2011/09/05

ஒருமனம்




1 2 3 ◀◀ முன் கதை

    னோகரன் சென்னைக்குத் திரும்பி வந்த ஒன்றிரண்டு மாதங்களில் மறுபடி நிலாவிடமிருந்து சுருக்கமாய் ஒரு கடிதம் வந்தது:
'உடனே வா, எதுவும் சொல்ல முடியாத நிலை. உடனே வராவிட்டால், நீ வரும் போது நானிருக்க மாட்டேன். தேட வேண்டாம். உன் எதிர்காலம் ஒளியுடன் விளங்கட்டும்'

கடிதத்தைக் கடுப்புடன் ஒதுக்கி வைத்தான். என்ன சொன்னாலும் தெரியவில்லையே இந்தப் பெண்ணுக்கு? நிலாவுக்கு எதுவும் நேர்ந்திருக்காது என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வேலையிலும் பணம் சேர்ப்பதிலும் கவனமாக இருந்தான்.

அதற்குப் பிறகு அவளிடமிருந்து கடிதமோ தந்தியோ வரவில்லை. இடையே அவனுக்குப் பதவி உயர்வு வரும் போலிருக்க, வேலையில் கவனமாக இருந்தான். அவன் எழுதிய கடிதங்கள் எதற்கும் நிலாவிடமிருந்து பதில் வராததால் கோபமாக இருக்கிறாள் என்றிருந்து விட்டான். பதவி உயர்வுக்கான குறிக்கோளுடன் வேலையில் கவனமாக இருந்தான். ஒன்றரை வருடங்களில் அவனுக்குப் பதவி உயர்வு கிடைத்து, ஊரருகில் அவனது நிறுவனத்தின் கிளைக்கு மேலதிகாரியாக மாற்றலாகி வந்தான்.

சேர்த்த பணத்தில் நிலாவுக்கு ஒரு தங்கச் சங்கிலியும் அவளுக்குப் பிடித்த நீல நிறத்தில் ஒரு பட்டுச் சேலையும் வாங்கிக் கொண்டு ஊருக்குப் போனான். ஊரில் இறங்கியதும் நேராக நிலாவின் வீட்டுக்குப் போனான்.

தலையில் இடி விழுந்தாற்போலிருந்தது. நிலாவைக் காணோம். அவள் வீடு பூட்டியிருந்தது. வீட்டுக்கு வந்து விவரம் கேட்டான் அம்மாவிடம்.

"அவ அம்மாவுக்கு கேன்சர் வந்திருச்சாம். அவள் அப்பாவும் வியாபாரத்தில் எக்கச்சக்க கடன் வாங்கி எல்லாம் நஷ்டமாம்.. என்ன விவரம்னு தெரியலைபா.. ஏதோ தில்லுமுல்லு செஞ்சார்னும் சொல்லிக்கிறாங்க.. போலீஸ்காரங்களும் கடன்காரங்களும் ஒரு நாள் வந்திருந்தாங்களாம்.. நம்ம பாலகணபதி மவன் சொன்னாரு. அவமானம் தாங்காம ஊரை விட்டே போய்ட்டதா சொல்றாங்கபா"

மனோகரன் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தான். மயக்கம் வரும் போலிருந்தது. 'நிலா! நிலா!' என்று அவன் மனம் அலறியது.

"ஒரு வருஷமாகவே எல்லாம் தெரியுமாம், நிலா தான் எதுவும் சொல்லாம இருந்திருக்கா. ஒரு நாள் ராத்திரி இங்கே வந்தா. ராத்திரி முழுதும் உன் ரூமிலே இருந்துட்டு.. அப்பப்ப விசும்பி விசும்பி அழுதுகிட்டே இருந்தாப்பா, பாவம்.. காலையில போயிட்டா. என்ன கேட்டாலும் பதில் சொல்லாம போயிடுச்சுபா. அதுக்குப் பிறகு அவங்களை குடும்பத்தோட காணோம்பா"

மனோவுக்குப் பொறி தட்டியது. நிலா தன்னை அடிக்கடி அழைத்தது இதற்காகத்தானா? ஆறுதல் துணை தேடி அழைத்தவளை ஒதுக்கிவிட்டதற்காகத் துடித்தான். "இல்லம்மா. நிலா என் கிட்ட சொன்னா. நான் தான் புரியாம இருந்துட்டேன். இப்ப எங்கே போனா தெரியலியே?" அவனுக்கு அழுகை வந்தது. அடக்கிக் கொண்டான்.

"அந்த தாஸ் கிட்டே போய்க் கேள், அவங்க கிட்டதான் கடன் வாங்கியிருந்தாங்க. அவன் கூட நிலாவைக் கட்டிக்கிறதா சொன்னானாம்".

வெறியுடன் பன்னீர் வீட்டுக்கு ஓடினான். பன்னீரிடம் நிலாவைப் பற்றிக் கேட்டான்.

பன்னீர் நிதானமாகச் பேசினான். "மனோ, நான் நிலாவை விரும்பியதென்னமோ உண்மை தான். ஆனா அவள் உன்னைத் தவிர வேறு யாரையும் நினைக்கக்கூட மறுத்துவிட்டாள். விருப்பமில்லாத அவளுடன் எனக்கென்ன வேலை? நிலாவோட அம்மாவுக்கு வியாதி முத்திப் போகத் தொடங்கிடுச்சு.. அவங்கப்பா செஞ்சது பெரிய ப்ராடு. எங்க குடும்பத்துல கடன் வாங்கி எங்களையே ஏமாத்தப் பாத்தாரு.. மாட்டிக்கிட்டாரு. அது முக்கியமில்லே. நிலா அப்பா அம்மாவோடு எங்கே போனாளோ யாருக்குத் தெரியும்? நான் உதவி செய்றதா எவ்வளவோ சொல்லியும் என்னிடமிருந்து பணம் வாங்க மறுத்துட்டா" என்றான்.

மனோகரன் நிலாவுடன் ஏற்பட்ட ஊடல்களைச் சொல்லி, பணம் சேர்ப்பதில் கவனமாக இருந்ததைச் சொல்லி வருந்தினான். "பன்னீர்... ஏதாவது அட்ரெஸ் இருந்தா... தயவு செஞ்சு.. கொடுத்து உதவி செய்.. நிலா இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லை". மனோகரனின் குரல் நடுங்கியது.

பன்னீர் அவனை சற்றுப் பரிதாபமாகப் பார்த்தான். "இவ்வளவு காதல்னு சொல்லுறே, அவளைப் பாதுகாக்கத் தெரியலையே உனக்கு... அவ எங்கே போனானு எனக்குத் தெரியாது. உண்மையிலேயே எனக்கு ஒரு அக்கறையும் இல்லை. உன்னைத் தவிர யாரையும் மனசுல கூட வர விடமாட்றா நிலா.. தப்பா நினைக்காதே மனோ, நீ அவளுக்குத் தகுதியானவன் தானானு உன்னையே கேட்டுக்க. என்னை மன்னிச்சுரு. காலம் போனா திரும்பி வராது மனோ. காதலும் அப்படித்தான்"

தன் இதயத்தைத் துளைத்தெடுத்து, பருந்துக்குத் தீனி போட்டிருக்கலாம் போலிருந்தது மனோகரனுக்கு. அந்தச் சொற்கள்!

நிலா தன்னிடம் உதவிக்கும் வராமல் விவரமும் சொல்லாமல் மறைந்தது,வேலை நிமித்தமாக சுய நலத்தோடு தான் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதனாலென்று உணர்ந்து மனம் நொந்தான் மனோ. நிலாவைத் தேடிப் பிடிக்கத் தீர்மானித்தான். தன் வேலை மேல் வெறுப்பாக இருந்தது. வேலையை உதறித் தள்ளினான். ஒன்றிரண்டு மாதங்கள் அவள் வேலை பார்த்த வங்கி, பக்கத்து ஊர்கள் என்று பல இடங்களில் சுற்றித் தேடினான்.

சொல்லி வைத்தாற்போல் அம்மாவும் அடுத்த சில மாதங்களில் நோய் வந்து காலமானதும், வெறுத்துப் போய் ஊரை விட்டுக் கிளம்பினான். பல நகரங்களுக்குச் சென்று தேடினான். செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தான். விவித்பாரதியில் விளம்பரம் கொடுத்தான்.

கடைசியில் கையிலிருந்த பணமெல்லாம் செலவழிந்து, நிலாவையும் எங்கேயும் சந்திக்க முடியாமல் போய் வாழ்க்கையை வெறுக்கத் தொடங்கிய நேரத்தில் அவனுடைய நண்பர் ஒருவர் அவனுக்கு பிரபல கம்பெனியில் வேலை வாங்கிக் கொடுத்தார். விற்பனைக்காக ஊர் சுற்றும் வேலை என்றதால் நிலாவைத் தேட முடியும் என்ற நம்பிக்கையுடன் ஏற்றுக் கொண்டான். கோவை, சென்னை, விசாகப்பட்டினம், மும்பை, தில்லி, ஸ்ரீநகர் என்று எங்கெங்கோ சுற்றினான். எங்கேயாவது எப்பொழுதாவது நிலாவைப் பார்க்க மாட்டோமா என்கிற தணியாத ஏக்கம்.

பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் தற்செயலாய் நிலாவைப் பார்த்தான்.

    சாம்ராட் மதுக்கூடத்தில் அக்கம்பக்க மேசைகளில் இருந்த நாலைந்து பேரும் கதை கேட்கக் கூடிவிட்டார்கள். பொன் சார் கண்கள் சிவக்கக் கதை சொல்லிக் கொண்டிருந்தார்..

"நிலாவை எங்கே சார் பார்த்தான் மனோ?" என்று நான் கேட்டதும் "இன்னும் இரண்டு ஸ்காச் சொல்லு" என்றார்.

"போதும் சார்" என்ற என்னை முறைத்தார். "ஸ்காச் சொல்லுடா, எனக்குத் தெரியும் போதுமா வேண்டாமா என்று".

"இல்ல சார், எதாவது சாப்பாடு சாப்பிடலாம் சார்" என்றேன்.

"டேய், நான் எப்ப சாப்பிடணும்னு எனக்குத் தெரியும்டா.. போடா, போய் விஸ்கி கொண்டுவரச் சொல்லு போ" என்று அதட்டினார்.

ஸ்காச்சும், கூடவே இருக்கட்டும் திட்டினாலும் பரவாயில்லை என்று முட்டை புர்ஜி, சப்பாத்தி, கோழி தக்காளி குருமா, தயிர்சாதம் என்று எல்லாருக்கும் சாப்பிடுவதற்கும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தேன். சாப்பிடாமல் ஒரேயடியாகக் குடித்துக் கொண்டிருந்தால் வயிறு என்னாவது?

"அப்புறம் என்ன சார் ஆச்சு? சொல்லுங்க" என்றான் குழுவில் ஒருவன்.

விஸ்கியை ஒரே வாயில் விழுங்கிவிட்டு முகத்தைப் பத்து கோணலாக்கியபடியே கனைத்தார் பொன். பிறகு சப்பாத்தியில் புர்ஜியைப் போட்டுச் சுருட்டி, கோழி குருமாவில் தோய்த்துச் சாப்பிட்டுக் கொண்டே தொடர்ந்தார். இடையே என்னைப் பார்த்து "டேய், நீ நல்லா இருக்கணும்டா" என்றார்.

    மனோவுக்கு முப்பத்தைந்து வயதுக்கு மேலாகிவிட்டது. இன்னும் ஊர் ஊராய்ச் சுற்றும் வேலை. நிலாவை மறக்க முடியாத நிலையில், ஊர் சுற்றும் வேலை கொஞ்சம் உதவியாகவும் ஆறுதலாகவும் இருந்தது. புது இடங்கள். புது மனிதர்கள்.

சிகந்தராபாதில் வேலையாயிருந்த போது உடன் வேலை பார்த்த சிமியுடன் பழகத் தொடங்கினான். பத்து வருடங்களுக்கு மேலாக எந்தப் பெண்ணுடனும் பழகாத மனோகரனுக்கு சிமியின் நட்பு ஆறுதலாயிருந்தது. ஆறேழு மாதங்களாகப் பழகினாலும், நட்புக்கு மேல் போக மனம் வரவில்லை. மனோகரனால் நிலாவை மறக்க முடியவில்லை. ஆனால், சிமி நட்பைத் தாண்டி மேலே செல்ல விரும்பினாள்.

ஒரு நாள் மாலை டேங்க்பன்ட் பாலத்தில் இருவரும் பொழுது போக்காக மேலும் கீழும் நடந்தபடிப் பேசிக்கொண்டிருந்து விட்டு, பழச்சாறுக் கடையெதிரே புல்தரையில் கீழிறங்கிச் சரிவில் அமர்ந்தார்கள். மனோ சிமியிடம் நிலாவைப் பற்றிய விவரம் எல்லாம் சொல்லிவிட்டு, தன்னால் நண்பனாக மட்டுமே இருக்க முடியும் என்றான்.

"மனோ, எவ்வளவு நாள்..நாள் கூட இல்லே.. எவ்வளவு வருஷமா.. இப்படி தனிமையில் வருத்தப்பட்டுக்கிட்டிருப்பே? வி நீட் டு மூவ் ஆன்.."

மனோ அவள் மனம் புண்படாமல் சிரித்தான். "அதான் சொன்னேனே, இன்னும் ஏழு பிறவிக்கு என் உயிர் நிலாவுக்கு சொந்தம்" என்றான் விரக்தியுடன்.

"முட்டாள்தனம்னு நான் சொல்லித்தான் உனக்குத் தெரியணுமா?" என்று அவன் கன்னத்தில் தட்டினாள்.

"இருக்கலாம். அந்த முட்டாள்தனத்தில் ரெண்டு உயிர்கள் மூச்சு விட்டது எனக்கு நல்லா தெரியும். அவளுக்குக் கொடுத்த இடத்தை இன்னொருவருக்குக் கொடுக்க முடியல சிமி. என்னை மன்னிச்சுடு. நாம நண்பர்களாக இருப்போமே?"

"என்னை இந்த மாதிரி ஒருத்தர் காதலிக்க மாட்டாரானு ஆசைப்படத் தோணுது. குட்லக் அன்ட் குட்பை... என் இனிய.. நண்பரே" என்று எழுந்த சிமி அவன் கன்னத்தில் சிக்கனமாய் முத்தமிட்டபோது, நிலாவைத் தற்செயலாகப் பார்த்தான் மனோகரன்.

பாலத்தையொட்டி, சற்றுத் தள்ளி இருந்த கூரை வேய்ந்த இன்னொரு பெரிய பழச்சாறுக்கடை வாசலில் நின்றபடி, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா.

உயரே தெரிவது நிலாவா? சுனாமியில் சிக்கியது போல் உணர்ந்தான் மனோ. உயரே தெரிவது தன்னுடைய உயிரே தான்!

நிலைக்கு வந்தபோது சிமி அருகில் இல்லை. எழுந்து ஓடினான். நிலாவுக்கு வெகு அருகே வந்ததும் சட்டென்று நின்றான். இரண்டு கைகளிலும் பழச்சாறுடன் கடையுள்ளிருந்து வந்த ஒருவன், நிலாவிடம் ஒரு கோப்பையைக் கொடுத்துவிட்டு அருகே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். "உக்காரு நிலா" என்று நிலாவின் கையைப் பிடித்து இழுத்தான்.

ஏமாற்றத்துடனும் என்ன சொல்வதென்று புரியாமலும் நின்றான் மனோ. "நிலா" என்றான் தீனமாக.



தொடரும்

►►

10 கருத்துகள்:

  1. என்ன ஆகுமோன்னு ஒரு வேகத்துல மனசு பட படக்க, கட கடன்னு படிச்சுண்டே வந்தா சரியான இடத்துல தொடருன்ம்னு போட்டு இப்படி படுத்திடீங்களே! சீக்கிரமா அடுத்த பதிவை போட்டுடுங்க!
    மனோவோட மனநிலைக்கு ஏற்றவாறு மிகவும் பொருத்தமான பாடல் வரிகள்.

    பதிலளிநீக்கு
  2. மனம் படபடக்க கதை படித்துக்கொண்டே வந்தேன்.. இப்படி உயிராக இருக்கும் நிலா.... காதல் தன்னை தேடி வந்தப்ப கூட அதை ஒதுக்கிவிட்டு ஒரு முறை செய்த பிழையை மறுமுறை தொடரவிரும்பாத மனோ....

    சேர்த்துவைத்திருக்க கூடாதா இருவரையும் என்ற ஏக்கம் மனதில் ஏற்படுவதை தடுக்கமுடியவில்லை...

    கதையின் கடைசி வரி படிக்கும்போது அதிர்ச்சி ஆகிவிட்டது...

    தொடரும் போட்டு படிப்பவர்களை திணற வெச்சிட்டீங்களேப்பா...

    சேர்த்துடுங்களேன் நிலாவையு மனோவையும்...

    தன் உயிரை விட அதிகமா நேசித்த இருவரும் ஒன்று சேரனுமே இயல்பாய் இறையை வேண்டுகிறது மனம் இது கதை என்று நம்பமுடியாமல் நிஜம் தானோ என்ற பயத்தில்...

    அருமையாக கதை கொண்டு செல்கிறீகள் அப்பாதுரை....

    அடுத்து என்னாகுமோ என்று திக் திக்...

    அன்பு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. அய்யய்யோ அந்தப் பையன் யாருண்ணு தெரியலையே
    பேசாம நிலாவை பார்த்தேன்னு சொல்லி இன்னும் பாட்டில்
    வாங்கிவரச் சொன்ன இடத்திலேயே கதையைநிறுத்தி இருக்கலாமோ
    ஒருமனம் போகிற போக்கு மனம் ஒரு நிலையில் இல்லை..
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து

    பதிலளிநீக்கு
  4. வெள்ளைக் காகிதமாயிருந்த இவன் மனதில் அவள் பெயரை எழுதிச் சென்றவளை மறுபடி பார்க்கிறான். ஏதோ சோக திருப்பம் போல....பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லாசெப்டம்பர் 06, 2011

    நல்லாயிருந்தது...அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  6. நிலா நிலா வென மனோவின் துடிப்பு வெளியே தெரிந்துவிட்டது... நிலாவின் துடிப்பும் பல மடங்கு இருந்திருக்கும் .. இந்த திசை மாற்றத்தை மனோ எப்படி தாங்குவானோ...

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. லேட்டாயிடுச்சு மொதலாளி!

    கதையையா என்னமாய் நகர்த்திச் செல்கிறீர்கள் அப்பாதுரை! நிலாவை எனக்கும் பார்க்க வேணும் போல் இருக்கிறது..

    உங்கள் டச் இனிமே தான் வரப்போகுதுன்னு எனக்கு தெரியும்..

    9/07/2011

    பதிலளிநீக்கு
  9. காலம் போனா திரும்பி வராது மனோ. காதலும் அப்படித்தான்"//

    நிலா கிடைத்ததா??

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லாசெப்டம்பர் 10, 2011

    நிலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே.

    பதிலளிநீக்கு