கி எறிஞ்சுட்டார்.."

விட்டா ராமாயணத்தையே மாத்திடுவார் போலத் தோணித்து. "நிறுத்தும் ஓய்!"னு கொஞ்சம் சத்தமா சொன்னேன். "சுவாரசியமா இருந்தாலும், நீர் சொல்றது எதுவுமே நம்பறதுக்கில்லே"னுட்டேன்.

சித்த யோசிச்சுட்டு, "எந்த்ரத்தைப் பாத்தா நம்புவீரோ?"னார் நாலு பக்கமும் பாத்துண்டே. "அனுமார் எறிஞ்ச எந்த்ரம் க்ருஷ்ணாபுரம் கோவில் பூமியில தான் விழுந்துது. இன்னும் அங்கயே தான் இருக்கு எந்த்ரம். வேணும்னா எங்கூட வாங்கோ. காட்டறேன்"னு சொன்னார். சட்னு எழுந்து போய் ஒரு டார்ச் லைட்டு எடுத்துண்டு வந்தார். "ஓய்.. வாரும் போலாம். விடிஞ்சா பஸ் பிடிச்சு ஊரைப்பார்க்கக் கெளமபிடுவீர். இனிமே இந்தப் பக்கம் வருவீரோ மாட்டீரோ.. இப்பவே போய்ப் பார்க்கலாம் வாரும். போய்ட்டு அரை மணியில திரும்பிடலாம். எங்கிட்டே சாவி இருக்கு"னார்.

என்னோட ரிஸ்ட்வாச்சிலே மணி ஒண்ணரை. "ஓய்! அர்த்தராத்ரி மணி ரெண்டாப்போறது.. இப்போ எதுக்கு?"னேன். வயத்துல புளியைக் கரைச்சு விட்டாப்ல இருக்கு. பேசாம இவர் சொன்னதை நம்பினதா சொல்லிடுவோமானு தோணித்து. இருந்தாலும் ஒரு விபரீத ஆசை. "சரி"ன்னுட்டேன்.

கோவிலுக்குப் பக்கத்துல தான் வீடுங்கறதாலே பத்து நிமிஷத்துக்கெல்லாம் கோவிலுக்குப் போயிட்டோம். வடக்கு வாசல்லே ஒரு சின்ன கதவு. இவர் பாட்டுக்குத் திறந்து உள்ளே போனார். என்னையும் வான்னார். பயந்துண்டே போனேன். வீரப்ப நாயக்க மண்டபத்தை தாண்டிப் போறச்சே யானைகளுக்கு உயிர் வந்தா மாதிரி தோணித்து. அவர் டாக்கு டாக்குனு நடக்கறார். இந்தப்பக்கம் அந்தப்பக்கம் திரும்பாமே நானும் அவர் பின்னாலே போனேன். புருஷமிருகம் தூண் கிட்டே வந்து நின்னார். நாலு பக்கமும் பார்த்தார். "ஈ காக்கா இல்லை ஓய்.. என்ன பாக்குறீர்?"னு சொன்னேன். சட்னு தரையில விழுந்து தூணும் தரையும் தொடற இடத்துலே தடவினார்.

தரை நகந்து கதவாட்டம் தொறக்கறது. பயத்துல நேக்கு மூச்சே நின்னுடும் போலருக்கு. இவரோ, "வாரும்"னுட்டு என்னை இழுக்கறார். கீழே இறங்கினேன். க்ருஷ்ணாபுரம் கோவில்லே சுரங்கம் இருக்குனு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இப்பத்தான் மொதல் தடவையா பாக்கறேன். மாமா கதவைச் சாத்திட்டு என்னைக் கூட்டிண்டு நடக்கறார். டார்ச் லைட்டு வெளிச்சம் பயப்பிராந்தியை ஜாஸ்தி பண்ணித்தே ஒழிய குறைக்கலை. ஒரு நிமிஷமோ என்னமோ நடந்திருப்போம். "அதோ பாரும் ஓய்!"னு லைட் அடிச்சுக் காண்பிச்சார். சின்ன ஹோமகுண்டம் மாதிரி இருக்கு. சுத்திவர ஸ்படிகம் மாதிரி பளபளனு இருக்கு. "இதான் ஓய்.. ஸ்மரண யாத்ரை எந்த்ரம். சாக்ஷாத் விஸ்வகர்மா நிர்மாணம் பண்ணினது. அகல்யாவோட காதல் நிறைவேறவும் ராமாயணம் சுபமா முடியவும் காரணமானது"னு சொன்னார்.

"நேக்கு வேர்க்கறது ஓய்!"னேன். எதுக்கு சொன்னேன்னு தெரியலை. உளறினேன். அங்கேந்து போனாப் போறும்னு ஆயிடுத்து.

அவரோ விடமாட்டேங்கறார். "ஓய். இதுல இறங்கி ஏதாவது ரூபத்துல எங்கயாவது ஸ்மரண யாத்ரை பண்ணிட்டு வாரும். அப்பத்தான் நம்புவீர்"னு சொல்றார். "பயப்படாம இறங்கும்வே".

நேக்கு சப்தநாடியும் ஒடுங்கியாச்சு. "வேண்டாம் சுவாமி"னு அவரை கும்பிட்டேன். "உங்களை நம்பறேன். ஆத்துக்குப் போலாம் வாங்கோ"னு கெஞ்சினேன்.

"இல்லை ஓய். நீர் என்னை நம்பலைனு தெரியறது. சரி. நானே போய்க் காட்டறேன்"னு உள்ளே இறங்கினார். ரெண்டாவது நொடியிலே ஆளைக்காணோம்.

நடுக்கம்னா என்னன்னே அன்னிக்குத் தான் தெரிஞ்சுண்டேன். அர்த்த ராத்ரியிலே க்ருஷ்ணாபுரம் கோவில் சுரங்கத்துலே கூட இருந்த மனுஷரைக் காத்துலே பறி கொடுத்துட்டு.. நேக்கு எப்படி இருந்திருக்கும்னு நெனச்சுப் பாருங்கோ!

ரெண்டு நிமிஷம் கழிச்சு பிராமணர் குண்டத்துலேந்து ஏறி வந்தார். சர்வ சாதாரணமா "காஞ்சிபுரம் போய்ட்டு வந்தேன்"னார். அவர் கைல என்னவோ மினுக்கறது. என்னன்னு பாத்தா மூக்குத்தி மாதிரி இருக்கு. "வேணும்னா எடுத்துக்கும். ஞாபகார்த்தமா வச்சுக்கும் ஓய்!"னார். "வேண்டாம் சுவாமி. நேக்கு நம்பிக்கை வந்தாச்சு. கெளம்பலாம்"னேன். சிரிச்சுண்டே "சரி, வாரும்"னார்.

அன்னிக்கு ஆத்துக்கு வந்தும் தூக்கமே வரலை. ரெண்டு நாளைக்கு நடுக்கமே நிக்கலைனா பாத்துக்குங்கோ.

இதான் ஸ்மரண யாத்ரை ப்ரதாபம். கேட்ட அத்தனை பேருக்கும் நல்ல புத்தி கிடைக்கும். முன் கோபம் கொறையும். ஸ்த்ரீகள் மேலே மதிப்பு உண்டாகும். மழை பிடிக்கறதுக்கு முன்னாலே கெளம்புங்கோ. பொறுமையா கேட்டதுக்கு ரொம்ப சந்தோஷம். சித்தே இருங்கோ.. சிவகுமாரன் என்னமோ கேக்கறார்.

என்ன இப்படிக் கேட்டுட்டேள்? நான் பார்த்தது, "ஸ்மரண யாத்ரை எந்த்ரம்னு எப்படித் தெரியும்? மாமா எங்கயாவது சுரங்கத்துல ஒளிஞ்சுண்டிருக்கலாமே?"னு கேக்கறார். நன்னா நறுக்குனு கேட்டார். பாருங்கோ.. நான் அதுலே இறங்கிப் ப்ரயாணம் பண்ணினாலொழிய அனுபவபூர்வமா சொல்ல முடியாது தான். ஆனா, கண்ணால பார்த்ததோட நிக்காமே கொஞ்சம் தீர விசாரிச்சிருக்கேன். நம்பிக்கையா சொல்றேன், கேளுங்கோ.

கதையை ஆதியிலிருந்து கேட்டவாளுக்கு விருத்தாசலம் கோவில் பத்தி நியூஸ் ஐடம் சொன்னேனே ஞாபகமிருக்கோ? பக்கத்தாத்து மாமாவோட அநித்ய உத்யோகம் பத்தியும் அவா ஆத்துல சகல பாத்ரங்களும் வெள்ளினும் சொன்னேனே ஞாபகம் இருக்கோ? சாப்பாட்டுக்கு முந்தி மாமாவோட பேசிண்டிருக்கச்சே அவா குடும்பத்து போட்டோவையும், அவரோட அண்ணா தம்பி எல்லாருமே குருக்கள்னு குடும்ப விவரங்களைப் பேசினதையும் சொன்னேனே ஞாபகமிருக்கோ?

சித்தே பொறுமையா கேளுங்கோ. எல்லாத்துக்கும் முடிச்சு இருக்கு. விருத்தாசலம் குருக்கள் 'தான் ஊர்லயே இல்லை'னு கோர்ட்டுல சொன்னார்னு சொன்னேனில்லையா? பேப்பர்ல விருத்தாசலம் குருக்கள் போட்டோவைப் பாத்ததும் நேக்கே ரொம்ப ஷாக்காயிடுத்து. பாருங்கோ, மாமா காமிச்ச குடும்ப போட்டோவிலே அவரோட அண்ணா பாக்கறதுக்கு அசப்பிலே விருத்தாசலம் குருக்களாட்டமே இருந்தார். இப்போ எல்லாத்தையும் நீங்களே முடிச்சு போட்டுப் பாருங்கோ, புரியும்.

ஸ்மரண யாத்ரை சாத்யம். க்ருஷ்ணாபுரம் கோவில் சுரங்கத்துலே எந்த்ரம் இருக்கு. இது அசுவத்தாமன் வாக்கு. அசத்யம் இல்லாத வாக்கு. ப்ரசங்கம் சமாப்தம். போய்ட்டு வாங்கோ.



18 கருத்துகள்:

  1. முடிச்சுப்புட்டீங்களா....ததாஸ்து லேகியம் மாரி இதையும் எடுத்து வந்து பிசினஸ் பண்ணியிருக்கக் கூடாதோ...! சாபத்துலயும் ஆள் மாறாட்டத்துலயும் ட்விஸ்ட்டு மேல ட்விஸ்ட்டு...கெளதமருக்கு இங்கிட்டும் அங்கிட்டும் திரும்பித் திரும்பி கழுத்தே வலிச்சிருக்கும் பாவம்! நடுவிலே புஷ்ஷு, கூடங்குளம்....சரிதான்...எப்படி இருந்த கதையை என்னமா மாத்திப்புட்டீங்க சாமி....அபாரத் திறமை...தலை வணங்கறேன்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஸ்ரீராம். கதையை மாத்திட்டதுல வருத்தமா உங்களுக்கு? கவலைப்படாதீங்க.. கதைக்கு ஒண்ணும் ஆவாது :)
    இது போன்ற வளவள நவ்ரதன் குருமா கதைகள் எழுதவும் படிக்கவும் சிரமமானவை. படிச்சதுக்கு நன்றி.
    ஒரு வாரமா blogger தகராறுல லேட்டாயிடுச்சு. திடீர் திடீர்னு காணாம போயிட்டிருந்துச்சு.. உங்களுக்கு அது மாதிரி ஏதாவது பிரச்னை இருந்துச்சா?

    பதிலளிநீக்கு
  3. //ஒரு வாரமா blogger தகராறுல லேட்டாயிடுச்சு. திடீர் திடீர்னு காணாம போயிட்டிருந்துச்சு.. உங்களுக்கு அது மாதிரி ஏதாவது பிரச்னை இருந்துச்சா?//

    இங்கே எப்பவுமே ப்ராப்ளம்தான்...!! :))

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள அப்பாதுரை( அசுவத்தாமன் )நானும் எவ்வளவோ கதைகள் படித்திருக்கிறேன்.இந்த மாதிரி கற்பனையும் நடையும் ...எங்கேயோ போய் விட்டீர்கள். எங்கேயோ தொடங்கி எல்லாவற்றுக்கும் முடிச்சிட்டு, மூலக் கதையே தோற்கும் அளவுக்கு எழுதுவது, HATS OFF TO YOU SIR.!

    பதிலளிநீக்கு
  5. G.M.BALASUBRAMANIAM சார்! விடாமல் படித்ததற்கும் விரும்பிப் பாராட்டியதற்கும் மிகவும் நன்றி!

    பதிலளிநீக்கு
  6. அருமை, அருமை, வேறு என்ன சொல்ல?

    பதிலளிநீக்கு
  7. யப்பா . மழை பெய்ஞ்சு ஓஞ்ச மாதிரி இருக்கு. என்ன ஒரு நடை. கற்பனை .இந்திரனின் ஐராவதத்தில் ஏறி ஒரு வலம் வந்த மாதிரி(??!!) ஜிவ்வுன்னு இருக்கு.

    தங்கள் திறமைக்கு தலை வணங்குகிறேன் அப்பாஜி.

    பதிலளிநீக்கு
  8. வியக்க வைக்கிறது உங்கள் கற்பனையும், எழுத்து நடையும். கடைசி வரை சுவாரசியம் சற்றும் குறையாமல் இருந்தது. அழகான முடிவு! வாழ்த்துக்கள்!

    எல்லோருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. 'கன்னாபின்னா'ன்னு எழுதறேளே))

    பதிலளிநீக்கு
  10. அருமையான, வித்தியாசமான கற்பனை; சரளமான உபன்யாச நடை. காவியத்துக்கும் பங்கம் வராமல் கற்பனைக்கும் வஞ்சனை செய்யாமல் சூப்பராக போனது கதை.
    உங்களுக்கும், மூன்றாம் சுழி வாசகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. இப்ப தமிழில் இப்படி கலந்து கட்டி எழுத யாராலும் முடியாது ... தமிழ் பத்திரிக்கைகள் எப்படி உங்களை பிடிக்காமல் விட்டுவைத்திருக்கிறார்கள் என்பது ஆச்சர்யம் ..

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ..உங்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ...

    பதிலளிநீக்கு
  12. இன்னும் கதை படிக்கலப்பா...

    கதை படிச்சு எழுதுவேன்பா...

    மனம் நிறைந்த அன்பு புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்....

    பதிலளிநீக்கு
  13. மனமார்ந்த வாழ்த்துக்கள் அப்பாதுரை!

    வம்சி சிறுகதை போட்டியில் உங்களின் 'யுக புருஷன்' கதை இரண்டாம் பரிசை வென்றிருக்கிறது. மிகவும் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  14. சூடாமுடி முன்னுரை படித்தேன். சரித்திர நாவல் என்று ஆவலைத் தூண்டிவிட்டீர்கள். உங்கள் முத்திரையை அதிலும் பதிப்பீர்கள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. நன்றி Expatguru, சிவகுமாரன், meenakshi, bogan R (ஆளையே காணோமே?), geetha santhanam, பத்மநாபன், மஞ்சுபாஷிணி,...

    பதிலளிநீக்கு
  16. கர்காரரவம் அதாவது குறட்டை சப்தம் //

    நல்ல பெயர் தான் குறட்டைக்கு.

    எங்கேயோ போயிட்டீங்கனு எல்லாரும் சொல்லிட்டாங்க. எங்கேயும் போகலை; கதைகளின் மூலம் எல்லார் மனசிலேயும் இடம் பிடிச்சுட்டீங்க. என்ன ஒரு அபாரமான எழுத்துத் திறமை. எல்லாத்தையும் சரியான விகிதத்தில் கலந்து கொடுத்திருக்கீங்க.

    அதென்ன வம்சி போட்டி? அப்புறம் சூடாமுடி?? இதெல்லாம் எதிலே வருது??

    நல்லா இருக்குனு சொல்றது வெறும் வார்த்தை.

    பதிலளிநீக்கு
  17. கடைசியிலே ட்விஸ்ட் இருக்கும்னு எதிர்பார்த்திருந்தேன் என்றாலும் இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்கலை. :)))))))

    பதிலளிநீக்கு
  18. தொடர்ந்து படிச்சதுக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றி கீதா சாம்பசிவம்.

    சூடாமுடினு ஒரு சரித்திரப் பின்புலக் கதை ஒண்ணு எழுத ஆரம்பிச்சிருக்கேன். எத்தனை நூற்றாண்டு சரித்திரம் நம்ம நாட்டுல.. சும்மா விடலாமா சொல்லுங்க? moreover, ஓசில கதைக்கான plot கிடைக்குதே?

    பதிலளிநீக்கு